Sunday 28 May 2023

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்.

 இந்த தலைப்பு மற்றும் கட்டுரை எந்த ஒரு தனி மனிதரையும் புண்படுத்தும் நோக்கிலோ அல்லது அவமானப்படுத்தும் நோக்கிலோ எழுதப்பட்டதல்ல என்பதையும், நான் கடவுள் நம்பிக்கைக்கோ அல்லது ஜோதிடம் குறித்த நம்பிக்கைக்கோ எதிரானவன் அல்லவென்பதையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோதிடம் என்பது ஒரு கலை என்பதையும், அது காலம் நேரம் மற்றும் கிரக நிலை ஆகிய அனைத்தும் சரியான அளவில் கணிக்கப்பட்டு/கணக்கிடப்பட்டு ஒரு மனிதனின்  எதிர்காலம் அளவிடப்படுகிறது என்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  இத்தகைய ஒரு கலை இன்று பல அரைகுறை மற்றும் ஏமாற்று ஜோதிடர்கள் கையில் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.  

முதலில் ஒரு மனிதனின் பிறந்த நேரம் தவறாக கணிக்கப்பட்டால் என்னாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கதை சொல்லப்பட்டு வருகிறது.  ஒருவேளை அது உண்மையானதாவும் இருக்கலாம், அல்லது புனையப்பட்டதாகவும் இருக்கலாம்.  இளவரசன் சித்தார்த்தன் பிறப்பின் போது அவனுடைய ஜாதகம் கணிப்பதற்காக நாட்டின் சிறந்த ஜோதிடர்களை அழைத்திருந்தான் அரசன் சுத்தோதனன்.  குழந்தையின் தலை தெரிந்ததும் ஒரு எலுமிச்சம் பழத்தை பிரசவ அறையின் உள்ளிருந்து வெளியில் எறியவும் ஒரு பணிப்பெண் அமர்த்தப்பட்டாள்.  அறையின் உள்ளிருந்து எலுமிச்சம் வெளியில் வந்து விழுந்ததும் அங்கிருந்த ஜோதிட சிகாமணிகள் அனைவரும் அவசரமாக அந்த நேரத்தை குறித்துக் கொண்டு கணக்கிட ஆரம்பித்தார்கள்.  அனைவரும் ஒன்று சொன்னாற்போல் இளவரசன் மிகப் பெரிய பேரரசனாக வருவான் என்றும், மிகப் பெரும் சாம்ராஜ்யம் நிறுவுவான் என்றும் சொன்னார்கள். ஒருவர் மட்டும் அவன் ஒரு மிகப் பெரும் துறவியாக மாறுவான் என்றும் பல்லாயிரக்கணக்கானோர் அவன் நிறுவும் ஒரு சமயத்தை பின்பற்றுவார்களென்றும் கணித்தார்.  கோபமடைந்த அரசன் அந்த ஜோதிடரை சிறையிலடைத்தான்.  காலம் சுழன்றது; மணமுடித்து, குழந்தையும் பிறந்தபின், மனைவி யசோதரையையும், மகன் ரகுலனையும், அரண்மனை வாழ்வையும் துறந்து சித்தார்த்தன்  போதி மரம் அடைந்ததும், புத்தம் என்ற சமயம் நிறுவியதும், இன்றும் கோடிக்கணக்கானோர் அந்த சமயத்தை பின்பற்றுவதும் நாம் அனைவரும் அறிந்ததே.  இந்த நிலையில், சிறைப்படுத்தப்பட்ட ஜோதிடரை, அரசன் சுத்தோதனன் அழைத்து எவ்வாறு அவர் மட்டும் மிகச் சரியாக இளவரசனின் எதிர்காலம் கணித்தார் என்று கேட்டான்.  அப்போதுதான் அந்த ஜோதிடர் பணிப்பெண் எறிந்த எலுமிச்சை பிரசவ அறையின் கதவில் பட்டு தெறித்து, மீண்டும் அறைக்குள்ளே சென்றதையும், அதை தான் கவனித்ததையும், அந்த பணிப்பெண் இரண்டாம் முறை அந்த எலுமிச்சையை எறிந்த நேரத்தை மற்ற ஜோதிடர்கள் கணக்கில் கொண்டதால், அவர்கள் கணிப்பு தவறானதையும் கூறினார்.  ஒரு சில நொடிகள் முன்பின் சென்றாலும் ஜோதிட கணிப்பு தவறாக செல்வதற்கு வாய்ப்பிருப்பதற்கு உதாரணமாக இந்தக்  கதையை கூறுவர்.

நேரம் சரியாக, துல்லியமாக இருந்தாலும் ஜோதிடம் பொய்ப்பதும் உண்டு என்பதற்கு நான் கண்ட நிகழ்கால உதாரணம் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.  என்னுடைய நண்பர்  ஒருவர்;  அவருக்கு இரண்டு மகன்கள்.  அவருக்கு ஜோதிடம் குறித்த நம்பிக்கை உண்டு.  அவருக்குத் தெரிந்த ஒரு ஜோதிடரை கலந்தோசிக்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டார்.  மூத்த மகனுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்.  என்னிடம் பேசும் போது, "ரொம்ப அருமையான இடம்.  என் பையனுக்கும், பெண்ணுக்கும் எட்டு பொருத்தம் இருக்கு.  நம்ம ஜோதிடர் சொன்னா சரியா இருக்கும்," என்றார்.  திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தது.  ஒன்றரை ஆண்டுக்குள் விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறிவிட்டனர் இருவரும்.  இதற்கிடையில், இளையவன் சொந்தத்திலேயே ஒரு முறைப்பெண்ணை விரும்பினான்.  அந்த பெண்ணுக்கும், இவனுக்கும் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்த ஜோதிடர் கூறிய பின்னும் அனைத்தையும், அனைவரையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இன்றும் - பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது - அவர்கள் இல்லறம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.  மூத்தவனின் நிலையை பார்த்து வருந்திய என்னுடைய நண்பர்  அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய தீர்மானித்தார்.  பெண்ணும் பார்த்தாகி விட்டது.  அந்தப் பெண்ணுக்கும் இரண்டாம் திருமணம்.  இம்முறை, "அந்த ஜோசியன் ஒரு பிராடுப் பய.  இவன் ஜாதகத்தில்  இரண்டு திருமணம் இருக்காம்.  சொல்லாமயே விட்டுட்டான்.  இப்போ ஒரு அருமையான ஒரு ஜோசியரை பாத்துட்டு இருக்கேன்.  அவர் இந்த இரண்டாம் திருமணம்தான் நிலைக்கும் என்று சொல்லிட்டார்", என்றார்.  இப்போது முதல் ஜோதிடர் பிராடு ஆகிவிட்டார்;  இரண்டாம் ஜோதிடர் அருமை ஆகிவிட்டார்.  கொடுமை என்னவென்றால், இந்த இரண்டாம் திருமணமும் நிலைக்கவில்லை என்பதுதான்.  இத்தனைக்கும் தன் இரண்டு மகன்களுக்கும் துல்லியமாக பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் எழுதினார் என்பது முக்கியம்.  

புலிப்பாணி சித்தர்தான் ஜோதிட சாஸ்திரம் எழுதினார் என்பது சரித்திரம்.  ஆனால், இந்த ஜாதகக் கட்டங்களையும் மீறி, அவற்றின் கணிப்பையும் மீறி வாழ்வை வென்றவர்கள் உண்டு.  அதைத்தான். "விதியை உன் மதியால்  வெல்வாய் என்பதே உன் விதியாகும்," என்று பாடினார் ஒரு சித்தர்.  

என்னைப் பொறுத்தவரை, என் வாழ்வில் நான் கண்ட ஒரு மிகச் சிறந்த ஒரு ஜோதிடர் என் தாய்மாமன்.  அவர் ஜோதிடத்தை தொழிலாய் கொண்டவரல்ல; ஒரு பொழுதுபோக்காய்  அதனை கற்றவர்.  அவர் என் கையை/கைரேகையை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், "மாப்ளே, நீ கடல் கடந்து போற பாக்கியம் இருக்கு."   "போங்க மாமா.  நான் படிச்ச படிப்புக்கும், பிழைப்புக்கு நானெல்லாம் எங்கே கடல் கடக்குறது ," என்பேன்.  அவர் சிரிப்பார்.  ஒரு முறை என்னுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, "நாப்பது வயசு வரைக்கும் உனக்கு நாய் படாத பாடுதான் மாப்ளே," என்றார்.  நானோ, "அதுக்கப்புறம் வாழ்க்கை நல்லா இருக்குமா மாமா," என்றேன்.  "சேச்சே, அதுக்கப்புறம் சொறிநாய், வெறிநாய் படாத பாடு படுவே," என்றார்.  நான் நாற்பது வயதில்தான் கடல் கடந்து ஆஸ்திரேலியா வந்தேன்.  துரதிர்ஷ்டவசமாக என் மாமா இன்று உயிரோடில்லை.

எனவே, ஜோதிடம் என்பது பொய்யல்ல என்பதற்கும் உதாரணம் உண்டு; அந்த ஜோதிடத்தை, கட்டங்களின் கணிப்பை மீறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களும்  உண்டு.  இன்றும் தங்களின் மகன், மகளுக்கு வரன் தேடும் பெற்றோர் முதலில் ஜாதகம் பார்ப்பதை ஒரு கடமையாக கொண்டுள்ளனர்.  இதில் வேறொரு சிக்கலும் உள்ளது.  தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் வெவ்வேறு பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன. திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம், கௌரி பஞ்சாங்கம் என்றிருக்கின்றன.  ஒரு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகம் கொண்டு மற்றொரு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டால்  அந்த ஜாதகமே தவறானதாகக் காட்டுகிறது.  எனவே, இரண்டு ஜாதகங்களை கையிலெடுக்கும்போது, அவை இரண்டுமே ஒரே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மேலும், ஜோதிடரிடம் பொருத்தம் மற்றும் எதிர்காலம் மட்டும் கேட்காமல், கடந்த காலத்தையும் கேட்டால் (கடந்த கால கணிப்பு துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு சில ஜோதிடர்கள் தங்கள் வார்த்தை திறமையால் விளையாடுவார்கள்) அந்தக் குறிப்பிட்ட ஜோதிடரின் உண்மைத் தன்மை வெளிப்படும்.  ஜோதிட/ஜாதக நம்பிக்கை இல்லா ஒரு நண்பர் தன்னுடைய மகளுக்கு வரன் தேடும்போது ஒரு நல்ல ஜோதிடரை அறிமுகப்படுத்தும்படி கேட்டார்.  நானோ, "உங்களுக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கையில்லையே," என்றேன்.  அதற்கு பதில் அவருடைய மனைவியிடமிருந்தது; "இப்போ எல்லாரும் பாக்குறாங்களே.  நாம பாக்கலையின்னா எப்படி.  நல்லாயிருக்காதே," என்றார்.  'எல்லாரும் பார்ப்பதால்' மட்டுமே நாமும் பார்க்க வேண்டுமா?  எனக்குப்  புரியவில்லை. 

மேற்கண்ட உதாரணங்களை, உண்மைகளை கருத்தில் கொண்டு ஜாதகம்/ஜோதிடம் பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.