Friday 22 September 2023

எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோணுதா!

 ஒரு ஊருல ஒரு மனுசன் (வேற எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல).  ஊருக்குள்ள ஓரளவு நல்ல பேரு; அதும் போக கொஞ்சம் கை வைத்தியமும் தெரியும்.  சின்னச்சின்ன உடல்நலக் குறைவுக்கெல்லாம் கை வைத்தியம் பாப்பாரு.  போக நல்லது, கேட்டது எதுன்னாலும் இவருகிட்ட எல்லாரும் வந்து ஆலோசனை வேற கேப்பாங்க.  விஷயம் என்னன்னா, இவருக்கு மனைவி கிடையாது;  தவறிட்டாங்க.  ஒரே மகன்; பையனுக்கு தாயில்லா குறை தெரியாம வளத்தாரு.  பையனும் வளந்துட்டான்.  இந்த நிலையில இவரு தொலை தூரம் போகிற ஒரு வேலை வந்துச்சு.  பையனை தனியா விட்டுட்டு போகணுமேன்னு கவலை.  ஊருல எல்லாருகிட்டயும் பையனை பாத்துக்குங்கன்னு சொன்னாரு.  எல்லாரும் ஒண்ணு சொன்னாப்புல கண்டிப்பா பாத்துக்கிறோம்னு உறுதி குடுத்தாங்க.  "எங்க குடும்பத்துல ஒருத்தரா பாத்துக்கிறோம்;  எங்க வீட்டுலயே சாப்பிட்டு எங்க வீட்டுல ஒரு ஆளா இருக்கட்டும்",  அப்படின்னு எல்லாரும் சொன்னாங்க.  இவருக்கும் சந்தோஷம்.  மகனைக் கூப்பிட்டு, "மகனே இந்த ஊருல ஒவ்வொரு வீட்டுலயும் நமக்கு ஒரு வேளை சாப்பாடு இருக்கு.  அதை விட்டுறாத", அப்படின்னு சொல்லிட்டு ஊருக்குப் போனாரு.

ஊருக்குப் போனா, போன மாதிரியே இருக்க முடியுமா;  போன வேலை முடிஞ்சு மனுஷன் திரும்பி வந்தாரு.  ஊருல ஒரு ஆளு கூட இவருகிட்ட முகம் குடுத்து பேச மாட்டேங்கிறாங்க.  இவருக்கு ஒண்ணும் புரியல; பையனைக் கூப்பிட்டு என்ன விவரம்னு கேட்டாரு.  பையனும், "நீங்க ஊருக்குப் போனதில இருந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீட்டுல சாப்பிட்டேன்", அப்படின்னு சொன்னான்.  "ஏல கூறு கெட்டவனே.  ஒவ்வொரு வீட்டுலயும் நமக்கு சாப்பாடு இருக்குன்னா, அதுக்கு அந்த அளவு மரியாதை இருக்குன்னு அர்த்தம். அந்த மரியாதையை விட்டுறாதன்னு சொன்னேன்.  நீ மொத்த மரியாதையையும் கெடுத்து வச்சிருக்க", அப்படின்னு வருத்தப்பட்டார்.    

அதே மாதிரிதான் இங்கயும் நடந்துருக்கு; ஊரான் வீட்டு நெய்யே அப்படின்னு (முழுசா சொல்ல முடியாத சொலவடை அது) நெனச்ச நேரமெல்லாம், எடுறா ஏரோபிளானை அப்படின்னு ஊரு ஊரா/நாடு நாடா சுத்துனாரு நம்ம ஜி.  இதுல எல்லா நாட்டு தலைவரும் இவருக்கு ரொம்ப மரியாதை குடுக்குறாங்க; இவருக்கு எல்லாரும் நெருங்கிய நண்பர்கள் அப்படின்னெல்லாம் வடை சுட்டு, சுட்டு சுட்டாங்க;  இப்ப எல்லா வடையும் ஊசிப் போச்சு.  

இங்க ஜி20 மாநாடு முடிச்சு போற வழியில, இந்தியாவுல பத்திரிகை சுதந்திரமே இல்லைன்னு பேட்டி குடுத்துட்டுப் போறாரு ஜோ பைடன். இப்போ கனடா பிரச்சினை பத்திக்கிட்டு எரியுது.  போதாமைக்கு இந்த சீனாக்காரன் வேற விளையாட்டு வீரர்களுக்கு விசா குடுக்க முடியாதுன்னு ஒரு குண்டைப் போடுறான்.  என்னாடா விஷயம்னா அருணாச்சலப்பிரதேசம் ஏற்கனவே சீனாவோட ஒரு பகுதிதான்.  அங்க இருந்து வாரவனுக்கு நான் ஏண்டா விசா குடுக்கணும்னு கேக்குறான்.  ஏற்கனவே, அருணாச்சலப்பிரதேசத்துல சீனா எல்லை தாண்டி வந்துட்டான்னு ராகுல் சொன்னப்போ, அப்படி ஒண்ணு நடக்கவே இல்லை.  எங்க அம்பத்தாறு இன்ச் பிரதமர் ஆட்சியில ஒரு இன்ச் நிலம் கூட நாங்க விட்டுக் கொடுக்க  மாட்டோம்னு வீர வசனம் பேசினாங்க.  அதெல்லாம் இப்போ ஞாபகத்துக்கு  வந்து தொலைக்குது.  மொத்தத்துல அடுத்த வீட்டு விருந்தும், நட்பும் நாம ரொம்ப நெருங்கிப் போனா விலகிப் போகும். ஏன்னா, ரொம்ப நெருங்கினா நம்ம பலவீனம் பல்லிளிச்சிரும்.  அப்படித்தான் நம்ம ஜி-யோட பலவீனம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கு.  

வழக்கம் போல ஒரு சந்தேகம்.  எதிர்க்கட்சி கூட்டணி இந்தியா அப்படின்னு பேரு வச்சதும், நாட்டோட பேரையே பாரத்னு மாத்துறேன்னு கெளம்பிட்டாங்க. கேட்டா, இந்தியா அப்பிடிங்கிற பேரு வெளிநாட்டுக்காரன் குடுத்தது அப்படின்னு கம்பி கட்டுறீங்களே எசமான்.  இந்த மின்சாரம், கார், ட்ரெயின், ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், கம்ப்யூட்டர், ஊரான் வீட்டு காசுல வாங்கிட்டு ஏறி சுத்துறீங்களே அந்த ஏரோபிளேன் எல்லாமே வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்புதானே எசமான்.  எல்லாத்துக்கும் மேல, இந்த ஆஸ்பத்திரி, அங்க வைத்தியம் குடுக்குற டாக்டருங்க, அவங்க படிப்பு எல்லாம் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்புதான்; போதாமைக்கு இப்ப இருக்குற மூத்த, சிறப்பு வைத்தியம் குடுக்கிற டாக்டருங்கல்லாம் நீங்க கொண்டு வந்த நீட் தேர்வு எழுதாதவுங்க.  அப்ப  உங்களுக்கு உடம்புக்கு ஒரு நல்லது, கெட்டது  வந்தா நீங்க ஆஸ்பத்திரிக்கு போக மாட்டீங்களா எசமான்?