Saturday 14 April 2018

பசி வந்திடப்...........

"என்னை வெளிய போகச் சொல்ல நீ யார்?  நீ எந்த நாட்டிலிருந்து வந்தவன்?  எனக்கான உணவை நீ திருடி தின்கிறாய்.  என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை, தெரிந்ததா",  உக்கிரமான கண்களுடன் கையை ஆட்டி, ஆட்டிப் பேசும் அந்த கிழவனைப் பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருந்தது.

உங்களுக்கு பிரிஸ்பேன் நகரின் அமைப்பு தெரியுமா என்று தெரியவில்லை.  இந்த ரோமா ஸ்ட்ரீட் பார்க்லேன்ட் என்பது நகரின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பரந்த பூங்கா.  ரோமா ஸ்ட்ரீட் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கிறது.  வருடம் ஒரு முறை இந்த பூங்காவில் மல்டி கல்சுரல் பெஸ்டிவல் என்ற பெயரில், பல்வேறு நாட்டினரின் கலை நிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழாவும் நடைபெறும்.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள், நான் பணியாற்றும் நிறுவனத்தின் பொறுப்பு.

இதில் கடை விரிக்க வருபவர்களின் உணவு பொருட்கள், மற்றும் பானங்கள் போன்றவற்றை அவரவர் தனித் தனி கூடாரங்கள் அமைத்து அதில் வைத்திருப்பார்கள்.  விழா நடக்கும் நேரத்தில் பெரிய பிரச்சினை இருக்காது.  ஆனால், இரவிலும் அந்த கூடாரங்களை பாதுகாப்பதில்தான் பிரச்சினை.  போன ஆண்டு விழாவில், ஒரு ஸ்பெயின் நாட்டினனின் கூடாரத்திலிருந்து மொத்த ஒயினும் திருட்டுப்போய்விட்டது.  இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த பகுதிக்கு பொறுப்பாய் இருந்த பாதுகாவலன் ஒரு கென்ய நாட்டுக்காரன்.  அவன் அந்த திருடனிடம் பேசியிருக்கிறான்.  அந்த திருடன், தான்தான் அந்த கடைக்கு உரிமையாளன் என்றும்,  தன்னுடைய பொருட்களுக்கு தானே காவல் இருக்க போவதாகவும் சொல்லியிருக்கிறான். இந்த கென்ய நாட்டவனும், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்று  நம்பி அவனை விட்டு விட்டான்.  மொத்தத்தில் இந்த காவலர்களுக்கு பொறுப்பு ஏற்றிருந்த நான் தலை குனிய வேண்டியதாகிவிட்டது.

இந்த ஆண்டும் விழாவிற்கு இரவு பொறுப்பாக நான்தான் என்று மரியா என்னிடம் சொன்னபோது, நான் அவளிடம் போன ஆண்டு நிகழ்ந்த திருட்டை நினைவுபடுத்தினேன்.  "ராஜ், இந்த வருடம் அப்படி எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்.  உன்மீது எனக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது", என்று கூறிவிட்டாள்.

இரண்டு நாள் விழா என்று கூறினேன் அல்லவா.  இன்று முதல் நாள் இரவு.  பூங்காவின் மேற்பகுதி - அது சற்று மேடான பகுதி என்பதால் அதை மேற்பகுதி என்று குறிப்பிடுவோம் - பொறுப்பிலிருந்த ஆண்ட்ரு, மேடையின் கீழே ஒரு மனிதன் இருப்பதாகவும், வெளியே வர மறுப்பதாகவும், என்னை அழைத்தான்.

நான் அங்கு போன போது ஆண்ட்ரு ஒரு வயதான மனிதனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.  அந்த மனிதன் தான் ஒரு வீடில்லாதவன் (homeless)
என்றும், அந்த மேடையும் கீழ் தான் தங்கியிருப்பதாகவும், இந்த இரவின் குளிரில் தன்னை வெளியே போகச் சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் கத்திக் கொண்டிருந்தான்.  

என்னைப் பார்த்ததும் ஆண்ட்ரு, இந்த பிரச்சினையை என் கையில் ஒப்படைத்துவிட்டு, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.  நானும் அந்தக் கிழவனிடம் பொறுமையாக நடக்கும் விழா குறித்தும், இந்த விழா நடக்கும் நாட்களில் யாரையும் தங்க அனுமதிக்க முடியாது என்பதையும் விளக்கினேன்.  எப்படியும் அந்த கிழவனுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்க வேண்டும்;  கண்களில் உக்கிரம் போங்க என்னைப் பார்த்து மேலே சொன்ன வார்த்தைகளை முழங்கிக் கொண்டிருந்தான்.  ஆண்ட்ரு ஒரு முடிவுக்கு வந்தவனாக, "நான் காவல் துறையை அழைக்கட்டுமா", என்றான்.  

அவனை சற்று பொறுமையாக இருக்கும்படி கூறினேன்.  "நான் பிறப்பால் ஒரு இந்தியன்.  ஆனால், இன்று இரவு இந்த பூங்காவை பாதுகாப்பது, என் கடமை.  அதன் அடிப்படையில், இன்று இரவு உன்னை இந்த இடத்தில் தங்க நான் அனுமதிக்க முடியாது.  ஒரு வேளை உனக்கு நான் எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா என தெரியவில்லை.  ஆனால், இன்று மற்றும் நாளை இரவு இந்த மேடையின் கீழ் நீ தங்கியிருக்க உனக்கு அனுமதியில்லை", என்றேன்.

முகத்தை மூடியவாறு கீழே அமர்ந்து அந்தக் கிழவன் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கியிருந்தான்.  என்னை நிமிர்ந்து பார்த்து, "நான் நன்றாக சாப்பிட்டு நான்கு நாளாகிவிட்டது.  இந்த பூங்கா வழியாக ரயில் நிலையம் போகிறவர்களிடம் பிச்சை எடுத்துத்தான் என் நாளை கழித்துக் கொண்டிருக்கிறேன். இந்த விழாவுக்காக இந்த பூங்காவின் பாதைகைளை அடைத்து விட்டதால் நான்கு நாட்களாக எனக்கு வருமானமில்லை.  உனக்கு ஒன்று தெரியுமா, நான் ஒரு பொறியாளன்.  நான் பதுங்கியிருக்கும் இந்த மேடையை போலவும், பலப்பல கட்டிடங்களையும் நான் வடிவமைத்திருக்கிறேன்.  நான் வாழ்வில் செய்த பல தவறுகள் என்னை இந்த மேடையின் கீழ் ஒளிந்து வாழ வைத்துவிட்டது.  இந்தக் குளிரில், நான்கு நாள் பட்டினி கிடந்த கிழவனை துரத்திதான் உன்னுடைய கடமையை நீ செய்ய வேண்டுமென்றால், சரி நான் வெளியே போகிறேன்.  அதற்கு முன் நான் உன்னிடம் பேசிய வார்த்தைகளுக்காக நீ என்னை மன்னிக்க வேண்டும்".

கெட்டாலும், மேன்மக்கள் அல்லவா.  மெதுவாக அந்தக் கிழவனை கை பிடித்து எழுப்பினேன்.  என்னுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச்சென்று, என்னுடைய பையிலிருந்து இரண்டு வாழைப்பழங்களையும், சில ரொட்டி துண்டுகளையும் எடுத்து நீட்டினேன்.  என்னுடைய பையில் எப்போதும் வைத்திருக்கும் ஸ்வெட்டர் ஒன்றையும் எடுத்து கொடுத்தேன்.  "என்னால் இதற்கு மேல் எந்த உதவியும் தங்களுக்கு செய்ய இயலாது.  அதே நேரம் நீ இந்த பூங்காவில் தங்கி இருக்கவும் அனுமதிக்க முடியாது".

கசிந்த கண்களுடன் அந்த கிழவன் தளர்ந்த நடையில், பூங்காவை விட்டு விலகிக் கொண்டிருந்தான்.  பெருமூச்சுடன் நான் என் வேலைகளை பார்க்க தொடங்கினேன்.

மறுநாள் மாலை ரயில் நிலையத்திலிருந்து பூங்காவை நோக்கிப் போகும் பொது அந்த ஸ்வெட்டர் போர்த்திய உருவம் ஒரு பாறையில் அமர்ந்து, என்னை நோக்கி கையாட்டியது.


சமையற்கலை

சொக்கலிங்கத்தைப் பத்தி சொல்லியே ஆகணும்.  என்னோட முன்னாள் அறைத் தோழன்.  ஒரு எட்டடிக்கு எட்டடி அறையில் நான்கு பேர் தங்கியிருந்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த நேரம்.  நான், இளங்கோ, நாராயணன், சொக்கலிங்கம் என்று நால்வரும் சேர்ந்து அந்த அறையில் இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கிறோம்.  நாங்கள் நால்வரும் தொழில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலம் அது.  கிடைக்கிற சம்பளத்தில் அந்த எட்டடி அறை கூட எங்களுடைய அரண்மனைதான்.  அறையிலேயே சமைத்து சாப்பிடுவோம்.  

நால்வரில் சொக்கலிங்கம் ஒரு சமையற்கலை வல்லுனன்.  பெரும்பாலும் நாங்கள் மூவரும் சமைப்பதில் ஒன்றும் சுகம் இருக்காது.  ஆனால், சொக்கலிங்கம் ஒரு பிறவி கலைஞன் - சமையலில். " அந்த சாம்பார்ல உப்பு கூடிப் போச்சுடே.  ஒரு உருளைகிழங்க சேத்து வேக விடு", என்பான்.  நிச்சயமாக அந்த சாம்பார், உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைத்த பிறகு ஒரு அற்புதமான  சுவையில் இருக்கும்.  

ஒவ்வொரு முறை ஏதாவது எழுத வேண்டும் என்று உட்காரும்போதும் சொக்கலிங்கத்தின் நினைப்பு வந்து விடும்.  எனக்கென்னவோ இந்த எழுத்தும் ஒரு சமையல் போலத்தான் தோன்றுகிறது.  காலம்  காலமாக கற்ற மொழி, என் தாய்த்தமிழ், லட்சக் கணக்கான வார்த்தைகள் நிரம்பிய பாத்திரங்களில் எனக்கு முன்னால் இருப்பதாகத் தோன்றுகிறது;  ஆனால் ஒரு சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து அதை சரியான விகிதத்தில் சமைப்பது என்பது எனக்கு இன்னும் கை வரவில்லை.  

ஒரு வேளை சொக்கலிங்கம் இன்று இருந்தால், இந்த சமையலையும் (சாம்பாரையும்) சரி செய்திருக்கக் கூடும்.   சமையல் போலவே, எழுத்தை ரசிப்பதிலும் அவன் பெரிய ரசிகன்.  

ஆரம்ப காலத்தில், நான் கவிதை சமைக்க முற்பட்ட காலங்களில், துருத்திக்கொண்டிருக்கும் வார்த்தைகளை அவன் சுட்டிக் காட்டுவான். "ஏ மக்கா, ஒனக்கு கவிதைலாம் சரிப்பட்டு வராதுலே.  கதையா எழுது. இல்ல உரைநடையா ஏதாவது கிறுக்குலே",  என்று வாழ்த்துவான்.

நானும் அப்பப்பபோ சமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  ஆனால், நான் நினைத்ததை முழுமையாக சொல்லி விட்டேனா என்று தான் தெரியவில்லை.