Friday 22 September 2023

எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோணுதா!

 ஒரு ஊருல ஒரு மனுசன் (வேற எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல).  ஊருக்குள்ள ஓரளவு நல்ல பேரு; அதும் போக கொஞ்சம் கை வைத்தியமும் தெரியும்.  சின்னச்சின்ன உடல்நலக் குறைவுக்கெல்லாம் கை வைத்தியம் பாப்பாரு.  போக நல்லது, கேட்டது எதுன்னாலும் இவருகிட்ட எல்லாரும் வந்து ஆலோசனை வேற கேப்பாங்க.  விஷயம் என்னன்னா, இவருக்கு மனைவி கிடையாது;  தவறிட்டாங்க.  ஒரே மகன்; பையனுக்கு தாயில்லா குறை தெரியாம வளத்தாரு.  பையனும் வளந்துட்டான்.  இந்த நிலையில இவரு தொலை தூரம் போகிற ஒரு வேலை வந்துச்சு.  பையனை தனியா விட்டுட்டு போகணுமேன்னு கவலை.  ஊருல எல்லாருகிட்டயும் பையனை பாத்துக்குங்கன்னு சொன்னாரு.  எல்லாரும் ஒண்ணு சொன்னாப்புல கண்டிப்பா பாத்துக்கிறோம்னு உறுதி குடுத்தாங்க.  "எங்க குடும்பத்துல ஒருத்தரா பாத்துக்கிறோம்;  எங்க வீட்டுலயே சாப்பிட்டு எங்க வீட்டுல ஒரு ஆளா இருக்கட்டும்",  அப்படின்னு எல்லாரும் சொன்னாங்க.  இவருக்கும் சந்தோஷம்.  மகனைக் கூப்பிட்டு, "மகனே இந்த ஊருல ஒவ்வொரு வீட்டுலயும் நமக்கு ஒரு வேளை சாப்பாடு இருக்கு.  அதை விட்டுறாத", அப்படின்னு சொல்லிட்டு ஊருக்குப் போனாரு.

ஊருக்குப் போனா, போன மாதிரியே இருக்க முடியுமா;  போன வேலை முடிஞ்சு மனுஷன் திரும்பி வந்தாரு.  ஊருல ஒரு ஆளு கூட இவருகிட்ட முகம் குடுத்து பேச மாட்டேங்கிறாங்க.  இவருக்கு ஒண்ணும் புரியல; பையனைக் கூப்பிட்டு என்ன விவரம்னு கேட்டாரு.  பையனும், "நீங்க ஊருக்குப் போனதில இருந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீட்டுல சாப்பிட்டேன்", அப்படின்னு சொன்னான்.  "ஏல கூறு கெட்டவனே.  ஒவ்வொரு வீட்டுலயும் நமக்கு சாப்பாடு இருக்குன்னா, அதுக்கு அந்த அளவு மரியாதை இருக்குன்னு அர்த்தம். அந்த மரியாதையை விட்டுறாதன்னு சொன்னேன்.  நீ மொத்த மரியாதையையும் கெடுத்து வச்சிருக்க", அப்படின்னு வருத்தப்பட்டார்.    

அதே மாதிரிதான் இங்கயும் நடந்துருக்கு; ஊரான் வீட்டு நெய்யே அப்படின்னு (முழுசா சொல்ல முடியாத சொலவடை அது) நெனச்ச நேரமெல்லாம், எடுறா ஏரோபிளானை அப்படின்னு ஊரு ஊரா/நாடு நாடா சுத்துனாரு நம்ம ஜி.  இதுல எல்லா நாட்டு தலைவரும் இவருக்கு ரொம்ப மரியாதை குடுக்குறாங்க; இவருக்கு எல்லாரும் நெருங்கிய நண்பர்கள் அப்படின்னெல்லாம் வடை சுட்டு, சுட்டு சுட்டாங்க;  இப்ப எல்லா வடையும் ஊசிப் போச்சு.  

இங்க ஜி20 மாநாடு முடிச்சு போற வழியில, இந்தியாவுல பத்திரிகை சுதந்திரமே இல்லைன்னு பேட்டி குடுத்துட்டுப் போறாரு ஜோ பைடன். இப்போ கனடா பிரச்சினை பத்திக்கிட்டு எரியுது.  போதாமைக்கு இந்த சீனாக்காரன் வேற விளையாட்டு வீரர்களுக்கு விசா குடுக்க முடியாதுன்னு ஒரு குண்டைப் போடுறான்.  என்னாடா விஷயம்னா அருணாச்சலப்பிரதேசம் ஏற்கனவே சீனாவோட ஒரு பகுதிதான்.  அங்க இருந்து வாரவனுக்கு நான் ஏண்டா விசா குடுக்கணும்னு கேக்குறான்.  ஏற்கனவே, அருணாச்சலப்பிரதேசத்துல சீனா எல்லை தாண்டி வந்துட்டான்னு ராகுல் சொன்னப்போ, அப்படி ஒண்ணு நடக்கவே இல்லை.  எங்க அம்பத்தாறு இன்ச் பிரதமர் ஆட்சியில ஒரு இன்ச் நிலம் கூட நாங்க விட்டுக் கொடுக்க  மாட்டோம்னு வீர வசனம் பேசினாங்க.  அதெல்லாம் இப்போ ஞாபகத்துக்கு  வந்து தொலைக்குது.  மொத்தத்துல அடுத்த வீட்டு விருந்தும், நட்பும் நாம ரொம்ப நெருங்கிப் போனா விலகிப் போகும். ஏன்னா, ரொம்ப நெருங்கினா நம்ம பலவீனம் பல்லிளிச்சிரும்.  அப்படித்தான் நம்ம ஜி-யோட பலவீனம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கு.  

வழக்கம் போல ஒரு சந்தேகம்.  எதிர்க்கட்சி கூட்டணி இந்தியா அப்படின்னு பேரு வச்சதும், நாட்டோட பேரையே பாரத்னு மாத்துறேன்னு கெளம்பிட்டாங்க. கேட்டா, இந்தியா அப்பிடிங்கிற பேரு வெளிநாட்டுக்காரன் குடுத்தது அப்படின்னு கம்பி கட்டுறீங்களே எசமான்.  இந்த மின்சாரம், கார், ட்ரெயின், ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், கம்ப்யூட்டர், ஊரான் வீட்டு காசுல வாங்கிட்டு ஏறி சுத்துறீங்களே அந்த ஏரோபிளேன் எல்லாமே வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்புதானே எசமான்.  எல்லாத்துக்கும் மேல, இந்த ஆஸ்பத்திரி, அங்க வைத்தியம் குடுக்குற டாக்டருங்க, அவங்க படிப்பு எல்லாம் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்புதான்; போதாமைக்கு இப்ப இருக்குற மூத்த, சிறப்பு வைத்தியம் குடுக்கிற டாக்டருங்கல்லாம் நீங்க கொண்டு வந்த நீட் தேர்வு எழுதாதவுங்க.  அப்ப  உங்களுக்கு உடம்புக்கு ஒரு நல்லது, கெட்டது  வந்தா நீங்க ஆஸ்பத்திரிக்கு போக மாட்டீங்களா எசமான்? 

Thursday 24 August 2023

மாப்பிள்ளை முறுக்கு

 எங்க ஊர்ப்பக்கம் முந்தி நடந்த ஒரு சம்பவம் இது.  ஊருல பெரிய பண்ணையார்; அவ்ளோ பெரிய மனுசனா இருந்தாலும், கொஞ்சம் நல்லவரு கூட.  (எத்தனை பணக்காரன் நல்லவனா இருக்கான்னு தெரியல)  இவருக்கு ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன்.  ரெண்டு பொண்ணுக்கும் நல்ல வசதியான இடமா பாத்து கல்யாணம் பண்ணிவைச்சாரு.  சின்ன பொண்ணுக்கு தலை தீபாவளி; சம்பந்தி வீட்டுக்கு வில்லு வண்டி அனுப்பி வச்சு பொண்ணு, மாப்பிள்ளையை அழைச்சாரு.  அவங்களும் வண்டியேறி வந்தாங்க.  வண்டி பண்ணையாரு ஊருக்கு வந்துருச்சு;  வீட்டு வாசலுக்கு வண்டி வந்து நின்னுச்சு.  சந்தர்ப்ப வசமா பக்கத்து ஊருல ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்ல பண்ணையாரு போயிருந்தார். பண்ணையார் மனைவியும், ரெண்டு  பையன்களும் வாசலுக்கு வந்து மாப்பிளையை வரவேற்றாங்க.  என்னய்யா அதிசயம், மாப்பிள்ளை முகத்தை திருப்பிக்கிட்டாரு; என்னன்னா பண்ணையார் நேருல வந்து வரவேற்க்கணுமாம்.  அப்பத்தான் வண்டியை விட்டு இறங்குவேன்னு சொல்லிட்டாரு.  ஏன்னா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பெரிய மாப்பிளையை நேரடியா பண்ணையாரு வந்து கூட்டிட்டு போனாருன்னு இந்த மாப்பிளை பையனுக்கு யாரோ சொன்னாங்களாம், அப்புறம் யாராரோ வந்து சமாதானம் பண்ணி, வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனாங்களாம்.

இங்க ஒருத்தரு அந்த மாப்பிளை முறுக்குக்கு இணையா, ஏரோபிளேனுக்குள்ள உக்காந்துக்கிட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்காரு.  கடைசியில போனா போவுதுன்னு துணை அதிபர் வந்து கூட்டிட்டு போனாராம்.  என்ன வித்தியாசம்னா, பண்ணையார் மாப்பிளைக்கு வண்டி அனுப்பிச்சு கூப்பிட்டாரு. இவரு மக்கள் வரிப்பணத்துல ஏரோபிளேன் வாங்கிட்டு போறாரு.  இதுல பண்ணையாரு காதுக்கு, மாப்பிளையோட முரண்டு விஷயம் போனதும், அவரு கெட்ட வார்த்தையில திட்டுனதையெல்லாம் இங்க சொல்ல முடியாது. இவருக்கு என்னவெல்லாம் திட்டு விழுந்துச்சுன்னு யாருக்கு தெரியும்.  அதும் போக மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்கிறது சம்பிரதாயம்.  இவரை எதுக்கு மாநாட்டுக்கு அழைச்சாங்கன்னு யோசிச்சு பாக்கணும். நாலு நாட்டு அதிபருங்க சேர்ந்து முக்கியமான சமாச்சாரங்களை யோசிச்சு பேசுவாங்க; எல்லாரும் மொத்தமா முட்டு குடுத்து பேசிக்கிட்டே இருந்தா ஒரு அயர்ச்சி வரும்ல; அப்ப ஒரு கோமாளி இருந்தா பொழுது நல்லா போகும்னுதான் இந்தாளையும் கூப்பிட்டு வச்சுக்கிறது ஒரு பழக்கமா போச்சு.  அதுவும் ஊரான் காசுல வாங்குன பிளேன் இருக்குன்னு சும்மா, சும்மா சுத்திக்கிட்டே இருந்தா எவன் மதிப்பான்.  அமெரிக்க பாராளுமன்றத்துல பேசுனாருன்னு பெருமை பேசுற ஊடகம் ஏதாவது, அந்த பாராளுமன்றத்துக்கு எதுத்தாப்புல Crime Minister of India அப்படின்னு டிஜிட்டல் போர்டு வச்சதை பத்தி பேசுச்சா.  ஏன், இதே  தென்னாப்பிரிக்காவுல நம்ம "ஜி"யை டிராகுலா அப்படின்னு சித்தரிச்சு படம் வச்சாங்களே அதை யாராவது பேசுனாங்களா. 

இவரு பிரிக்ஸ் மாநாட்டுக்கு போனதுல ஒரே ஒரு சாதகமான விஷயம், நம்ம விண்வெளி விஞ்ஞானிகள் சந்திரயான் 3 யை பத்திரமா நிலாவுல தரையிறக்கிட்டாங்க. 



Saturday 22 July 2023

பேய்கள் அரசாண்டால் - பிணம் தின்னும் சாத்திரங்கள்.

 அவன் பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டான் அந்த முண்டாசுக் கவிஞன்.  அப்படியேவா நடக்கணும்.  எல்லாத்தையும் அரசியலாக்கிப் பார்த்தால் என்னாகும் என்பதற்கு மணிப்பூர் ஒரு சாட்சி.  ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் எப்படியோ மூடி (மோடி) மறைத்துவிட்டார்கள்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்துவிட்டார்கள்.  இப்போது வீடியோ வெளியானவுடன் பதறிக் கொண்டு இரு மாதங்களுக்கு முன் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.  அதுவும் ஒரு சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுதான் வேதனை; இந்தக் கொடுமையை நிறைவேற்றியவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிய நிலையில் வெறும் மூன்று அல்லது நான்கு பேர் மீது மட்டும் நடவடிக்கை என்பது யாரையோ காப்பாற்றும் செயலாகத்  தோன்றுகிறது.  அதுவும் அந்த கலவரக்காரர்களிடம் தங்களை ஒப்படைத்தது காவல்துறையினர்தான்  என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதைப் பார்த்தால் இது இன்னொரு குஜராத் கலவரம் என்று சந்தேகம் எழுகிறது.  

முதலில் இந்த மணிப்பூர் கலவரத்துக்கு இவர்கள் (அதிகார வர்க்கம்) கூறும் காரணமே இட்டுக்கட்டிய கதை என்று சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து.  மைட்டி மற்றும் குக்கி இனத்தவருக்கிடையிலான இனக்கலவரம் என்பதே ஒரு கட்டுக் கதை எனப்படுகிறது.  பழங்குடியினத்தவரான குக்கி மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கிறித்தவம் சார்ந்தவர்கள் என்பதும், மைட்டி இனத்தவர் அங்கு ஆளும் அரசால் தூண்டிவிடப்பட்டு இந்தக் கலவரத்தை நடத்தியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. இப்படித்தான் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு, காவல்துறையின் கைகளை கட்டிப் போட்டனர்.   அதே போன்ற ஒரு நாடகம்தான் மணிப்பூரிலும் அரங்கேறியிருக்கிறது.  

இந்தக் கொடுமை வெளி வந்துவிடக்கூடாது என்றுதான் இணைய சேவை அங்கு முடக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.  ஒன்று நிச்சயம்;  இந்தக் கொடுமையை செய்தவர்கள் மீது நடவடிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரியாது;  இந்த விடியோவை வெளியிட்டவர் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். 

நம்ம ஜி நேற்று திருவாய் திறந்து சொல்லிவிட்டார், அந்த குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று.  என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இந்த கொடுமை குறித்து மகளிர் ஆணையம் மூன்று கடிதங்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பியதாகவும், ஆனால் எந்தவித பதிலும் மாநில நிர்வாகம் அளிக்கவில்லை என்றும் மகளிர் ஆணையத்தின் தலைவர்(வி) கூறியிருக்கிறார்.  அதாவது, மகளிர் ஆணையத்துக்கு முன்னரே தெரிந்த விஷயம்  நம்ம ஜிக்கு நேற்றுதான் தெரிந்திருக்கிறது; அல்லது முன்னரே தெரிந்திருந்தாலும் அதை மூடி மறைத்திருக்கிறார்.  என்னே  ஒரு சாணக்கியத்தனம்.

எடுத்ததற்கெல்லாம் காங்கிரஸை குறை சொல்லியே - அதுவும் நேருவிலிருந்து ஆரம்பித்து - தன்னுடைய/அரசுடைய தவறுகளுக்கு/கையாலாகாத்தனத்திற்கு சப்பைக் கட்டு கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் இந்த முறை யாரை நோக்கிக்  கை நீட்டப்போகிறார்கள்?  2014-ல் 33 லட்சம் கோடியாக இருந்ததாம் இந்திய அரசின் கடன்;  ஒன்பது ஆண்டுகளில் 133 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாம்.  100 லட்சம் கோடி கடன் எதற்காக வாங்கப்பட்டது?  அதில் எத்தனை லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடியில் அதானிக்கும், அம்பானிக்கும்   கொட்டிக் கொடுக்கப்பட்டது?  The right man in the wrong party என்று வாஜ்பாய் குறித்து சொல்வார்கள்.  அந்த Right Man ஆட்சியில்தான் உளவுத்துறை குளறுபடியால் கார்கில் போர் மூண்டது;  அந்தப் போரில்  உயிர் நீத்த வீரர்களுக்கு வாங்கப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல் நடந்தது என்பதை மறந்து விடக்கூடாது. மொத்தத்தில் பிணம் தின்னுதல் இவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை.

ரோமாபுரி பற்றி எறிந்த பொது நீரோ பிடில் வாசித்தான் என்று ஒரு சொல்லாடல் ஒன்று உண்டு; அதற்கு ஆதாரம் இல்லை என்றும், ஏனென்றால் நீரோ காலத்தில் பிடில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றொரு வாதம் உண்டு.  ஆனால், நம்ம ஜியிடம் சொந்தமாக விமானம் இருக்கிறது; அதனால்தான் மணிப்பூர் பற்றி எரியும்போது அவர் உல்லாசப்பயணம் போகிறார்.


Sunday 9 July 2023

Sirf Ek Bandaa Kaafi Hai

 கைய, கால வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுதா?  இந்த IMDB ரேட்டிங்கை அப்பப்ப போயி பாக்குறது வழக்கமா போச்சு.  அப்படித்தான் இன்னிக்கு போயி பாத்தா இந்த தலைப்புல இருக்கே, Sirf Ek Bandaa Kaafi Hai, இந்தப் படத்துக்கு 7.9 ரேட்டிங் குடுத்துருக்காங்க.  சரி என்னதான் இருக்குன்னு லிங்க் தேடிப் புடிச்சு ஒரு வழியா பாத்துட்டேன்.  உண்மையிலேயே நல்ல படம்தான்.  பேசிருக்குற கதையும் நல்லாத்தான் இருந்துச்சு.  ஆனா, நம்ப முடியாத, நம்ம இந்தியாவுல நடக்க முடியாத ஒரு முடிவை சொல்லியிருக்கு.  

கதை என்னன்னா, ஒரு அதிகாரம் மற்றும் பண பலம் உள்ள ஒரு சாமியார்.  எல்லா பணக்கார சாமியாரும் செய்யிற மாதிரி பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் இப்படியெல்லாம் நடத்துறார்; அடுத்த பிறவி இல்லாத மார்க்கத்துக்கு, சொர்க்கத்துக்கு போறதுக்கு வழி சொல்லி பிரசங்கம் எல்லாம் நடத்துறார்.  எல்லா நல்லதும் நடத்திக்கிட்டே, நாம பாத்த, கேள்விப்பட்ட எல்லா சாமியார் மாதிரியே எல்லா உள் லீலைகளும் நடத்துறார்.  என்ன ஒரு வித்தியாசம்னா நித்தியானந்தா மாதிரி வீடியோ வெளியாகல்லை.  ஆனா, இவர் ஒரு மைனர் பொண்ணுகிட்ட அப்படி நடந்துக்கிறார்.  அந்தப் பொண்ணு தைரியமா காவல் நிலையம் போயிருச்சு;  விஷயம் கோர்ட் படி ஏறிருச்சு.  இவருதான், அதிகாரத்தை சட்டை பையில் வச்சுருக்காரே;  விலைக்கு வாங்க முடியிறவங்களை வாங்குறார்; வாங்க முடியாதவங்களை கொல்றார்.   ஆனா, நம்ம நாயகன் கடைசி வரைக்கும் போராடி, அஞ்சு வருஷம் வழக்கை நடத்தி (நாயகன் ஒரு வழக்குரைஞர்) அந்த சாமியாருக்கு தண்டனை வாங்கி கொடுத்துடுறாரு.

பொதுவா இந்த மாதிரி கதையில வர்ற நாயகன், கடவுள் நம்பிக்கையோ அல்லது மதம் குறித்த பற்றோ இல்லாத ஒரு மனிதனாதான் சித்தரித்திருப்பார்கள்.  ஆனா, இந்த கதையோட நாயகனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு.  ஆனா, அந்த கடவுள் நம்பிக்கைக்காக ஒரு சாமியாரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதோ அல்லது அவரது தவறை மூடி மறைக்க முயல்வதோ இல்லாமல், ஒரு நடுநிலைவாதியாய் காட்டிருக்காங்க. ஒரு வேளை, இந்த மாதிரி மனநிலை பெரும்பாலான நபர்களுக்கு இருந்திருந்தால், அதாவது கடவுள் நம்பிக்கை மற்றும் மதப்பற்று இருப்பதற்கும், அந்த நம்பிக்கை மற்றும் பற்றை அரசியலாய் ஆக்குவதற்கும், உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருந்தால் மாபெரும் தவறுகள், அவலங்கள் இந்தியாவில் நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கும் அப்படின்னு தோணுது.  

இதுல என்னடா நம்ப முடியாத விஷயம் இருக்குன்னு கேட்டா, இந்தியாவுல இவ்வளவு அதிகார மற்றும் பண பலம் உள்ள ஒரு சாமியாரை உள்ள தள்ளுறதெல்லாம் கனவுலையும் நெனச்சுப் பாக்க முடியாத ஒரு கற்பனை.  அந்த படத்தோட இயக்குனர் ஒருவேளை நிஜத்தில் நடக்க முடியாததை திரையிலாவது நடத்தி பாக்கலாம்னு ஆசைப்பட்டிருப்பாரு போல.  

கொஞ்ச நாளா எனக்கொரு பயம்.  கூடிய சீக்கிரம் நான் ஒரு மனநல மருத்துவரை பாக்கணும்னு நெனைக்கிறேன்.  ஒரு சிலர், ஒரு சில நேரங்களில் பேசுறது எனக்கு வேற மாதிரியே கேக்குது.  அப்படித்தான் இந்த திரைப்படத்துல அந்த சாமியாரை எல்லாரும் குருஜி, குருஜின்னு சொல்லுறாங்க.  ஆனா, எனக்கு வேற மாதிரி கேக்குது.  (சில விஷயத்தை அப்படியே வெளிய சொல்ல முடியாதுல்ல. அதான்..........)


Sunday 28 May 2023

ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்.

 இந்த தலைப்பு மற்றும் கட்டுரை எந்த ஒரு தனி மனிதரையும் புண்படுத்தும் நோக்கிலோ அல்லது அவமானப்படுத்தும் நோக்கிலோ எழுதப்பட்டதல்ல என்பதையும், நான் கடவுள் நம்பிக்கைக்கோ அல்லது ஜோதிடம் குறித்த நம்பிக்கைக்கோ எதிரானவன் அல்லவென்பதையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோதிடம் என்பது ஒரு கலை என்பதையும், அது காலம் நேரம் மற்றும் கிரக நிலை ஆகிய அனைத்தும் சரியான அளவில் கணிக்கப்பட்டு/கணக்கிடப்பட்டு ஒரு மனிதனின்  எதிர்காலம் அளவிடப்படுகிறது என்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  இத்தகைய ஒரு கலை இன்று பல அரைகுறை மற்றும் ஏமாற்று ஜோதிடர்கள் கையில் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.  

முதலில் ஒரு மனிதனின் பிறந்த நேரம் தவறாக கணிக்கப்பட்டால் என்னாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கதை சொல்லப்பட்டு வருகிறது.  ஒருவேளை அது உண்மையானதாவும் இருக்கலாம், அல்லது புனையப்பட்டதாகவும் இருக்கலாம்.  இளவரசன் சித்தார்த்தன் பிறப்பின் போது அவனுடைய ஜாதகம் கணிப்பதற்காக நாட்டின் சிறந்த ஜோதிடர்களை அழைத்திருந்தான் அரசன் சுத்தோதனன்.  குழந்தையின் தலை தெரிந்ததும் ஒரு எலுமிச்சம் பழத்தை பிரசவ அறையின் உள்ளிருந்து வெளியில் எறியவும் ஒரு பணிப்பெண் அமர்த்தப்பட்டாள்.  அறையின் உள்ளிருந்து எலுமிச்சம் வெளியில் வந்து விழுந்ததும் அங்கிருந்த ஜோதிட சிகாமணிகள் அனைவரும் அவசரமாக அந்த நேரத்தை குறித்துக் கொண்டு கணக்கிட ஆரம்பித்தார்கள்.  அனைவரும் ஒன்று சொன்னாற்போல் இளவரசன் மிகப் பெரிய பேரரசனாக வருவான் என்றும், மிகப் பெரும் சாம்ராஜ்யம் நிறுவுவான் என்றும் சொன்னார்கள். ஒருவர் மட்டும் அவன் ஒரு மிகப் பெரும் துறவியாக மாறுவான் என்றும் பல்லாயிரக்கணக்கானோர் அவன் நிறுவும் ஒரு சமயத்தை பின்பற்றுவார்களென்றும் கணித்தார்.  கோபமடைந்த அரசன் அந்த ஜோதிடரை சிறையிலடைத்தான்.  காலம் சுழன்றது; மணமுடித்து, குழந்தையும் பிறந்தபின், மனைவி யசோதரையையும், மகன் ரகுலனையும், அரண்மனை வாழ்வையும் துறந்து சித்தார்த்தன்  போதி மரம் அடைந்ததும், புத்தம் என்ற சமயம் நிறுவியதும், இன்றும் கோடிக்கணக்கானோர் அந்த சமயத்தை பின்பற்றுவதும் நாம் அனைவரும் அறிந்ததே.  இந்த நிலையில், சிறைப்படுத்தப்பட்ட ஜோதிடரை, அரசன் சுத்தோதனன் அழைத்து எவ்வாறு அவர் மட்டும் மிகச் சரியாக இளவரசனின் எதிர்காலம் கணித்தார் என்று கேட்டான்.  அப்போதுதான் அந்த ஜோதிடர் பணிப்பெண் எறிந்த எலுமிச்சை பிரசவ அறையின் கதவில் பட்டு தெறித்து, மீண்டும் அறைக்குள்ளே சென்றதையும், அதை தான் கவனித்ததையும், அந்த பணிப்பெண் இரண்டாம் முறை அந்த எலுமிச்சையை எறிந்த நேரத்தை மற்ற ஜோதிடர்கள் கணக்கில் கொண்டதால், அவர்கள் கணிப்பு தவறானதையும் கூறினார்.  ஒரு சில நொடிகள் முன்பின் சென்றாலும் ஜோதிட கணிப்பு தவறாக செல்வதற்கு வாய்ப்பிருப்பதற்கு உதாரணமாக இந்தக்  கதையை கூறுவர்.

நேரம் சரியாக, துல்லியமாக இருந்தாலும் ஜோதிடம் பொய்ப்பதும் உண்டு என்பதற்கு நான் கண்ட நிகழ்கால உதாரணம் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.  என்னுடைய நண்பர்  ஒருவர்;  அவருக்கு இரண்டு மகன்கள்.  அவருக்கு ஜோதிடம் குறித்த நம்பிக்கை உண்டு.  அவருக்குத் தெரிந்த ஒரு ஜோதிடரை கலந்தோசிக்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டார்.  மூத்த மகனுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்.  என்னிடம் பேசும் போது, "ரொம்ப அருமையான இடம்.  என் பையனுக்கும், பெண்ணுக்கும் எட்டு பொருத்தம் இருக்கு.  நம்ம ஜோதிடர் சொன்னா சரியா இருக்கும்," என்றார்.  திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தது.  ஒன்றரை ஆண்டுக்குள் விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறிவிட்டனர் இருவரும்.  இதற்கிடையில், இளையவன் சொந்தத்திலேயே ஒரு முறைப்பெண்ணை விரும்பினான்.  அந்த பெண்ணுக்கும், இவனுக்கும் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்த ஜோதிடர் கூறிய பின்னும் அனைத்தையும், அனைவரையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இன்றும் - பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது - அவர்கள் இல்லறம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.  மூத்தவனின் நிலையை பார்த்து வருந்திய என்னுடைய நண்பர்  அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய தீர்மானித்தார்.  பெண்ணும் பார்த்தாகி விட்டது.  அந்தப் பெண்ணுக்கும் இரண்டாம் திருமணம்.  இம்முறை, "அந்த ஜோசியன் ஒரு பிராடுப் பய.  இவன் ஜாதகத்தில்  இரண்டு திருமணம் இருக்காம்.  சொல்லாமயே விட்டுட்டான்.  இப்போ ஒரு அருமையான ஒரு ஜோசியரை பாத்துட்டு இருக்கேன்.  அவர் இந்த இரண்டாம் திருமணம்தான் நிலைக்கும் என்று சொல்லிட்டார்", என்றார்.  இப்போது முதல் ஜோதிடர் பிராடு ஆகிவிட்டார்;  இரண்டாம் ஜோதிடர் அருமை ஆகிவிட்டார்.  கொடுமை என்னவென்றால், இந்த இரண்டாம் திருமணமும் நிலைக்கவில்லை என்பதுதான்.  இத்தனைக்கும் தன் இரண்டு மகன்களுக்கும் துல்லியமாக பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் எழுதினார் என்பது முக்கியம்.  

புலிப்பாணி சித்தர்தான் ஜோதிட சாஸ்திரம் எழுதினார் என்பது சரித்திரம்.  ஆனால், இந்த ஜாதகக் கட்டங்களையும் மீறி, அவற்றின் கணிப்பையும் மீறி வாழ்வை வென்றவர்கள் உண்டு.  அதைத்தான். "விதியை உன் மதியால்  வெல்வாய் என்பதே உன் விதியாகும்," என்று பாடினார் ஒரு சித்தர்.  

என்னைப் பொறுத்தவரை, என் வாழ்வில் நான் கண்ட ஒரு மிகச் சிறந்த ஒரு ஜோதிடர் என் தாய்மாமன்.  அவர் ஜோதிடத்தை தொழிலாய் கொண்டவரல்ல; ஒரு பொழுதுபோக்காய்  அதனை கற்றவர்.  அவர் என் கையை/கைரேகையை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், "மாப்ளே, நீ கடல் கடந்து போற பாக்கியம் இருக்கு."   "போங்க மாமா.  நான் படிச்ச படிப்புக்கும், பிழைப்புக்கு நானெல்லாம் எங்கே கடல் கடக்குறது ," என்பேன்.  அவர் சிரிப்பார்.  ஒரு முறை என்னுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, "நாப்பது வயசு வரைக்கும் உனக்கு நாய் படாத பாடுதான் மாப்ளே," என்றார்.  நானோ, "அதுக்கப்புறம் வாழ்க்கை நல்லா இருக்குமா மாமா," என்றேன்.  "சேச்சே, அதுக்கப்புறம் சொறிநாய், வெறிநாய் படாத பாடு படுவே," என்றார்.  நான் நாற்பது வயதில்தான் கடல் கடந்து ஆஸ்திரேலியா வந்தேன்.  துரதிர்ஷ்டவசமாக என் மாமா இன்று உயிரோடில்லை.

எனவே, ஜோதிடம் என்பது பொய்யல்ல என்பதற்கும் உதாரணம் உண்டு; அந்த ஜோதிடத்தை, கட்டங்களின் கணிப்பை மீறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களும்  உண்டு.  இன்றும் தங்களின் மகன், மகளுக்கு வரன் தேடும் பெற்றோர் முதலில் ஜாதகம் பார்ப்பதை ஒரு கடமையாக கொண்டுள்ளனர்.  இதில் வேறொரு சிக்கலும் உள்ளது.  தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் வெவ்வேறு பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன. திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம், கௌரி பஞ்சாங்கம் என்றிருக்கின்றன.  ஒரு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகம் கொண்டு மற்றொரு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டால்  அந்த ஜாதகமே தவறானதாகக் காட்டுகிறது.  எனவே, இரண்டு ஜாதகங்களை கையிலெடுக்கும்போது, அவை இரண்டுமே ஒரே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மேலும், ஜோதிடரிடம் பொருத்தம் மற்றும் எதிர்காலம் மட்டும் கேட்காமல், கடந்த காலத்தையும் கேட்டால் (கடந்த கால கணிப்பு துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு சில ஜோதிடர்கள் தங்கள் வார்த்தை திறமையால் விளையாடுவார்கள்) அந்தக் குறிப்பிட்ட ஜோதிடரின் உண்மைத் தன்மை வெளிப்படும்.  ஜோதிட/ஜாதக நம்பிக்கை இல்லா ஒரு நண்பர் தன்னுடைய மகளுக்கு வரன் தேடும்போது ஒரு நல்ல ஜோதிடரை அறிமுகப்படுத்தும்படி கேட்டார்.  நானோ, "உங்களுக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கையில்லையே," என்றேன்.  அதற்கு பதில் அவருடைய மனைவியிடமிருந்தது; "இப்போ எல்லாரும் பாக்குறாங்களே.  நாம பாக்கலையின்னா எப்படி.  நல்லாயிருக்காதே," என்றார்.  'எல்லாரும் பார்ப்பதால்' மட்டுமே நாமும் பார்க்க வேண்டுமா?  எனக்குப்  புரியவில்லை. 

மேற்கண்ட உதாரணங்களை, உண்மைகளை கருத்தில் கொண்டு ஜாதகம்/ஜோதிடம் பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.


Thursday 16 March 2023

ஆஸ்கரும், ஐஸ்வர்யா ராயும்

தலைப்பே வில்லங்கமா இருக்கே; எதைக் கொண்டு போயி எதோட முடிச்சுப் போடுறதுன்னு கணக்கே இல்லையா?

கணக்கு வழக்கெல்லாம், கூட்டிக் கழிச்சு பாத்துதானப்பு இந்த அவார்டும், அழகிப் பட்டமும் குடுக்குறாய்ங்க.  ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் போறதுக்கு முன்னால, இந்தியாவுல அழகான பொண்ணுங்களே இல்லையா?  அது அப்படி கெடையாது; ஒரு நாட்டோட மார்கெட்டு பெரிசாகும் போதும், மக்களுக்கு வாங்குற சக்தி அதிகரிக்கும் போதும், ஒனக்குத் தேவையோ, தேவையில்லையோ - ஒனக்கு கடனை குடுத்து, தலையில மொளகா அரைச்சு ஆடம்பரப்பொருள் வாங்குற ஆசையை  தூண்டி விடுறதுக்கு உண்டான வழிதான்,  அழகிப்பட்டம் குடுக்குறதும், அவார்டை வாரி வழங்குறதும்.  ஒரு செருப்பு/ ஷு விக்கிற கம்பெனி, விற்பனை பிரதிநிதி ரெண்டு பேர ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிச்சது.  இது  நடந்தது 1950 - ல. ஆப்பிரிக்கா போய்ட்டு வந்த ரெண்டு பேருல ஒருத்தன், "அந்த ஊருல ஒரு பய புள்ளைக்கும் ஷு போடுற பழக்கமே இல்லை.  அங்க போயி ஷு விக்க முடியாது,"  அப்படின்னான்.  மத்தவன் சொன்னான், "அந்தூருல ஒரு பயகிட்டயும் ஷூ இல்லை. அவிய்ங்கள ஷு போட மட்டும் பழக்கிட்டா போதும். லட்சக்கணக்குல ஷூ விக்கலாம்,"  அப்படின்னான்.  இந்த அவார்டும், அழகிப்பட்டமும் அப்படித்தான்; நம்மள கொஞ்சம் கொஞ்சமா ஒரு பொருளுக்கு/பழக்கத்துக்கு அடிமையாக்குறது. அழகாக இந்த கிரீமைப் போடு; இந்த துணிமணிய வாங்கு; இப்படி சாப்புடு - இத மட்டும் சாப்புடுன்னு மொத்தத்துல நம்மகிட்ட அடிமை சாசனம் எழுதி வாங்கிருவாய்ங்க. பர்கரும், பீட்சாவும் இப்புடித்தானய்யா உள்ள வந்துச்சு; நாம பழைய சோத்து பெருமைய வீடியோ போட்டு பேசவேண்டியிருக்கு. ஆஸ்கரும் இப்படித்தான்; அந்த அவார்டு வாங்குறது மட்டும்தான் நல்ல கலைக்கு/கலைஞனுக்கு அடையாளம்னு சங்கு ஊதிருவாய்ங்க.  ஏற்கனவே நம்மூரு கலைகளையும் மறந்தாச்சு; கலைஞர்களையும் மறந்தாச்சு.  எல்லாம் ஒரு கணக்கு வழக்குப் போட்ட வியாபாரமும், அரசியலும்தானய்யா.

ஆமாம்; ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டோமோ?  இல்ல இந்த இந்தியப் பொருளாதாரத்தை நசுக்கி நாசம் பண்ணுன நேரத்துலதான் கொரோனா வந்துச்சு.  எல்லா நஷ்டக்கணக்கையும் கொரொனா கணக்குல எழுதுனாங்க நம்ம ஊறுகா மாமி.  இப்பம் பாத்தா, அதானிக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன் குடுத்ததுல SBI யும், LIC யும் நஷ்டம் ஆயிருச்சுன்னு பேசிட்டிருக்கும் போதே, அமெரிக்காவுல ரெண்டு பேங்க் திவாலாகி, ஒலகம் பூரா பேங்க் பங்கெல்லாம் அதலபாதாளத்துக்கு போயிட்டுருக்கு.  இதுதான் சாக்குன்னு SBI, LIC நஷ்டமும் ஆரம்பிச்சதே அமெரிக்காவாலதான்னு கூவுரதுக்கு வாய்ப்பு இருக்கோ...........

Monday 30 January 2023

பிபிசி யும் - ஹிண்டன்பர்கும்

 20 வருஷத்துக்கு முன்னால நடந்தது;  ஓரளவு செய்தித்தாள் படிக்கிறவன், டிவி நியூஸ் பாக்கிறவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா இந்த விஷயம் தெளிவா தெரிஞ்சுருக்கும்.  கோத்ரா ரயில் எரிஞ்சதும்,  இந்த இந்த மாதிரி நடந்தது;  இந்த இந்த மாதிரி ஜி யும், அவரு தலைமையிலான ராசாங்கமும் நடந்துச்சுன்னு கண்டிப்பா தெரியும்.  அதையும் மீறி இப்ப இந்த ஆவணப்படம் எதுக்கு அப்படின்னு எனக்கு தலைய சுத்துச்சா?  எனக்கு தலை சுத்துன மாதிரியே ஒன்றிய அரசுக்கும் சுத்துச்சுன்னு அவங்க தடை உத்தரவு பாத்ததும்தான் தெரிஞ்சுது.  அதாவது,  புதுசா ஒட்டு போடப் போற தலைமுறைக்கு இதை ஓதி விட்டுரணும்னு பிபிசி காரன் முடிவு பண்ணிட்டான்.  ஜி யை அடுத்த தேர்தல்ல கவுத்தே ஆகணும்னு கங்கணம் கட்டுன மாதிரி, ஹிண்டன்பர்கும் ஒரு பக்கம் பத்த வெக்கிறான்.  கொஞ்சம் எழுதப் படிக்க தெரிஞ்சு, சிந்திக்கவும் தெரிஞ்சவனுக்கு இது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தானய்யா.  எதுவும் தெரியாம பட்டன அமுக்குறவன் அப்படின்னு ஒரு கூட்டம் இருக்கு; பண மதிப்பிழப்புல தெருவுல நின்னது, வரிசையில நின்னு செத்தவன், சேத்து வச்ச காசெல்லாம் செல்லாம போனதையெல்லாம் செமிச்சுட்டு, 2019 ல ஒட்டு போட்டவனுக்கு இந்த பிபிசி ஆவணப் படமும், ஹிண்டன்பர்க் அறிக்கையும் எப்படி போய் சேரும்; சேந்தாலும் அவன் சிந்திப்பானா; 2024 ல எந்தப் பக்கம் நிப்பான்னு தெரியலையே.  சிந்திக்கிற பய கூட்டமா இருந்தா, அந்த காவி உடை கபடதாரி யோகி திரும்ப வந்திருக்கவே கூடாதே?

இந்த கூட்டத்தைத் தாண்டி இன்னொரு வகையறா இருக்காய்ங்க.  அதான் ஆட்டுக்குட்டி என்ன சொன்னாலும் ஆமாம்னு தலையாட்டுறவன்.  என்னடா தமிழ்நாட்டுல இருக்குற ஆட்டுக்குட்டி மட்டும்தானான்னு கேக்கப்படாது.  இது மாதிரி நெறைய ஆட்டுக்குட்டி இந்தியா பூராம் இருக்கு;  அந்த ஆட்டுக்குட்டிக்கு அடி வருடவும் ஒரு கூட்டம் தயாரா இருக்கு.  அவனுக்கும் செருப்புல அடிச்ச மாதிரி புத்தி சொல்ற மாதிரி இருக்கணும்.  அது இந்த பிபிசி ஆவணப்படத்துலயும், ஹிண்டன்பர்க் அறிக்கையிலயும் இல்லைன்னுதான் நெனைக்கிறேன்.  

அதிர்ச்சியான ஒரு விஷயம் இப்ப தினமணியில படிச்சேன்.  LIC பணத்தை எடுத்து, மறுபடியும் ஒரு 300 கோடிக்கு அதானி நிறுவனப் பங்குகளை வாங்கப் போறாய்ங்களாம்.  இந்த கூட்டம் இந்தக் கூத்தடிச்சாலும் யாரும் கேக்க மாட்டாங்கன்னு முடிவே பண்ணிட்டாய்ங்களா?