Saturday 17 October 2020

படம் பார்த்து கதை சொல்.

சமீபத்துல நம்ம ஜி அவரோட  சொத்து மதிப்பை வெளியிட்டிருக்காரு.  அவரோட சொத்து மதிப்பு முப்பத்தாறு லட்சம் கூடியிருக்காம்.  அவரு ரொம்ப புத்திசாலித்தனமா அவரோட முதலீட்டை கையாண்டதால அந்த மதிப்பு கூடிருக்குன்னு இந்த National Tamil Daily அப்படின்னு தன்னைத் தானே புகழ்ந்துக்குற அந்த செய்தித் தாள் சொல்லிருக்கு.  தன்னோட சொந்த முதலீட்டை அப்படி வளத்தவரு ஏன்யா நாட்டோட பொருளாதாரத்தை அம்போன்னு விட்டுட்டாருன்னு கேக்கக்  தோணுது.  ஆனா, அந்தக் கேள்வி இந்த பதிவோட நோக்கமில்லை.  மேலும், தன்னோட சொத்து மதிப்புல  அவரு அந்த மயிலு, வாத்து பத்தியெல்லாம் ஒண்ணும் சொல்லல.  அதைப் பத்தி கேக்குறதும் நோக்கமில்லை.  பின்ன எதைப் பத்தி இந்த பதிவுன்னா........

இப்பம் கொஞ்ச நாளைக்கு முன்னால OTT ல வந்து, விமரிசனம் பண்ணுறோம்கிற எல்லோரும் அடிச்சுத் தொவச்சு தொங்க விட்ட க/பெ ரணசிங்கம் அப்படிங்கிற திரைப்படம் பத்தி ஒரு சில வார்த்தைகள் பேசலாம்னு,

ஒரு தோழர் இந்த படத்தை ஒரு முஸ்லீம் நாட்டுக்கு எதிரான, இந்துத்துவ ஆதரவு திரைப்படம்னு சொல்லிருந்தாரு.  ஆனா, அவரு சொன்ன மாதிரி அந்த நாட்டுக்கு எதிரான எந்த கருத்தும் அந்த திரைப்படத்துல சொல்லல.  அந்த விபத்து நிகழ்ந்த எண்ணெய் கிணறு முஸ்லீம் நாட்டுல இருக்கிறதா சொல்லப்பட்டாலும், அதோட மொத்த நிர்வாகமும் பெரியண்ணன் அமெரிக்காகிட்ட இருக்கிறதாதான் சொல்லிருக்காரு அந்த கதை சொல்லி. ஒரு காட்சியில இந்திய தூதரக அதிகாரியா வர்ற கதாபாத்திரமும் அப்படித்தான் சொல்லுது. அதுவுமில்லாம இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால, ஒரு முஸ்லீம் நாடு தன்னோட நாட்டை சேர்ந்த, அரசுக்கு ஏதிரான கருத்து சொல்லிட்டு வந்த ஒருத்தர தூதரகத்துல வச்சே கொலை செய்ஞ்சதா வந்த செய்தியையும் நாம கவனத்துல எடுத்துக்கணும்.  மொத்தத்துல, அது எந்த அரசாங்கமும் தனக்கு எதிரான எந்த கருத்தையும், ஆதாரத்தையும் ஒடனே அழிக்கறதுல மும்முரம் காட்டும் அப்டிங்கிறதுல மாற்றமில்லை.  சமீபத்திய இந்திய உதாரணம் ஹத்ராஸ்.

இந்த எடத்துல அந்த திரைப்படத்தோட கதையை சுருக்கமா பாத்துட்டா, மேற்கொண்டு படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் புரியும்.  இந்த நம்ம கீழத்தூவலூர்  இருக்கே - அதாங்க நம்ம ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவலூர். அந்த ஊருக்காரரு ரணசிங்கம் கொஞ்சம் சம்பாதிச்சு, தன்னோட குடும்பத்தை பொருளாதார ரீதியா முன்னேத்திரணும்னு வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு போறாரு.  அங்க நடந்த ஒரு விபத்துல அவரு செத்துப் போறாரு.  அவரோட உடம்பும் கிடைக்காத நிலையில, அங்க நடந்த விபத்தை ஒத்துக்கிட்டா பெரிய அளவுல நஷ்ட ஈடு குடுக்கணும்ங்கிறதால, என்னன்னவோ பொய்யச் சொல்லி உடல் குடுக்கிறத தவிர்க்கப் பாக்குது அந்த எண்ணெய் நிறுவனம்/அமெரிக்க நிறுவனம்.  ஆனா, ரணசிங்கத்தோட மனைவி அரியநாச்சி கணவரோட உடலை வாங்குறதுக்கு நடத்துற போராட்டம்தான் கதை.  (மக்களே, கொஞ்சம் நீளமாத்தான் போகுது பதிவு.  ஆனா வேற வழியில்லை.  கொஞ்சம் பொறுமையா படிங்க)

அரியநாச்சி போற எடத்துல எல்லாம் - அது சென்னையானாலும், டெல்லியானாலும் - அவுங்களுக்கு உதவி பண்ணுறதுக்கு யாராவது இருக்காங்களே எப்படி;  அது சினிமாத்தனமா இருக்கு அப்படிங்கிற விமரிசனங்களை தாண்டி வேற ரெண்டு காட்சிகளை மட்டும் பாக்கணும் அப்படின்னு தோணுது.  நம்ம ஊறுகா மாமியும், ஜியும் அரியநாச்சிக்கு உதவி(?) பண்ணுறதா காட்சி அமைச்சிருக்காரு கதை சொல்லி.  இந்த ரெண்டு காட்சியும்தான் ஒருவேளை இந்த திரைப்படம் சங்கி ஆதரவு திரைப்படமோ அப்படிங்கிற சந்தேகத்தைக் கிளப்புது.  கொஞ்சம் உன்னிப்பா பாத்தா அந்தக் காட்சி ரெண்டும் வஞ்சப்புகழ்ச்சி பாணியிலே அமைச்சிருக்காரு இயக்குனர்.  உதாரணமா ஊறுகா மாமியோட convoy  முன்னால போயி விழுகுது இந்தப் புள்ள அரியநாச்சி.  ஊறுகா மாமி அந்தப் புள்ளயோட ஒரு selfie எடுத்து ட்விட்டர்ல செய்தி போடுறாங்க.  ஏம்பா, அவங்களே ஒரு ஒன்றிய/மத்திய அமைச்சர்;  அவங்க நேரடியா சம்பந்தப்பட்ட அமைச்சர்கிட்ட பேசினா என்ன அப்படின்னு ஒரு சாமானியனான என் மூளைக்கே தோணுது.  ஆனா, மாமிக்கு அவங்களுக்கான விளம்பரம்தான் முக்கியமே தவிர, அரியநாச்சியோட கோரிக்கையை நிறைவேத்துற நோக்கமே இல்லைங்கிற உண்மையை இங்க மறைமுகமா சொல்லிருக்காரு கதை சொல்லி.

அணையை திறந்து வைக்க வர்றாரு நம்ம ஜி.  அங்க தன்னந்தனியா - மன்னிக்கணும் - கைக்குழந்தையோட போராட்டத்துல இருக்குது இந்தப் புள்ள.  ஏம்பா, ஜி மாதிரி ஒரு தலைவரு வாராரு;  பாதுகாப்பு ஏற்பாட்டுல இவ்ளோ பெரிய ஓட்டையான்னு கேக்கப்பிடாது.  மஹாபலிபுரத்துல, அவரு எடுக்கணும்னே குப்பையை போட்டு வச்சவய்ங்கதானே நம்ம சங்கிகளோட மனோபாவம். 

இந்தப் புள்ளைக்கு உதவி பண்ணுறதுக்காக, அங்கேயே ஒரு நாற்காலி போட்டு உக்காருறாரு நம்ம ஜி.  ஒடனே, நம்ம ஜி அவ்ளோ நல்லவரா; இல்ல சங்கி பிரச்சாரமா அப்படின்னு எல்லோருக்கும் தோணும்.  எனக்கும் தோணுச்சு.  உண்மையில நம்ம ஜிக்கு ஒரு கேமரா பாத்தாலே கை, கால் நகராது;  அது முன்னால நின்னு போஸ் குடுக்க ஆரம்பிச்சுருவாரு.  இங்க பாத்தா, எத்தனை கேமரா இருக்குது;  அந்த ஒவ்வொரு கேமரா லென்சுக்கு பின்னாலயும் எத்தனை கோடி கண்ணு பாத்துக்கிட்டு இருக்கு;  அந்த விளம்பரத்தை அவ்ளோ சீக்கிரம் விட்டுருவாரா நம்ம ஜி.  அதான், அங்கேயே ஒரு நாற்காலி போட்டு உக்காந்துட்டாரு.  நம்ம ஜி க்கு ஒரு ராசி இருக்குது; அவரு தலையிட்டால் அது அப்புறம் பெப்பே பெப்பப்பேதான்.  சோலி சுத்தமா முடிஞ்சுரும்;  சந்தேகமிருந்தா சந்திரயான் திட்டமே நல்ல உதாரணம்.  இன்னைக்கு வரைக்கும் அந்த விண்கலம் என்னாச்சுன்னே தெரியல.  அதேதான், இந்தத் திரைப்படத்திலேயும்  நடக்குது.  மொத்தத்துல சோலி முடிச்சு சுத்தமா கழுவி விட்டுட்டாரு நம்ம ஜி.  ஒருவேளை  அந்தப் படம் பாக்காதவங்க இருந்தா கதையோட முடிவை சொல்லி அந்த சஸ்பென்ஸை உடைக்க விரும்பலை.  

இந்த லட்சணத்துல, OTT ல வெற்றியடைஞ்ச இந்த திரைப்படத்தை, உள்ளூர் திரையரங்குலயும் வெளியிடப் போறாங்களாம்.  தணிக்கை குழு பாத்து சான்றிதழ் குடுத்துருச்சாம்.  தணிக்கை குழுவுல இருக்குற அத்தனை பேரும் வாத்து வளக்குற கூட்டம்தான் போலிருக்கு.  அதான் சான்றிதழ் குடுத்துருக்காய்ங்க.  மொத்தத்துல நாலாயிரம் பேரு நீட் தேர்வு எழுதி, அதுல எண்பத்தெட்டாயிரம் பேரு தேர்ச்சி பெற்ற மாபெரும் அரசுதான இது.

எங்க ஜி மயில் வளத்தாரு, வாத்து வளத்தாரு; போதாமைக்கு அம்பானியவும், அதானியவும்  வளத்தாரு.  ஆனா, நாட்டு பொருளாதாரத்தை மட்டும் வளக்க மறந்துட்டாரு.
 

Saturday 3 October 2020

வேற்றுமையில் ...... ஒற்றுமை.......?

ஒரு காலத்துல ஊரு உலகத்துல நடக்குற நல்லது, கெட்டத தெரிஞ்சுக்கிறதுன்னா ஒன்னு செய்தித் தாள் படிக்கணும்;  இல்லையின்னா ரேடியோ பொட்டி கேக்கணும்.  அதுவும் அப்பல்லாம் அந்த செய்தி சராசரி மனுசனுக்கு போயிச்  சேர்றதுக்கு கொஞ்சம் காலமாகும்.  ஆனா, இப்ப அப்படியா இருக்கு; ஒலகத்தோட ஒரு மூலையில நடக்குறது நொடியில  நமக்கெல்லாம் வந்து சேந்துருது.  எதுக்கு இந்த வியாக்கியானம்னா, சில பல வருஷத்துக்கு முன்னால இந்த அமெரிக்காவுலே ஒரு தொ(ல்)லைக் காட்சியில, சாமானியப்பட்ட குடிமக்கள் சில பேருட்ட ஒரு கேள்வி கேட்டாங்க.  அதாவது, "U" அப்படிங்குற எழுத்துல ஆரம்பிக்கிற நாடுகளோட  பேர சொல்லுங்கன்னு.  நெறையப்  பேரு  உகாண்டா, உஸ்பெஸ்கிஸ்தான், உருகுவே, உக்ரைன் அப்படின்னு சொல்லுறான்.  கொஞ்சம் பேரு "U" ல ஆரம்பிக்கிற நாடே கெடையாதுங்கிறான்.  ஆனா, 1%  மட்டும்தான் United States of America-ங்கிற பேரைச் சொன்னான்.  அதாவது, சாமானியனப் பொறுத்தவரைக்கும் அவன் நாட்டோட பெரு America தான்.  இப்ப எதுக்கு இந்த அமெரிக்கா பத்தின சமாச்சாரம் அப்டிங்கிறத  கடேசியில பாப்போம்.  

நம்ம நடராஜன் அண்ணாச்சி கிட்ட சில வருஷம் முன்னாடி பேசிட்டு இருக்கும்போது, அவரு ஒரு வாரத்துல ஆஸ்திரேலிய குடி உரிமைக்கான பரீட்சை அவரும், அவரு வீட்டு அம்மிணியும் எழுதப் போறதா சொன்னாரு.  ஆஸ்திரேலியா சரித்திரம் பத்தி கேள்வி பதில் இருக்கும்னு சொன்னாரு.  நல்லா படிச்சிருக்கீங்களா, ரொம்ப கஷ்டமா இருக்கான்னு கேட்டேன்.  அவரு சிரிச்சுக்கிட்டே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு இருக்குற நம்ம இந்தியா பத்தியே படிச்சு பரீட்சை எழுதிருக்கோம்;  இதென்ன நானூத்தி சொச்சம் வருஷ வரலாறப்   படிக்கிறது பெரிய விஷயமான்னு கேட்டாரு.  அதென்னமோ உண்மைதான்.  ஆஸ்திரேலியா அப்படிங்கிற நாட்டோட ஆதி குடிகள் வரலாறு ஒன்னு இருந்துருக்கும்.  அவங்க தென்னிந்தியா அல்லது இலங்கையில இருந்து சில பல ஆயிரம் வருஷத்துக்கு (உத்தேசமா ஐம்பதாயிரம் வருஷம்) முன்னால இந்த கண்டத்துக்கு வந்துருக்க வாய்ப்பு இருக்கலாம் அப்படின்னு இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சொல்லுறாங்க.  அப்படிப்பட்ட ஆதி குடிகள் - பழங்குடிகளுக்குன்னு ஒரு வலுவான வரலாறு நிச்சயம் இருந்திருக்கும்.  ஆனா, முதன் முதலா வந்த ஐரோப்பிய குடியேறிகள் அந்த வரலாறுக்கான ஆதாரங்களையெல்லாம் அழிச்சிருக்கணும்னு தோணுது.  இன்னைய தேதிக்கு ஆஸ்திரேலியா கலாச்சாரம் முழுக்க, முழுக்க ஐரோப்பிய கலாச்சாரமாதான் இருக்கு.  அதோட சாதக, பாதகங்கள பத்தி பேசுறது இந்த பதிவோட நோக்கம் கெடையாது.  அதுனால, இப்போ இருக்கிற அரசாங்கமும், அரசியல்வாதிகளும் பழங்குடி மக்களோட உரிமைகளுக்கு முன்னுரிமை குடுக்குறதா சொல்லுறாங்க. அது மட்டுமில்லாம, இன்னைக்கும் உலகத்தோட பல்வேறு நாடுகள்ல இருந்து குடியேறும் மக்களுக்கு அவங்களோட கலாச்சாரம், மொழி எல்லாத்தையும் கட்டிக் காக்கவும், அதை பின்பற்றி வாழவும் முழு சுதந்திரம் குடுக்கப்பட்டிருக்கு.  அதாவது நூத்தித் தொண்ணூத்தஞ்சு நாடுகளோட கலாச்சாரம் மற்றும் மொழி இந்த நாட்டுல கலந்து இருக்கு. 

ஏறக்குறைய ஆஸ்திரேலியா மாதிரியே வரலாறுதான் அமெரிக்காவுக்கும்.  குடியேறிகளின் நாடு;  ஆதி குடிகளை - அவர்களின் வரலாற்று ஆதாரங்களை நிர்மூலமாக்கி கொலம்பஸ் காலெடுத்து வைத்த நாளிலிருந்து மட்டுமே அமெரிக்காவின் வரலாறு எழுதப்படுகிறது.  அத்தகைய பெருமைகள் மிகுந்த அமெரிக்க அதிபரின் நண்பர், ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறாரே என்ற ஆதங்கம்தான் இந்தப் பதிவின் நோக்கம்.  அதாங்க நம்ம ஜி .........

பெருமையா சொல்லிக்கிறோமே Unity in Diversity - அதான் தலைப்பிலே சொன்ன வேற்றுமையில் ஒற்றுமை,  அதை  அடித்து நொறுக்கும் நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று திணித்தல் என்ன நியாயம்.  மாற்றுக் கருத்து கொண்டோர் வாய் திறந்து பேசக் கூடாது என்ற சர்வாதிகாரிகளை இந்த உலகம் கண்டிருக்கிறது.  ஆனால், மாற்றுக்  கருத்து கொண்டோரே இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கம் தற்போதைய அரசின் பிரதான கொள்கையாக இருக்கிறது.  நம்ம ஜி தலைமை அமைச்சராக ஆனதுக்கப்புறம் நடப்பவை  மட்டுமே வரலாறாக எழுதப்பட வேண்டும் அப்படிங்கற நல்ல நோக்கத்தில், முந்தைய ஆட்சியாளர்களை கொச்சைப்படுத்தலும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஆவணப்படுத்துவதும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  ஒன்று தெரியுமா, இன்று திறந்து வைக்கப்படும் அடல் குகைப் பாதை 2010-ல் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது என்பது எங்காவது சொல்லப்படுகிறதா?  இவ்வளவு ஏன், கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியை முடக்க எத்தனை குட்டிக் கரணம் அடித்தது ஜி அரசு என்பதை நாம் கண்கூடாக பார்த்தோமே.  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எத்தனை வித்தை காட்டினார்கள்.  பொருளாதாரத்தை நாசமாக்கி, கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை அழித்து மார் தட்டிக் கொண்டாடுகிறது இந்த கையாலாகாத அரசு.  அம்பானி கொரோனா காலத்திலும், ஒரு மணி நேரத்துக்கு தொண்ணூறு கோடி சம்பாதிக்கிறாராம்.  அதே அம்பானி பிரான்ஸ் நாட்டில் பட்ட கடனை கட்டித் தீர்க்கத்தான் ரபேல் விமானம் அதன் அடக்க விலையை விட பல மடங்கு அதிகமாக கொட்டிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆஸ்திரேலிய வங்கிகள் கடன் கொடுக்க மறுத்த பின்னும், அதானி இன்னும் சுரங்க வேலையை தொடரும் மர்மம் என்ன.  (என்ன பெரிய வெங்காய மர்மம்.  இந்திய வங்கிகள் சுரண்டி எடுக்கப்பட்டது).  ஆனாலும், அதானி தோண்டி எடுக்கும் நிலக்கரி நேரடியாக இந்தியாவுக்கு விற்கப்படாது என்பது ஏன்.  நிலக்கரி முதலில் இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டு, அங்கிருந்துதான் இந்தியாவுக்கு விற்கப்படும் என்ற உண்மை ஏன் மறைக்கப்பட்டது. 

😡😡😡  சொல்லணும்னா, சொல்லிக்கிட்டே போகலாம் மக்களே.  ஏற்கனவே ரொம்ப பெரிசாயிருச்சு பதிவு.  முடிஞ்ச வரைக்கும் இதையெல்லாம் அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்களுக்கு எடுத்துட்டுப் போங்க.  இன்னும் நா......லு வருஷம் இருக்கே.




Sunday 19 July 2020

அதிசயங்கள் சூழ் உலகு

நம்ம நாடு  ...... அதாங்க இந்திய நாடு பல்வேறு ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்த நாடு.  மாபெரும் மகான்களும், பெரியோர்களும்  வாழ்ந்த நாடு.  இந்த நாட்டின் மக்கள் நல்வாழ்வு வாழ பல்வேறு காலங்களிலும், பல நூறு பெரியோர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்;  நல்வழி காட்டியுள்ளார்கள். இக்கட்டான பல சூழ்நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது நம் நாடு.  பல்லாயிரக்கணக்கானோரின் தியாகமும் இதில் அடக்கம் என்பது முக்கியம்.  மொத்தத்தில் பல்வேறு அறிஞர்களின் வழிகாட்டுதலும், பல்லாயிரக்கணக்கானோரின் தியாகமும் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் நல்வாழ்க்கைக்கு அடித்தளமாகும்.  ஆனால், ஒரு கேள்வி இங்கே எழுகிறது.  நம்முடைய  இன்றைய நல்வாழ்வு நம் சந்ததிக்கு கிடைக்குமா;  அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கிறதா;  நம்மை வழி  நடத்துவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம் ஆட்சியாளர்கள் நல்வழியில்தான் நம்மை செலுத்திக்கொண்டிருக்கிறார்களா;  சரியான வழியில் நம் பயணம் போய்க் கொண்டிருப்பதாக செய்தி ஊடகங்களில் கூவிக்கொண்டிருப்பவர்கள் சொல்வது உண்மையா.  நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறோம்.

டாய் என்ன கலாய்க்கிற.  வழக்கமா நீ இப்படித்தான் எழுதுவியா அப்படின்னு நம்ம மனசாட்சி சவுண்டு குடுக்குதுங்க.  அதுனால சுருக்கமா நான் என்ன சொல்ல நெனச்சோனோ  அதை சொல்லிட்டுப் போயிர்றேன்.   அதாங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி "அதியங்கள் சூழ் உலகு"   அதை மட்டும் சொல்றேன் .  அதாகப்பட்டது, நம்ம நாட்டுல பல்வேறு மகான்கள் நிகழ்த்துன  அதிசயங்களுக்கு மேலான அதிசயங்கள் சில காலமா நடக்க ஆரம்பிச்சுருக்கு.
அதுல ஒண்ணு  ரெண்டு அதிசயங்களைப் பத்தி பாப்போம்.  எல்லாத்தையும் பேசணும்னு எனக்கு ஆசைதான்.  ஆனா இந்தப் பதிவு ரொம்ப நீளமா போயிரும்.  அதுனால......

மொதல்ல சில மாசத்துக்கு முன்னால நடந்தது.  இந்த கச்சா எண்ணெய்  அப்பிடிங்குற ஒரு மர்மமான திரவத்தை பத்தினது.  சீன வைரஸ்  - அதாங்க கொரோனா  -  ஆட்டத்த ஆரம்பிச்சதும், இந்த உலகமே  ஊரடங்கு அப்பிடிங்குற போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்ட காலத்துல கச்சா எண்ணெய்  அடிமாட்டு விலைக்கு விக்க ஆரம்பிச்சது.  அடிமாடுக்கு ஒப்பிடுறது கூட தப்பு;  அதோட இறைச்சிக்கு விலை இருக்கு.  ஆனா, கச்சா எண்ணெய்க்கு விலையே இல்லாமல் போச்சு;  அதுவும் தப்போ, negative price  அப்பிடிங்குற நிலைமைக்கு போயிருச்சு.  அதாவது, எண்ணையை வாங்கிக்கிறவனுக்கு, விக்கிறவன் பணம் குடுக்குற நெலம.  உலகம் பூரா பெட்ரோலும், டீசலும்  விலை பாதாளம் நோக்கி போயிட்டிருந்த நேரத்துலயும், இந்தியாவில மட்டும் விலை தாறுமாறா ஏறுச்சு.  இப்புடி ஒரு அதிசயம் எங்கயாவது நடக்குமா மக்களே.  அதுனாலதான் இது ஒரு அதிசய பூமியா இருக்கு.

இதுக்கு ஒப்பா இப்ப ஒரு அதிசயம் நடந்துருக்கு.  நான் மேல சொன்ன அதிசயம் கூட எல்லாருக்கும் தெரிஞ்சு நடந்த ஒண்ணு .  இப்பம் நடந்துருக்கே அதை நெனச்சாலே தலை சுத்துது.  கொரோனா பரவாம இருக்கணும்னா கை கழுவுறதுக்கு சோப்பு ரொம்ப முக்கியம்;  அது மாதிரிதான் சானிடைசரும்.  அது ரெண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்ல  இருந்து நீக்கிட்டாங்க.  அதோட GST - யை 12 சதவீதத்துல இருந்து 18 சதவீதமா கூட்டிட்டாங்க.  என்னா ஒரு அதிசயம்.

உலகத்துல 150 நாடுகளுக்கு, கொரோனாவுக்கு எதிரா போராடுறதுக்கு நம்ம தாய்த் திருநாடு உதவி பண்ணிருக்காம்.  நாமெல்லாம் ரொம்பக் குடுத்து வச்சவங்க.  அதிசயங்கள் சூழ்ந்த உலகத்துல வாழறோமே.  

Saturday 11 July 2020

"ஏம்ல கு(கொ)திக்கிற"

ஏல  எவம்ல அது கூவிக்கிட்டே கெடக்கே.  ஊரு ஒலகத்தல என்ன நடந்தாலும்,  நம்ம சோலி முடிஞ்சாப் போதும்னு போயிரணும்ல.  அங்க இருக்கவன்லா அதிகாரத்துல இருக்கவன்.  அவன் நெனச்சா நம்மள என்ன வேணாலும் பண்ணலாம்.  அங்கன நடந்தத  பாத்தேலே, அப்பன் மவன் ரெண்டு பேரயும்  மொத்தமா இல்லாம ஆக்கிப் போடல.  நம்ம வயிறு நெரம்புச்சா;  நம்ம புள்ள குட்டி சொகமா  இருக்கா அப்புடின்னு  பாத்துக்கிட்டு மூடிக்கிட்டு கெடக்கணும் புரிஞ்சுதா.  ரொம்பயும் கெடந்து குதிக்காதலே.

அண்ணாச்சி நல்ல வார்த்த சொன்னீய; அப்புடித்தான் இம்புட்டு நாளும் நம்ம சனம் அத்தனையும்  கெடந்துச்சு.  ஆனா, இப்பம் நடக்குதுல்லாம் நல்லதுக்கா நடக்குங்கீய.  மொத்த சனத்தையும்  இப்புடி ஊரடங்குங்குற பேருல போட்டு அடச்சு  வச்சு என்னத்த சாதிக்கப் போறானுவ.  இங்க அம்புட்டு ஊருலயும்  கொரோனா வந்தாச்சு;  அது வார வரைக்கும் வழியத்  தொறந்து விட்டுப்புட்டு இப்பம் மூடி வெச்சு என்ன ஆகப் போகுது.  இந்த ஊரடங்குல கடை கண்ணியக்கூட அவிய சொல்லுற நேரம் மட்டும்தான தொறக்கணும்னு   சட்டம் போடுராகுலே அது செரியாங்கேன். அண்ணாச்சி, உங்களுக்கு தெரியாததுல்ல; என்னய  மாதுரி கெடயாது.  நாலும்  படிச்சவுக; நல்ல விசியம் தெரிஞ்சவுக.  ரெண்டு மணிக்கி கடைய சாத்தூணும்னாதான், அதுக்கு முன்ன சாமான் செட்டு  வாங்கிறணும்னு சனம் முண்டிக்கிட்டு போகும்;  எப்பயும் போல கடை தெறந்துருக்கும்னா, நாம எப்பம்  வேணாலும் போயி வாங்கிக்கிடலாம்னு கொஞ்சம் அடங்கிப் போகும்.  குறிச்ச நேரத்துக்குள்ள கடைய சாத்துனாத்தான், இந்த என்னமோ சொல்லுதாகளே தனி மனுஷ இடைவேளின்னு அதுக்கு வாய்ப்பே இல்லாமப் போகும்.  இதக்கூட அரசாங்கம் ப ண்ணுத அறிவாளிக யோசிச்சுப் பாக்க மாட்டாகளா.  என்னத்தையோ எம் புத்தில எட்டுச்சு, சொல்லிப்புட்டேன்.  

ஏல, இதலாம் எம் புத்திக்கி தோணலைங்கியா.  தோணுதுலே, ஆனா அம்புட்டையும் சத்தம் போட்டு சொல்லக் கூடாதுங்கேன்.  ஒன்னு கேக்குதவன் ஒன்னய சித்தம் செத்தவம்பான்.  இல்லாட்டி, இந்த இந்த மாதிரி ஒருத்தன் இந்தூருல பேசிக்கிட்டுத் திரியுதான்னு, சட்டம் பேசுதாம்பாரு அவன்கிட்ட போட்டுக் குடுப்பான்.  எட்டப்பன் பரம்பரையில  வந்தவனுவோ.  அம்மணக்காரன் ஊருல கோவணங்கட்டுதவன்  பைத்தாரன்.  புரிஞ்சுக்கோ.


Saturday 30 May 2020

நடந்தாய் வாழி

எட்டாத தூரத்தில் இருக்கின்றேன் ;
எட்டு வைத்து நடக்கும் கூட்டத்தைப் பார்க்கின்றேன்.
கொடூர கொரோனாவால் வாழ்விழந்தோர்
நடக்கின்றார் எட்டு வைத்து,
எட்டிப் பிடித்துவிடலாம் பிறந்த மண்ணை என்று;
பிரிவது உயிரானாலும் தொலையட்டும் எம்மண்ணில் என்று.

தலையில் சுமை, நெஞ்சில் - சிலர் வயிற்றில் - மழலை
மனதிலோ நம்பிக்கை
எட்டு வைத்து நடக்கின்றார்  சொந்த மண்ணை நோக்கி.

நடக்கின்ற கூட்டத்தில் ஒரு சிறுவன் கேட்கின்றான்,
"அப்பா, தேய்ந்தது என் காலணி; பிய்ந்தது  அதன் வார்;
என்ன செய்ய".
"மகனே தேய்வதற்கும், பிய்வதற்கும் இன்னும்
உன் பாதமும் தோலுமிருக்க நிறுத்தாதே உன் நடையை,"
எட்டு வைத்து நடக்கின்றார் பிறந்த மண்ணை முன்னிறுத்தி.

"நிலவின் தூரமா அல்லது செவ்வாயின் தூரமா என் மண்.
எத்தனை காதமானாலும் சளைக்காது என் கால்கள்,"
பிறந்த மண்ணிலிருக்கும் உறவை மனதில் கொண்டு
எட்டு வைத்து நடக்கின்றார் தாய் மண்ணை மனதிலிறுத்தி.

வியர்வை சிந்தி உழைத்த பணத்தை வரி என்ற பெயர் சொல்லி
வாரிக் கொண்டுபோய் பெட்டகத்துள்ளே அடுக்கி வைத்து
தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று  ஆர்ப்பரிக்கிறது ஒரு கூட்டம்.
"பட்டினிச் சாவென்று ஒன்றுகூட இல்லை எமதாட்சியில்,"
என்று தொலைக்காட்சியில் ஒரு தலைவன் கொக்கரிக்கின்றான்.
உழைத்துக் களைத்த கூட்டம் எட்டு வைத்து நடக்கிறது
பிறந்த மண்ணை முன்னிறுத்தி.

உணவில்லை - நீரில்லை, நடக்கின்றோம் நாள் கணக்காய்
எனக்  கதறும் கூட்டமே, உண்மையுனக்கு புரியவில்லை.
இன்னும் இந்த அரசாங்கம் நீ சுவாசிக்கும் காற்றுக்கு
வரி ஏதும் போடவில்லை என்ற ஒரு சலுகை உனக்குத் தெரியாதா?
எட்டு வைத்து நட  மனிதா உன் இலக்கை நோக்கி;
அடுத்த தேர்தலில் உன் வாக்கு உன் மண்ணில் நிச்சயமாய்
உனக்கிருக்கும்;  அப்போது அதைப் பொறுக்க உனைத் தேடி
ஆசீர்வதிக்கப்பட்ட கூட்டம் வந்து நிற்கும்.
எட்டு வைத்து நடக்கின்றார் கானல் நீர் நோக்கி.

உண்மைத் தமிழனென்றால் உடனே பகிரவும் என்றார்.
நான் தமிழனில்லை - இந்தியன் என்றேன்;
திருத்தம் செய்தான் ஒரு தலைவன்,
"நீ ஆன்டி இந்தியன்".
நான் யாராக வேண்டுமானாலும் இருக்கத் தயார்;
ஆனால், மனிதனாய் இருக்கின்றேன்.
கையறு நிலையில் பார்க்கின்றேன் நடக்கின்ற கூட்டத்தை.
எட்டு  வைத்து நடப்பவனே இலக்கென்ற ஒன்று உண்டா  உன் நடைக்கு.
நடந்தாய் வாழி ..............

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.