Monday 23 January 2017

போராடு - வலி தாங்கு

உறவே, உன்னை நலமா என்று கேட்க மாட்டேன்.  நீ நலமாயில்லை என நானறிவேன்.  உன் அருகிருந்து உன்னை ஆறுதல்படுத்த ஆசை;  ஆனால் உன்னிலிருந்து பல நூறு மைல் தூரத்தில் நான் இருக்கிறேன். என்னுடைய பிழைப்பு இங்கு வி(தை)திக்கப்பட்டிருக்கிறது.  ஆனாலும், என் மனது நிறைய நீதான் இருக்கிறாய்.  

உறவே என்று அழைத்தாயே நீ யார் என்று கேட்கின்றாயா?  ரத்த பந்தம் இருந்தால் மட்டும்தான் உறவா;  சில காலமாகவே உன்னை என் மகளாக, மகனாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  2015 டிசம்பர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீ ஓடி, ஓடி உதவி செய்தாயே அப்போதிருந்தே நான் உன்னை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  பாரம்பரிய உரிமையாம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க நீ களம் கண்டபோது, உன் மீதான என் நம்பிக்கைகள் பெருகின.  போராட்ட களத்தில் உன் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கண்டபோது  பெருமிதம் கொண்டேன்.  உன்னை நம்பி குடும்பம், குடும்பமாய் களத்திற்கு வந்த போது, என்னில் என் மண்ணின் மீதான  பிணைப்பு அதிகமாயிற்று.  குழந்தைகள் முதல், பெண்கள் மற்றும் பெரியவர் வரை நீ பராமரித்த விதம், பாதுகாத்த முறை என்னை வியக்க வைத்தது.

உடலளவில் நான் வெகு தூரத்தில் இருந்தாலும், மனதளவில் உன்னருகே நானிருந்தேன்; மரினாவில் நீ கொடுத்தாயே அந்த டீயை பருகினேன்; அலங்காநல்லூர் கேட்டு கடையில் அந்த இரவில் உன்னோடு நானும் முழக்கமிட்டேன்; தமுக்கத்தில் உன் தோள் சாய்ந்து நான் உறங்கியது உனக்கு நினைவிருக்கும்; கோவை காந்திபுரத்திலும், ஈரோடிலும், சேலத்திலும், திருச்சியிலும், இன்னும் நான் சொல்லமறந்த, பெயர்கூட எனக்கு தெரியாத ஒவ்வொரு ஊரிலும் நான் உன்னோடு இருந்தேன்.  போராட்ட  களத்தை, பாதுகாக்க வந்த காவலரை, நீ பராமரித்த விதம், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு நீ தந்த மதிப்பு - எல்லாம் உலகமே வியந்து பாராட்டிய போதும், எனக்குள் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே இருந்தது.  அது நேற்று நிஜமாய் நடந்தேறி விட்டது.  சுய லாபத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக உன்னுடைய....மன்னித்துவிடு.... நம்முடைய போராட்டத்தை பகடை உருட்டி விளையாடி விட்டனரே.  இது நிகழ்ந்துவிடக் கூடாது என்றுதான் நான் பயந்திருந்தேன்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்; அத்தனை நாள் போராட்டத்திலும் உன்னோடு சிரித்துப் பெசிக்கொண்டிருந்தானே அந்த காவலன், நீ கொடுத்த டீயையும், பிஸ்கட்டையும் உண்டு களித்தானே அந்த காவலன், உன்மீது தடி வீசியபோது உனக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும்; எனக்கில்லை. அந்தக் காவலனின் மீது மறந்தும், உன் மனதாலும்கூட சபித்து விடாதே.  காரணம் என் அனுபவம்.  அதைக் கேட்க உனக்கு நேரமும், பொறுமையும் இருந்தால் தொடர்ந்து வா.

சில, பல ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலை சார்ந்த ஒரு போராட்டம்;  நான் அப்போது அந்த போராட்டத்தில்; நானும் ஒரு தொழிலாளி;  அருகே நின்று சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்தான் அந்த காக்கிச்சட்டைக்காரன்.  அறிந்தவன்தான், என் வயதுக்காரன்தான். எந்த வினாடியில் அவனுக்கு உத்தரவு கிடைத்ததோ, என்மீது வீசினான் அவன் கையிலிருந்த தடியை. நேற்று உனக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சி எனக்கும் நேர்ந்தது.

இதற்க்கு ஐந்தாறு மாதங்களுக்குப்பின், ஒரு பிற்பகல் நேரம் என் அறையின் கதவு தட்டப்பட்டது.  திறந்தால், "அண்ணே, அவருக்கு ரொம்ப ஒடம்புக்கு முடியல.  ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்.  வேற யாரும் பக்கத்துல இல்ல.  நீங்க கொஞ்சம் கூட்டிட்டு போறீங்களா", அந்தக் காவலனின் மனைவி இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்தாள்.  என்னுடைய சைக்கிளின் பின்னே அவனை அமர்த்தி, ஐந்து கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.  அதன்பிறகும் அவன் என்னுடன் பேசுவதில்லை.  இரண்டாண்டுகளுக்குப்பின், வேலை இட மாறுதலுக்காய் ஊரைவிட்டுப் போகும் போது என்னைப் பார்த்து கரம் குவித்துவிட்டுப் போனவன்தான்.  

அதனால்தான் சொல்லுகிறேன், உன்மீது தடி வீசியவனுக்கும் இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு உன்  சகோதரி காத்திருக்கிறாள்.  அவனுக்கும் உன் வயதில் ஒரு மகனோ, மகளோ இருக்ககூடும்.  உன் கரத்தை உடைத்தால்தான் அவன் வீட்டு அடுப்பெரியும்;  உன் தலையை பிளந்து ரத்தம் பார்த்தால்தான் அவன் குழந்தைக்கு பால் கிடைக்கும்; உன் வாகனத்தை தீயிட்டால்தான் அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.  அவனும் தமிழன்தானே; அவனுக்கும் வீரம் உண்டல்லவா.  அதைப் பரீட்சித்துப்பார்க்க நிராயுதபாணியாய் நீ மட்டும்தானே அங்கிருந்தாய்.  அதனால்தான் சொல்லுகிறேன் மறந்தும்கூட, மனதால்கூட அவனை சபித்துவிடாதே.

உன் உடலில் வலி ஏற்படுத்தினால், உன் மன உறுதியைக் குலைத்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவருக்கு உன் பதில் என்னவாய் இருக்கப் போகிறது என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்.  நான் உனக்கு எந்த அறிவுரையோ, ஆலோசனையோ சொல்லப் போவதில்லை.  எனக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டுமென்று உனக்குத் தெரியும் என்பது.  வானத்தையும் வில்லை வளைக்க முடியும் - வானளாவிய அதிகாரம் உன்னிடமிருந்தால்.  இன்று அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து - தங்களிடம் மட்டுமே அது என்றென்றும் இருக்கும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர்களிடமிருந்து - உன் கைக்கு எவ்விதம் மாற்றுவது என்ற வழிமுறையை எண்ணிப்பார்.  

                                                              "உலகம் உன் வசம்"

Saturday 21 January 2017

க...............க..............க.............?

பராசக்தி அப்புடிங்கிற ஒரு பழைய திரைப்படத்துல - சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகத் திரைப்படம் - கா கா கா அப்புடின்னு ஒரு பாட்டு வந்துச்சு.  இந்த க...............க..............க.............? அது இல்லை.   ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால அப்ப இருந்த மத்திய அரசாங்கம் மொழித் திணிப்பு செய்யுறாங்கன்னு சொல்லி, இப்ப நடக்குற மாதிரியே போராட்டாம்லாம், நடந்ததாகவும், ரயில் மறியல் செஞ்சதாகவும், அந்தப் போராட்டங்களின் பலனாக ஆட்சிக்கு வந்ததாகவும் சரித்திரம்லாம் இருக்கு.  அந்த கட்சியின் கொள்கைதான் மேல சொன்ன க...............க..............க.............?

இந்த கொள்கைய உயிர் மூச்சா வச்சிருக்குறதா சொல்லிக்கிற அந்த தலைவர்களும், அவங்களோட வழித் தோன்றல்களும் - இது பிரிஞ்சு போனவங்க, தனிக்கட்சி அமைச்சவங்க எல்லாரும் - இன்னைக்கு தேதியில, காசும், இன்னபிற etc etc ம் கொடுத்து ஆளுங்கள கொண்டு வந்து, பொதுமக்களோட சர்வ சுதந்திரத்தையும் சீர்குலைச்சு போராட்டம்கிற பேருல என்னனவோ பண்ணுற கூத்தையெல்லாம் பார்த்த நமக்கு............,

போராட்ட களத்தை தாங்களே சுத்தம் செஞ்சுக்குறாங்களாம்;  போக்குவரத்த சீர் பண்ணிக்கிறாங்களாம்;  கூட மாட இருக்குறவங்களுக்கு ஒத்தாசையா இருக்காங்களாம்; ரயில மறிச்சுட்டு, உள்ள இருந்த பயணிகளுக்கு சாப்பாடு, தண்ணி குடுத்து பாத்துக்கிட்டாங்களாம்; பொது சொத்துக்கு ஏதும் சேதம் பண்ணலையாம்; முக்கியமா கூட இருக்குற பொண்டு புள்ளைகள பத்துறமா பாத்துக்குறாங்களாம்.

முக்கியமா அவங்க பக்கத்துலையே அரசியல்வியாதிகள அண்ட
விடலையாம்.

போராட்டம்  பண்ணுறது, உரிமைய மீட்டேடுக்குறது எங்க டமை  அப்புடின்னு இறங்குன புள்ளைங்க ண்ணியமா, ட்டுப்பாடோட  நடந்துக்குறதெல்லாம் பாத்தா நம்ம ஊரும் நாடும் நிச்சயமா மத்த எல்லா மக்க மனுசருக்கும் ஒரு முன்னுதாரணம் அப்புடின்னு பெருமையா இருக்கு.

க...............க..............க.............? எங்க கொள்கை, உயிர் மூச்சு அப்புடின்னுல்லாம் சோடா குடிச்சு கத்துறவுங்களுக்கெல்லாம் மேல நின்னுட்டீங்கய்யா/நின்னுட்டீங்கம்மா.