Friday 23 July 2021

ஒலிம்பிக் 2032

ஒலக சினிமா, ஒலக சினிமான்னு எல்லாரும் பேசுறத, எழுதுறத பாத்தா ரொம்ப பயமா இருக்கும்.  நம்ம மண்டைக்கெல்லாம் எட்டாத விஷயம்னுதான் இப்ப வரைக்கும் ஒதுங்கிப் போயிட்டிருந்தேன்.  ஆனா பாருங்க கெரகம்,  நம்மள மாதிரியே எழுதுற ஒரு மனுஷன் சினிமா பத்தி எழுதியிருந்தாரா, நமக்கும் நமநமன்னு அரிக்கும்ல.  அப்பிடி ஒரு அரிப்புல பாத்த படம்தான்  DOWNFALL.  பேரு  இங்கிலீஷிலே இருந்தாலும் படம் என்னவோ ஒரு ஜெர்மன் படம். 

படம் பூரா ஜெர்மனியிலதான் பேசியே கொல்லுறாய்ங்க;  நல்லவேளை இங்கிலீஷிலே SUBTITLE இருக்கு.  இணையத்துலயே கிடைக்குது.  அடால்ப் ஹிட்லரோட வீழ்ச்சி, அதைத் தொடர்ந்து அவரோட தற்கொலை பத்தி பேசுற படம்.  இல்லல்ல, இந்தப் படம் பேசல;  நாம பக்கத்துலயே உக்காந்து அந்த நிகழ்வுகளை பாக்குற ஒரு அனுபவம். அவரோட கடைசி நாட்களை மட்டும் படமாக்கிருக்காங்க. சரித்திரம் தெரிஞ்ச எல்லாருக்கும் ஹிட்லர் எப்படி தோத்தாரு, எப்படி செத்தாருங்கிறது தெரியும்.  நமக்கில்லைங்க;  இந்தப் படத்தைப் பாத்துதான் அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.  நம்ம அறிவுக்கு எட்டுன வரைக்கும் ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி; ஜெர்மனிய ஆட்சி பண்ணுனாரு; நாஜி மார்க்கத்துல பற்று உள்ளவரு; யூதர்களை கூட்டம், கூட்டமா கொன்னாருன்னு மட்டும் தெரியும்.  இரண்டாம் உலகப் போருல சோவியத் யூனியன் கிட்ட தோத்துப் போயி தற்கொலை பண்ணிக்கிட்டாரு அப்படிங்கிற அளவுக்குத் தெரியும்.  

ஒரு சர்வாதிகாரிய எதுத்து யாரும் பேசவே மாட்டாங்கன்னு நம்பிக்கிட்டிருக்கிற என்னய மாதிரி முட்டாளுக்கு ஒரு நல்ல பாடம் இந்தத்  திரைப்படம்.  பெர்லினை சோவியத்  படைகள் நாலா  பக்கமும்  சூழ்ந்து நிக்கிது; கொஞ்சம், கொஞ்சமா ஹிட்லரோட முடிவு நெருங்கி வருது.  ஹிட்லர் மற்றும் அவர் குடும்பம், அவரோட தளபதிகள் உட்பட முக்கியமானவர்கள் அரண்மனையோட அடியில் உள்ள, ஒரு ரகசிய பாதாள அறையில - அதை அறைன்னு சொல்லுறது தப்பு - சகல வசதிகள் கூடிய ஒரு சிறு அரண்மனை.  அங்கதான் பதுங்கி இருக்கிறாங்க.  நாளுக்கு நாள், எதிரி நெருங்கி வர்ற நிலையிலயும் ஹிட்லர் தாறுமாறான உத்தரவுகள் கொடுக்கிறாரு; சொந்த நாட்டு மக்களும் கூட தனக்காக, தன்னுடைய கொள்கைகளுக்காக உயிர் தியாகம் செய்யணும்னு சொல்றாரு; தன்னுடைய நாட்டு மக்கள் சாவது குறித்து எந்தக் கவலையும் இல்லைன்னு சொல்றாரு; கூட இருக்கிற தளபதிகளோ உண்மை நிலையை எடுத்து சொல்லுறாங்க; ஒரு சிலர் சரணடையவும், வேறு சிலர் தப்பி பிழைத்து ஓடவும் முடிவெடுக்கிறாங்க.  அவங்க ஒவ்வொருத்தரையும் கோழைகள் அப்படின்னு திட்டி அவங்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாரு.  கோயபெல்ஸ், மற்றும் அவர் மனைவி ரெண்டு பேரும்  நாஜி மார்க்கம் மற்றும் ஹிட்லர் மேலிருக்கிற மரியாதை காரணமாகவும், தங்களுடைய குழந்தைகள் நாஜி மார்க்கம் தவிர  எந்த ஒரு சூழ்நிலையிலயும் வளரக் கூடாதுன்னு முடிவெடுத்து தங்களுடைய ஆறு குழந்தைகளையும் கொல்ல  முடிவெடுக்கிறாங்க.  இவ்வளவு களேபரத்துலயும், ஹிட்லர் - ஈவா திருமணம் நடக்குது.  மறுநாள் காலை உணவுக்குப் பின் ஹிட்லரும், ஈவாவும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செஞ்சுக்கிறாங்க.  கோயபெல்ஸ் மனைவி ஆறு குழந்தைகளுக்கும் சயனைடு ஊட்டி கொல்லுறாங்க.  மனைவியை சுட்டு கொன்னுட்டு, கோயபெல்ஸ் தன்னையும் சுட்டுக்கிறாரு.  ஹிட்லரோட மெய்க்காப்பாளர், அவரோட உத்தரவுப்படி, ஹிட்லர் மற்றும் ஈவா ரெண்டு பேரோட உடலையும் பெட்ரோல் ஊத்தி கொளுத்துறாரு. 

படிக்கிறவுங்க யாராவது தலைப்பை கவனிச்சிருந்தா, "என்னடா, ஒலிம்பிக் 2032 அப்படின்னு தலைப்பு வச்சுட்டு வேற கதை வுடுற", அப்படின்னு கேட்கலாம்.  தயவு செஞ்சு முழுசா படிங்க மக்களே.

மனம் ஒரு குரங்குன்னு சும்மாவா சொன்னாங்க.  ஏதோ ஒரு நாட்டுல, ஏதோ ஒரு காலத்துல நடந்த கதையை சினிமாவாக்கி குடுத்துருக்காங்கன்னு பாக்க ஆரம்பிச்சா, இந்த குரங்கு மனம் இந்த படத்தோட காட்சி எல்லாத்தையும் நம்ம ஜி கிட்ட கொண்டு போயி ஒப்பிட்டுப் பாக்குது.  இந்த பண மதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு எல்லாத்தையும், எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாம அறிவிச்சப்ப, நாட்டு மக்கள் என்ன பாடுபட்டாலும், கவலை இல்லை; நடந்தே செத்தாலும், பசியால் செத்தாலும்  கவலையில்லை அப்படிங்கிற ஹிட்லர் மனநிலையில் அறிவிச்சிருப்பாரோ அப்படின்னு யோசிக்கிது.  ஹிட்லருக்கு அவரோட தளபதிகள் சில பேரு  உண்மை நிலையை சொல்லி அறிவுரை சொல்லும்போது அவருக்கு வர்ற கோபமும் சீற்றமும் பாக்கும்போது ஒருவேளை அமைச்சரவையில யாராவது உண்மை பேசுனா - அப்படி யாராவது சொல்லுவாங்களா, பேசுவாங்களான்னு சந்தேகம் - என்ன நடக்கும்னு தாறுமாறா சிந்திக்கிது.  

இப்போ தலைப்புக்கும் கட்டுரைக்கும் (கதைக்கும்) என்ன சம்பந்தம்னா:

2032 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு;  முக்கியமான சமாச்சாரம் என்னன்னா ஏறக்குறைய போட்டியே இல்லாம இந்த தேர்ந்தெடுப்பு நடந்துருக்கு.  இந்த  விஷயம் நம்ம ஜி காதுக்கு போயிருந்தா - அவரோட தளபதிகள் யாராவது அவருக்கு சொல்லிருந்தா - நான் வர்றேன் போட்டிக்கு.  காசியில ஒலிம்பிக் நடத்துவோம்.  கங்கையில் படகுப் போட்டி, நீச்சல் போட்டி.  குஜராத்துல  கட்டுன மாதிரி சுவர் கட்டுவோம்  அப்படின்னு என்னவெல்லாம் காமெடி பண்ணிருப்பாரு, இந்த சந்தடில PEGASUS குழி தோண்டி புதைச்சிருப்பாரு அப்படின்னு குண்டக்க, மண்டக்க யோசனையெல்லாம் தலைக்குள்ள ஓடுது மக்களே.  பாகிஸ்தான்ல இருந்து டுரோன் வர்ற கதையெல்லாம் தேவையில்லாம போயிருக்கும்.

கடைசியா நீதிமான்களாகிய நீங்கள் எனக்கு ஒரு தீர்ப்பு சொல்லணும்.  இன்னைக்கி காலையில மளிகை சாமான் லிஸ்ட் எழுதும்போது கொண்டைக்கடலை எழுதச் சொன்னாங்க வீட்டம்மா.  நம்ம கை, நம்ம கட்டுப்பாட்டை இழந்து நிர்மலா சீதாராமன் அப்படின்னு எழுதிருச்சு.  இது ஒரு குத்தமா மக்களே.  இன்னும் திட்டு வாங்கிட்டு இருக்கேன்.😞😞😞