Thursday 24 August 2023

மாப்பிள்ளை முறுக்கு

 எங்க ஊர்ப்பக்கம் முந்தி நடந்த ஒரு சம்பவம் இது.  ஊருல பெரிய பண்ணையார்; அவ்ளோ பெரிய மனுசனா இருந்தாலும், கொஞ்சம் நல்லவரு கூட.  (எத்தனை பணக்காரன் நல்லவனா இருக்கான்னு தெரியல)  இவருக்கு ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன்.  ரெண்டு பொண்ணுக்கும் நல்ல வசதியான இடமா பாத்து கல்யாணம் பண்ணிவைச்சாரு.  சின்ன பொண்ணுக்கு தலை தீபாவளி; சம்பந்தி வீட்டுக்கு வில்லு வண்டி அனுப்பி வச்சு பொண்ணு, மாப்பிள்ளையை அழைச்சாரு.  அவங்களும் வண்டியேறி வந்தாங்க.  வண்டி பண்ணையாரு ஊருக்கு வந்துருச்சு;  வீட்டு வாசலுக்கு வண்டி வந்து நின்னுச்சு.  சந்தர்ப்ப வசமா பக்கத்து ஊருல ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்ல பண்ணையாரு போயிருந்தார். பண்ணையார் மனைவியும், ரெண்டு  பையன்களும் வாசலுக்கு வந்து மாப்பிளையை வரவேற்றாங்க.  என்னய்யா அதிசயம், மாப்பிள்ளை முகத்தை திருப்பிக்கிட்டாரு; என்னன்னா பண்ணையார் நேருல வந்து வரவேற்க்கணுமாம்.  அப்பத்தான் வண்டியை விட்டு இறங்குவேன்னு சொல்லிட்டாரு.  ஏன்னா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பெரிய மாப்பிளையை நேரடியா பண்ணையாரு வந்து கூட்டிட்டு போனாருன்னு இந்த மாப்பிளை பையனுக்கு யாரோ சொன்னாங்களாம், அப்புறம் யாராரோ வந்து சமாதானம் பண்ணி, வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனாங்களாம்.

இங்க ஒருத்தரு அந்த மாப்பிளை முறுக்குக்கு இணையா, ஏரோபிளேனுக்குள்ள உக்காந்துக்கிட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்காரு.  கடைசியில போனா போவுதுன்னு துணை அதிபர் வந்து கூட்டிட்டு போனாராம்.  என்ன வித்தியாசம்னா, பண்ணையார் மாப்பிளைக்கு வண்டி அனுப்பிச்சு கூப்பிட்டாரு. இவரு மக்கள் வரிப்பணத்துல ஏரோபிளேன் வாங்கிட்டு போறாரு.  இதுல பண்ணையாரு காதுக்கு, மாப்பிளையோட முரண்டு விஷயம் போனதும், அவரு கெட்ட வார்த்தையில திட்டுனதையெல்லாம் இங்க சொல்ல முடியாது. இவருக்கு என்னவெல்லாம் திட்டு விழுந்துச்சுன்னு யாருக்கு தெரியும்.  அதும் போக மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்கிறது சம்பிரதாயம்.  இவரை எதுக்கு மாநாட்டுக்கு அழைச்சாங்கன்னு யோசிச்சு பாக்கணும். நாலு நாட்டு அதிபருங்க சேர்ந்து முக்கியமான சமாச்சாரங்களை யோசிச்சு பேசுவாங்க; எல்லாரும் மொத்தமா முட்டு குடுத்து பேசிக்கிட்டே இருந்தா ஒரு அயர்ச்சி வரும்ல; அப்ப ஒரு கோமாளி இருந்தா பொழுது நல்லா போகும்னுதான் இந்தாளையும் கூப்பிட்டு வச்சுக்கிறது ஒரு பழக்கமா போச்சு.  அதுவும் ஊரான் காசுல வாங்குன பிளேன் இருக்குன்னு சும்மா, சும்மா சுத்திக்கிட்டே இருந்தா எவன் மதிப்பான்.  அமெரிக்க பாராளுமன்றத்துல பேசுனாருன்னு பெருமை பேசுற ஊடகம் ஏதாவது, அந்த பாராளுமன்றத்துக்கு எதுத்தாப்புல Crime Minister of India அப்படின்னு டிஜிட்டல் போர்டு வச்சதை பத்தி பேசுச்சா.  ஏன், இதே  தென்னாப்பிரிக்காவுல நம்ம "ஜி"யை டிராகுலா அப்படின்னு சித்தரிச்சு படம் வச்சாங்களே அதை யாராவது பேசுனாங்களா. 

இவரு பிரிக்ஸ் மாநாட்டுக்கு போனதுல ஒரே ஒரு சாதகமான விஷயம், நம்ம விண்வெளி விஞ்ஞானிகள் சந்திரயான் 3 யை பத்திரமா நிலாவுல தரையிறக்கிட்டாங்க.