Saturday 11 July 2020

"ஏம்ல கு(கொ)திக்கிற"

ஏல  எவம்ல அது கூவிக்கிட்டே கெடக்கே.  ஊரு ஒலகத்தல என்ன நடந்தாலும்,  நம்ம சோலி முடிஞ்சாப் போதும்னு போயிரணும்ல.  அங்க இருக்கவன்லா அதிகாரத்துல இருக்கவன்.  அவன் நெனச்சா நம்மள என்ன வேணாலும் பண்ணலாம்.  அங்கன நடந்தத  பாத்தேலே, அப்பன் மவன் ரெண்டு பேரயும்  மொத்தமா இல்லாம ஆக்கிப் போடல.  நம்ம வயிறு நெரம்புச்சா;  நம்ம புள்ள குட்டி சொகமா  இருக்கா அப்புடின்னு  பாத்துக்கிட்டு மூடிக்கிட்டு கெடக்கணும் புரிஞ்சுதா.  ரொம்பயும் கெடந்து குதிக்காதலே.

அண்ணாச்சி நல்ல வார்த்த சொன்னீய; அப்புடித்தான் இம்புட்டு நாளும் நம்ம சனம் அத்தனையும்  கெடந்துச்சு.  ஆனா, இப்பம் நடக்குதுல்லாம் நல்லதுக்கா நடக்குங்கீய.  மொத்த சனத்தையும்  இப்புடி ஊரடங்குங்குற பேருல போட்டு அடச்சு  வச்சு என்னத்த சாதிக்கப் போறானுவ.  இங்க அம்புட்டு ஊருலயும்  கொரோனா வந்தாச்சு;  அது வார வரைக்கும் வழியத்  தொறந்து விட்டுப்புட்டு இப்பம் மூடி வெச்சு என்ன ஆகப் போகுது.  இந்த ஊரடங்குல கடை கண்ணியக்கூட அவிய சொல்லுற நேரம் மட்டும்தான தொறக்கணும்னு   சட்டம் போடுராகுலே அது செரியாங்கேன். அண்ணாச்சி, உங்களுக்கு தெரியாததுல்ல; என்னய  மாதுரி கெடயாது.  நாலும்  படிச்சவுக; நல்ல விசியம் தெரிஞ்சவுக.  ரெண்டு மணிக்கி கடைய சாத்தூணும்னாதான், அதுக்கு முன்ன சாமான் செட்டு  வாங்கிறணும்னு சனம் முண்டிக்கிட்டு போகும்;  எப்பயும் போல கடை தெறந்துருக்கும்னா, நாம எப்பம்  வேணாலும் போயி வாங்கிக்கிடலாம்னு கொஞ்சம் அடங்கிப் போகும்.  குறிச்ச நேரத்துக்குள்ள கடைய சாத்துனாத்தான், இந்த என்னமோ சொல்லுதாகளே தனி மனுஷ இடைவேளின்னு அதுக்கு வாய்ப்பே இல்லாமப் போகும்.  இதக்கூட அரசாங்கம் ப ண்ணுத அறிவாளிக யோசிச்சுப் பாக்க மாட்டாகளா.  என்னத்தையோ எம் புத்தில எட்டுச்சு, சொல்லிப்புட்டேன்.  

ஏல, இதலாம் எம் புத்திக்கி தோணலைங்கியா.  தோணுதுலே, ஆனா அம்புட்டையும் சத்தம் போட்டு சொல்லக் கூடாதுங்கேன்.  ஒன்னு கேக்குதவன் ஒன்னய சித்தம் செத்தவம்பான்.  இல்லாட்டி, இந்த இந்த மாதிரி ஒருத்தன் இந்தூருல பேசிக்கிட்டுத் திரியுதான்னு, சட்டம் பேசுதாம்பாரு அவன்கிட்ட போட்டுக் குடுப்பான்.  எட்டப்பன் பரம்பரையில  வந்தவனுவோ.  அம்மணக்காரன் ஊருல கோவணங்கட்டுதவன்  பைத்தாரன்.  புரிஞ்சுக்கோ.


2 comments:

  1. //எப்பயும் போல கடை தெறந்துருக்கும்னா, நாம எப்பம் வேணாலும் போயி வாங்கிக்கிடலாம்னு//
    இதே யோசனை எனக்குள்ளும் ஓடுது

    ReplyDelete
    Replies
    1. இங்க பாருய்யா நம்ம எழுத்து சேக்காளி வரைக்கும் போயிருக்கு. ஆமா, இந்த நிசப்தம் ஏன் நிசப்தமாவே இருக்கு; நானும் கேட்டுப் பாத்துட்டேன், வா.ம. ஒண்ணும் பதில் சொல்ல மாட்டேங்கிறாரு. உங்களுக்காச்சும் தெரியுமா.

      Delete