Friday 2 June 2017

ருசிக்கல்லு

சினிமாக்கு போகணும்னா, ஒரு அரை மணி நேரமாவது முன்னால போயிரனும்.  அதுவும் ஒரு விளம்பரம் விடாம பாத்து, சினிமாவும் பாத்து, அதுல வணக்கம் போட்டு வீட்டுக்குப் போங்கடான்னு தொரத்துற வரைக்கும் உக்காந்திருப்போம் - இப்ப இல்ல; சின்ன வயசுல.  அதுல ஒரு விளம்பரம்  பற்பசையை வாங்கச் சொல்லி வரும்.  அதுல ஒரு பயில்வானு பல்லு தேய்க்க சாம்பலும், உப்பும் எடுப்பாரு.  ஒடனே, "உடல் பலத்துக்கு பாதாமும், பிஸ்தாவும்;  பல்லுக்கு கரியும், உப்பும் தானா", அப்புடின்னு சொல்லி அந்த பற்பசைக்கு விளம்பரம் பண்ணுவாங்க.  ஆனா இப்ப சமீபத்துல, "உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா;  கார்பன் இருக்கா", - ன்னு கேக்குறாங்க.  அப்ப என்னன்னவோ பொய்யச் சொல்லி எங்களையெல்லாம் பற்பசைக்கு அடிமையாக்கிட்டீங்க.  அந்தக் காலத்துல மொத மொதல்ல, டீயும், காபியும் அறிமுகப் படுத்தினப்ப, வீடு வீடா வந்து இலவசமா குடுப்பாங்களாம்.  இப்ப மொத்தமா இந்த சமூகத்தையே காபி, டீ இல்லாத வாழ்க்கையே இல்லைங்கிற நெலமைக்கு கொண்டாந்து விட்டுட்டாங்க.

இதே மாதிரிதான், நாம சாப்பிடுற சாப்பாட்டுல இந்த சத்து வேணும், அந்த வைட்டமின் வேணும்னு சொல்லி, பரம்பரை உணவு பழக்கத்துல இருந்து திசை திருப்பி விட்டுட்டு, நாம சர்வ சாதாரணமா சமையல்ல உபயோகப்படுத்துற மஞ்சள வைட்டமின்ல ஒண்ணாக்கி, turmeric மாத்திரையா விக்கிறாங்க.

நேத்து நியூஸ் என்னன்னா, இந்த zika வைரஸ்க்கு ஒரு மருந்து கண்டுபிடுச்சுட்டாங்களாம்.  ஆனா அது மார்க்கெட்டுக்கு வர்றதுக்கு ரெண்டு வருஷம் ஆகுமாம்.  ஏன்னா அந்த மருந்து ஒரு செடியிலருந்து தயாரிக்கணுமாம்.  அதை முழுமையா நடைமுறைக்கு கொண்டு வர ரெண்டு வருஷம் வேணுமாம்.  முக்கியமான விஷயம், அந்த தாவரம் எதுன்னு சொல்லவே இல்லை.  மொட்டையா Australian Native Plant-ன்னு சொல்லி முடிச்சுக்கிட்டாங்க.  ஒரு வேளை என்ன Plant-னு தெரிஞ்சு போச்சுன்னா, மக்கள் அந்த தாவரத்த நேரடியா சமைச்சு சாப்பிட்டு, அந்த வியாதி குணமாயிருச்சுன்னா........  நிச்சயமா அந்த தாவரமும் ஏதாவது ஒரு சமூகம், மருந்தா பயன்படுத்துற ஒண்ணாத்தான் இருக்கும்.  

இன்னிக்கி எல்லாம் வல்ல உலக பஞ்சாயத்து தலைமையகம், அமெரிக்காலருந்து ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லியிருக்காரு, உப்பு அதிகமா சேத்துக்கிறது ரத்தக் கொதிப்புக்கான காரணம் இல்ல.  ஒடம்புல உப்புச் சத்து அதிகமானா அதுக்குத் தகுந்த அளவு தண்ணீர் சேர்க்கணும்; அந்த தண்ணீரே மருந்துன்னு.  

உப்புக்கு இன்னொரு பேரு ருசிக்கல்லு.