Thursday 18 November 2021

ஆஞ்ஞான்

 எங்க ஆஞ்ஞான் கடைசி மூச்சு காத்துல கலந்து இன்னியோட அஞ்சு நாளாச்சு.  மனுச மனசுக்கு தெரியுதா; சாயந்திரம் நாலு மணியானா கையி அலைபேசி எடுத்து பிசைய ஆரம்பிக்கிது - ஆஞ்ஞானோட பேச.  ஈமக்கிரியைக்கு கெடத்தியிருந்த  ஆஞ்ஞான் உருவம் மனசவிட்டுப் போக மாட்டேங்கிது.  அப்படியே எந்திரிச்சு உக்காந்திரமாட்டாகளான்னு அப்ப துடிச்ச மனசு இன்னும் அப்படியே  துடிக்கிது.   

கனவு காணுறது வெற்றிக்கான முதல் படின்னு சொன்னாரு கலாம்;  ஆனா நான் இப்ப காணுற கனவுலயெல்லாம் ஆஞ்ஞான்தான் இருக்காக;  அவுக நெனப்பு மூச்ச முட்டும்போதெல்லாம், ஒவ்வொரு நொடியவும் முழுங்க முடியாம தவிக்கிறேன்.  

மனசும், கனவும்தான் ஆஞ்ஞானை சுத்திக்கிட்டு இருக்குது;  உடம்போ  எட்டாத தூரத்துல இருக்கு.  

கால எந்திரம் கண்டுபிடிச்சவுக யாராவது இருந்தா சொல்லுங்க;  நான் பொறந்தப்ப எங்க ஆஞ்ஞான் எப்படியெல்லாம் என்னை கொஞ்சியிருப்பாகன்னு பாக்கணும்.  எங்கள ஆளாக்க அவுக எம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சாகன்னு பாக்கணும். 

ஆறுதல் சொல்ல ஆயிரம் பேரு  இருந்தாலும் அவுக இல்லைங்கிற காயம் ஆற எவ்ளோ நாளாகும்னு தெரியல;  காலம்கிற மருத்துவன்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டேன்.  வேறென்ன சொல்றதுன்னு தெரியல.  ஆறுதல் சொன்னவுகளுக்கும், அவசர நேரத்துல உதவி பண்ணவுங்களுக்கும் நன்றி.

(ஆஞ்ஞான் என்ற சொல் தந்தையை விளிக்கும், ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கும் முன்னால் வரை வழக்கத்திலிருந்த ஒரு தமிழ் சொல்)  

அக்னி கலசம்?

 கான முயலெய்த அம்பினில் யானை 

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

ஜெய் பீம் திரைப்படம் பார்த்த பொது இந்தக் குறள்தான் நினைவுக்கு வந்தது.  பாதிக்கப்பட்ட செங்கேணியிடம் காவல்துறைத் தலைவர்  (டி.ஜி.பி.?) பேரம் பேசும்போது அந்தப் பெண் கூறும் பதில், "போராடித் தோத்துப் போயிட்டேன்னு பெருமையா சொல்லிக்கிறேன்.  ஆனா கொலைகாரன் குடுக்குற காசுல எம் பிள்ளைகளை வளக்க மாட்டேன்".   

பொதுவாக  இந்த முன்னணி நடிகர்கள், ஒரு படத்துல நடிக்கும் போது முடிந்த வரைக்கும் தங்களோட நாயகப் பகட்டுக்கு பங்கம் வராதவாறு பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.  உண்மைக்கு அருகில் சென்று ஒரு பாத்திரம் செய்த விதத்தில் நடிகர் சூர்யா நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.   அதையும் மீறி ஒரு சில இடங்களில் நாயகத்துதி இருப்பினும், அதுவும் அடக்கியே  வாசிக்கப்பட்டிருக்கிறது.  சமுதாயத்தால்  புறந்தள்ளப்பட்ட ஒரு சமூகம்/அதுவும் சாதி அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அதிகார வர்க்கம் எப்படி நடத்தும் என்பதை முதல் ஒரு சில காட்சிகளிலேயே சொல்லி ஒரு பெரிய தாக்கத்திற்கு நம்மை இந்த இயக்குனர் தயார் செய்து விடுகிறார்.  காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்து எத்தனையோ முறை படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறோம்.  சமீபத்திய உதாரணம் - இதற்க்கெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டுமா என தெரியவில்லை.  தூத்துக்குடி சம்பவம் நமக்கு மிக அருகாமையில் நடந்தது;  யோகியின்(?) உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிணத்தை காவலர்களே எரித்தது அதிகாரத் திமிரின் உச்சம்.  இதையெல்லாம் கடந்து, காவல் நிலைய சித்திரவதைகளை நம்மை அருகிருந்து பார்க்கும் ஒரு உணர்வைக் கடத்தியிருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றுவிட்டார்.  உண்மைச்  சம்பவம் போலவே வழக்கறிஞர் சந்துரு அந்தப் பெண்ணுக்கு/கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவுக்கு நீதி பெற்றுத்  தந்துவிட்டார்.  ஆனால், இந்தப் பதிவின் நோக்கம் இந்தத் திரைப்படத்தை விமர்சிக்கும் நோக்கமில்லை.  நம்ம சின்ன மா(ங்கா)ம்பழம்  மருத்துவ(அன்பு)மணியின் அரசியல் அசிங்கம் பற்றிப்  பேசுவது.

போன தேர்தலிலேயே/அவர்களே பெருமையாக சொல்லிக்கொள்ளும் வன்னியர் பெல்ட்டில்  குப்புற விழுந்து மண்ணைக் கவ்விய சின்ன மா(ங்கா)ம்பழம், ஒரு வழியாக குறுக்கு வழியில் மாநிலங்கவையில் நுழைந்து விட்டது.  நுழைந்தது, நுழைந்ததுதான்;  அதன் பிறகு எத்தனை முறை அந்த பாராளுமன்றக்  கூட்டத்துக்குப் போனது என்பதை ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் கழுவி ஊற்றி விட்டன.  அது போக எடுபிடி அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி பெற்ற 10.5% இட ஒதுக்கீட்டுக்கும் நீதிமன்றம் பெப்பப்பே சொல்லிவிட்டது.  இப்படி எல்லாராலும் மறக்கப்பட்ட/புறந்தள்ளப்பட்ட மா(ங்கா)ம்பழம் எப்படியாவது பேசு பொருளாகிவிடவேண்டும் என்ற ஆத்திரத்தில், வாக்கு வங்கி  அரசியல் நடத்தும் நோக்கில் ஜெய் பீம் திரைப்படத்தை கையில் எடுத்தது சின்ன மா(ங்கா)ம்பழம்;  புலிவால் பிடித்தவன் போல ஆகிவிட்டது வலியப்போய் கையில் எடுத்த விஷயம்.  இப்போது சின்ன மா(ங்கா)ம்பழம் நோக்கி பல்வேறு தரப்பினரும் கொடுக்கும் எதிர்க்குரல் பார்த்தால், அடுத்த தேர்தலில் சின்ன மா(ங்கா)ம்பழம் தேர்தல் வைப்பு நிதியை (deposit) இழக்கும் நிலை வரலாம் என்று தோன்றுகிறது.  அப்படி ஒன்று நடந்தால் அது ஒரு விதத்தில் தமிழகத்தின் சாதி அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டின் முதல் அடியாக இருக்கும்.

வழக்கம் போல ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  அக்னி கலசம் - இந்த வார்த்தையில் 'க்' வருமா, வராதா?  தயவு செய்து யாராவது சந்தேகம் தீர்க்க வேண்டுகிறேன்.  அப்படி உங்கள் யாருக்கும் தெரியாவிட்டால், தயவுசெய்து சின்ன மா(ங்கா)ம்பழத்திடம் கேட்டுச்  சொல்லுங்கள்.