Saturday 30 May 2020

நடந்தாய் வாழி

எட்டாத தூரத்தில் இருக்கின்றேன் ;
எட்டு வைத்து நடக்கும் கூட்டத்தைப் பார்க்கின்றேன்.
கொடூர கொரோனாவால் வாழ்விழந்தோர்
நடக்கின்றார் எட்டு வைத்து,
எட்டிப் பிடித்துவிடலாம் பிறந்த மண்ணை என்று;
பிரிவது உயிரானாலும் தொலையட்டும் எம்மண்ணில் என்று.

தலையில் சுமை, நெஞ்சில் - சிலர் வயிற்றில் - மழலை
மனதிலோ நம்பிக்கை
எட்டு வைத்து நடக்கின்றார்  சொந்த மண்ணை நோக்கி.

நடக்கின்ற கூட்டத்தில் ஒரு சிறுவன் கேட்கின்றான்,
"அப்பா, தேய்ந்தது என் காலணி; பிய்ந்தது  அதன் வார்;
என்ன செய்ய".
"மகனே தேய்வதற்கும், பிய்வதற்கும் இன்னும்
உன் பாதமும் தோலுமிருக்க நிறுத்தாதே உன் நடையை,"
எட்டு வைத்து நடக்கின்றார் பிறந்த மண்ணை முன்னிறுத்தி.

"நிலவின் தூரமா அல்லது செவ்வாயின் தூரமா என் மண்.
எத்தனை காதமானாலும் சளைக்காது என் கால்கள்,"
பிறந்த மண்ணிலிருக்கும் உறவை மனதில் கொண்டு
எட்டு வைத்து நடக்கின்றார் தாய் மண்ணை மனதிலிறுத்தி.

வியர்வை சிந்தி உழைத்த பணத்தை வரி என்ற பெயர் சொல்லி
வாரிக் கொண்டுபோய் பெட்டகத்துள்ளே அடுக்கி வைத்து
தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று  ஆர்ப்பரிக்கிறது ஒரு கூட்டம்.
"பட்டினிச் சாவென்று ஒன்றுகூட இல்லை எமதாட்சியில்,"
என்று தொலைக்காட்சியில் ஒரு தலைவன் கொக்கரிக்கின்றான்.
உழைத்துக் களைத்த கூட்டம் எட்டு வைத்து நடக்கிறது
பிறந்த மண்ணை முன்னிறுத்தி.

உணவில்லை - நீரில்லை, நடக்கின்றோம் நாள் கணக்காய்
எனக்  கதறும் கூட்டமே, உண்மையுனக்கு புரியவில்லை.
இன்னும் இந்த அரசாங்கம் நீ சுவாசிக்கும் காற்றுக்கு
வரி ஏதும் போடவில்லை என்ற ஒரு சலுகை உனக்குத் தெரியாதா?
எட்டு வைத்து நட  மனிதா உன் இலக்கை நோக்கி;
அடுத்த தேர்தலில் உன் வாக்கு உன் மண்ணில் நிச்சயமாய்
உனக்கிருக்கும்;  அப்போது அதைப் பொறுக்க உனைத் தேடி
ஆசீர்வதிக்கப்பட்ட கூட்டம் வந்து நிற்கும்.
எட்டு வைத்து நடக்கின்றார் கானல் நீர் நோக்கி.

உண்மைத் தமிழனென்றால் உடனே பகிரவும் என்றார்.
நான் தமிழனில்லை - இந்தியன் என்றேன்;
திருத்தம் செய்தான் ஒரு தலைவன்,
"நீ ஆன்டி இந்தியன்".
நான் யாராக வேண்டுமானாலும் இருக்கத் தயார்;
ஆனால், மனிதனாய் இருக்கின்றேன்.
கையறு நிலையில் பார்க்கின்றேன் நடக்கின்ற கூட்டத்தை.
எட்டு  வைத்து நடப்பவனே இலக்கென்ற ஒன்று உண்டா  உன் நடைக்கு.
நடந்தாய் வாழி ..............

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.