Tuesday 26 March 2024

ஏன் மோடிக்கு/பாஜகவுக்கு ஓட்டுப் போடணும்.

இதுவரைக்கும் மோடியையும்/பாஜகவையும் ரொம்பத்தான் கழுவி ஊத்திட்டமோன்னு ஒரு குற்றவுணர்ச்சி வந்துட்டதால, கொஞ்சம் ஆழமா/அகலமா சிந்தனைய தூண்டி விட்டேன். அது பாத்தா எங்கங்கையோ போகுது. அப்படியோ போனத இழுத்துப்பிடிச்சா ...... முடியல. அதான் முடிஞ்சவரைக்கும் மோடிக்கு ஆதரவா ஒரு பதிவு. இதுலயும் குத்தம் குறை ஏதும் இருந்தா உங்க வீட்டுப் பிள்ளையா என்னை நெனச்சு மன்னிக்கணும்னு கேட்டுக்குறேன்.

 மொதல்ல மோடியோட ஒரு சாதனைக்கு நாம எல்லாரும் ஒரு வணக்கம் வச்சே ஆகணும்.  2014-ல இருந்து 2024 வரைக்கும் கோடிக்கணக்கானவர்களை நம்ப வச்சு ரெண்டு தேர்தல் ஜெயிச்சுருக்காரே அதுவே ஒரு பெரிய சாதனை.  இன்னும் சில, பல கோடி பேரு  அவரை அப்படியே நம்பிக்கிட்டு இருக்கிறதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சாதனை.  வெறும் பொய்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பத்தை  எப்படி ஐயா நம்புறீங்க அப்படின்னு நானும் பல பேரை கேட்டும் சரியான பதில் கிடைக்கலை. அப்புறம் அவரோட சாதனைகளை பட்டியலிட்டு ஒட்டு கேப்போம்.

மொதல்ல விலைவாசி உயர்வு; 400 ரூவா சிலிண்டர் 1000 ரூவாவாச்சு; அம்பது ரூவா பெட்ரோல் 100 ரூவாவாச்சு;  20 ரூவா அரிசி 80 ரூவாவாச்சு; எல்லாம் போக அமெரிக்கா டாலர் pole vault சாதனை படைச்சது.  எதிர் கட்சிகள் எல்லாம் சேர்ந்து நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டும், நம்புற மாதிரி எப்பவாச்சும் பதில் சொன்னாரா? அப்படியே சொன்னாலும் 75 வருஷம் பின்னால போயி நேருவைத்தான் கை காமிச்சாரு.  ஒரே ஒரு தடையாவது பத்திரிக்கைகளை சந்திச்சு பதில் சொல்லிருக்காரா?  கடைவாய்ப் பல்லு  வரைக்கும் கடிச்சுக்கிட்டு அமைதி காத்திருக்காரு.  அந்த சாதனைக்காகவாவது அவருக்கு ஓட்டுப் போடணும்னு பணிவோட கேட்டுக்கிறேன். அதும் போக, ஏதோ போனாப்  போகுதுன்னு சில பல ரூவா விலையை குறைச்சிருக்காரே, அம்மாடி எவ்வளோ பெரிய சாதனை.

சில, பல லட்சம் கோடிகள் - 100 லட்சம் கோடின்னு சொல்றாங்க - கடன் வாங்கிருக்காரு.  அவரென்ன கடன் வாங்கி சொந்தமா சொத்து பத்தா வாங்குனாரு; அதானிய உலக பணக்காரர்கள் பட்டியல்ல சேத்துருக்காரு. இது ஒரு குத்தமாய்யா. இந்த அமலாக்கத்துறை, சிபிஐ  மாதிரி பலப் பல துறைகளை எப்படில்லாம் பயன்படுத்தி தன்னோட சொந்தக் கட்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி பணம் சேக்குறதுன்னு எப்படின்னு மத்தவங்களுக்கு ஒரு உதாரண புருஷரா இருந்துருக்காரு.

அத்வானி காலத்துல இருந்து பூச்சாண்டி காமிச்சாங்களே ராமருக்கு கோயிலுன்னு; இவரு எவ்வளவு விவரமா பாஜக - வுக்கு ஒரு பிரச்சார தலைமையகம் கட்டி அதுக்கு ராமர் கோயிலுன்னு பேரு வச்சு எவ்வ்வ்வ்ளோ பேரை முட்டாள் ஆக்கிட்டாரு.  அடேங்கப்பா, இதுக்கு மேல என்னய்யா சாதனை வேணும்.

ஒருவேளை, எதிர் கட்சி தரப்பு இந்தத் தேர்தல்ல ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டா என்னல்லாம் விபரீதம் நடக்கும்னு கற்பனை பண்ணி பாத்தேன்.  அப்போ இந்த முந்தைய மோடிக்கள் அல்லது மல்லையா மாதிரி அதானியும், அம்பானியும் நாட்டை விட்டு ஓடிப் போறதுக்கு வாய்ப்பு இருக்கு.  அப்படி நடந்துட்டா, இந்த ஸ்டேட் பேங்க் ஆப் வட்டிக்கடையை நம்ம ஜி சுரண்டியெடுத்து குடுத்த காசெல்லாம் திரும்பி வராது. அதும் போக, அதானிக்கு பட்டா போட்டுக் குடுத்த துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் எல்லாம் என்னாகும்னு தெரியாது.  

மேற்சொன்ன காரணங்கள்ல உள்ள நியாய, அநியாயங்களை நீங்களே எடை போட்டுப் பாத்து ஒட்டுப் போடுங்க மக்களே.