Tuesday 22 May 2018

தம்பி இன்னும் டீ வரல

                                      Image result for vadivelu's pokkiri image


ஊரூரா வெற்றி கூட்டம் போடுறாங்களாம்.  எதுக்குடான்னு கேட்டா காவேரி விவகாரத்துல ஜெயிச்சுட்டாங்களாம்.  காவிரி வாரியம் அமைச்சே ஆகணும்னு நீதி மன்றமும் சொல்லிருச்சாம்;  மத்திய அரசும் ஒத்துக்கிடுச்சாம்.   இந்த வெற்றி ஆளுங்கட்சிக்கு மட்டும்தான்  சொந்தமாம்;  வேற யாரும் பங்கு கேட்கக் கூடாதாம்.  ஒரு அமைச்சர் பேசிருக்காரு.

இப்ப என்ன ஆயிருச்சுன்னு வெற்றி கூட்டம் போடுறாங்கன்னு புரியல.  காவிரி வாரியம் கேட்டது தண்ணி வரணும் அப்புடின்குற நோக்கத்துக்காக.  இன்னும் தண்ணி வந்து சேரல; புதுசா அமையப் போற கர்நாடக அரசாங்கம் என்னன்ன கொக்கு மாக்கு பண்ணப் போறாங்கன்னு தெரியல.  வந்து சேராத காவிரிக்கு வெற்றி கூட்டம் போடுறாங்க.  
--------------------------------------------------------------------------------------------------------------------------


ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பா நூறு நாளு போராட்டம் நடந்தப்பல்லாம் தூங்கிகிட்டு இருந்த அரசாங்கம், இன்னைக்கு திடீருன்னு முழிச்சு எந்திருச்சு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு குடுப்போம் அப்புடின்னு அறிவிச்சுருக்காங்க.  

அதாகப்பட்டது மகா ஜனங்களே, ஒரு வேளை அரசாங்கம் உங்க கோரிக்கைய திரும்பி பாக்கணும்னா - நடவடிக்கை  எடுப்பாங்கன்னு நான் சத்தியமா சொல்லலை  - திரும்பிப் பாக்கணும்னா  ஒரு சில ஆயிரம் பேரு சேந்து, குறைந்தபட்சம் நூறு நாளைக்கு போராட்டம் நடத்தி, அது ஒரு துப்பாக்கிச்சூடு நடத்துற அளவுக்குப் போயிருச்சுன்னா கண்டிப்பா உங்களுக்கு ஒரு அறிக்கை ஒருதி மக்களே!





Saturday 19 May 2018

கர்நாடகாவுல தோத்தது யாரு..

"ஒரே வேடிக்கையா இருக்கு மாப்ளே; இவனுக்கு மெஜாரிட்டி இல்லைன்னு அவன் சொல்லுறதும்,  இல்லல்ல எங்களுக்கு தான் மெஜாரிட்டி இருக்குன்னு அவன் புளுகுறதும்..ஹே..ஹே .. நல்லா வேடிக்கைதான் போ."

"ஏன் மச்சான், எந்த அடிப்படையில இந்த கவர்னரு அந்த ஆள முதலமைச்சரா பதவி பிரமாணம் செஞ்சு வச்சாரு."

"மாப்ள, இந்த கவர்னரு பதவியே வேலை வெட்டியில்லாத, ரிடயரு ஆகுற பருவத்துல இருக்குற அரசியல்வாதிகளுக்குன்னே ஒதுக்கி வச்சுருக்குற பதவி.  அவங்களும், முன்னால, பின்னால சைரன் வச்ச வண்டியோட அப்படியே பந்தாவா போயி வந்துக்கிட்டு இருப்பாக.  இந்த மாதிரி எலெக்ஷன் அது இதுன்னு நடந்து, இந்த பய புள்ளைகளுக்கு எஜமான விசுவாசத்த காட்ட வேண்டிய நேரம் வரும் போது கண்டிப்பா காமிச்சுருவாங்க.  அப்புடித்தான் இந்த எடியூரப்பா முதலமைச்சரா வந்து உட்காரப் பாத்தாரு.  அது வேலைக்காகல.  கடைசியில ஒரு உருக்கமான உரை வாசிச்சு முடிச்சு ராஜினாமா பண்ணிட்டாரு."

"மச்சான், என் சந்தேகம் என்னன்னா, எப்புடி இருந்தாலும் நாங்கதான் ஜெயிச்சோம்னு ரெண்டு பக்கமும் கோஷம் போடுறாங்களே, அதுல உண்மையிலேயே ஜெயிச்சவங்க யாருன்றதுதான்."

"யோவ்!  மாமனும், மச்சானும் கொஞ்சம் அமைதியா யோசிச்சு பாருங்கையா.  அந்த ரெண்டு பக்கமுமே உண்மையிலேயே ஜெயிச்சவங்கதான்.  ஓட்டுப் போட்ட உன்னையும், என்னையும் மாதிரி இளிச்சவாயன் மட்டும்தான் தோத்துருக்கோம்."

Sunday 6 May 2018

பகாசுரன்

பசி பசின்னு பகாசுரன் அலைந்து கொண்டிருக்கிறான்.  நிஜமாகவே  அரக்கர்கள் இருந்தார்களான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு.  ஆனால்-

இது ஒரு சந்தேகமா, நன்றாக என்னை உற்றுப் பார்; நான் தான் அந்த பகாசுரன்.  எனக்கு முடி சூடியவன்  நீதான்.  உன்னைக் கொன்று தின்ன எனக்கு அதிகாரங்கள் உன்னால் தான் வழங்கப்பட்டது.  எந்தக் காரணம் கொண்டும் நீ ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து விடக் கூடாது என்பது மட்டுமே என்னுடைய ஒரே நோக்கம்.  நித்தமும் உன்னை அலைக்கழிக்கவும், உன் உயிரை உறிஞ்சி எடுக்கவும் அங்கீகரித்து நீதான் எனக்கு வோட்டளித்தாய்.  அதிகாரக் கட்டிலில் அமர்த்தினாய்.

காவேரி என்றாய், நீர் கொடு என்றாய்; நான் நினைத்தால் நிச்சயம் கொடுக்க முடியும்.   மாறாய் ஏன் கொடுக்க வேண்டும் என்று தான் நான் கேட்கிறேன்.  நீர் கொடுத்தால் நீ விவசாயம் செய்வாய்; உன் நெற்களஞ்சியம் விளைந்து தலை நிமிர்ந்து நிற்கும். நான் எப்படி மீதேன் என்றும், ஹைட்ரோகார்பன் என்றும் உன் நிலத்தை பாழ்படுத்த முடியும்.  உன் குடி கெடுத்தால்தான், என் நோக்கம் நிறைவேறும்.  இதில் ஒரு ஆயிரம் விவசாயி மரித்தால், எனக்கு சிறிதேனும் பசியாறும்.  ஆனால், நாந்தான் பகாசுரன் ஆயிற்றே;  என் பசி முழுமையாய் ஆறி விடாது.  

உன் மாநிலத்தில்தான் அதிகமாய் மருத்துவ படிப்பிடங்கள் இருக்கிறது.  அதையும் விற்று தின்றால்தான், இன்னும் சிறிது பசியாறும்.  நீட் என்றேன்;  ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்தேன்.  அனிதாவின் மரணமும் என் பசியை ஆற்றிவிடவில்லை.  அதையும் மீறி நீ தேர்வுக்கு தயாரானாய்;  வேறு வழியில்லை.  உனக்கு அறிமுகமில்லாத இடத்தில் தேர்வு எழுத பணித்தேன்.  துணை வந்த தகப்பன் மரித்தான் என்ற செய்தி அறிந்தேன்;  அதற்கும் என் வயிற்றின் ஒரு ஓரம் இடமிருக்கிறது.  

நல்லா கேட்டுக்குங்க தமிழக மக்களே.  இந்த பகாசுரனின் முழக்கம் கேட்குதா;  அவன்தான் தெளிவா சத்தமாதானே சொல்லுறான்.  இவன் நீட்டுன்னு ஒரு தேர்வு வைக்கனும்னு சொன்னான்; எதுக்குன்னா நீ கடைபிடிக்கிற தேர்வு முறை தரமா இல்லைன்னு சொன்னான்.  நேத்துதான் தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி தமிழ் நாட்டு மருத்துவர்கள் தலை சிறந்தவர்கள் அப்படின்னு பேசியிருக்காரு.  இதுல யாரு பொய் சொல்லுறாங்கன்னு தெரியல.  நாம கடைபிடிச்சுட்டிருந்த தேர்வு முறையில்தான் இது வரைக்கும் மருத்துவர்கள் தமிழ் நாட்டுல படிச்சுட்டு இருந்தாங்க - தமிழிசை உட்பட.