Tuesday 21 February 2017

இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்கள்ள

இப்பந்தாய்யா ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னேன்.  இப்ப ஆரம்பமாயிருச்சு.  பொதுமக்கள் மத்தியில இருக்குற அதிருப்திய எப்புடிரா மாத்துறதுன்னு ரொம்ப யோசிச்சு அஞ்சு அறிப்பு (அவரு பேசுறத கேக்கும் பொது அந்த அறிவிப்பு அப்புடின்ற வார்த்த என் காதுல அறிப்புன்னுதான் விழுந்துச்சு - இது எனக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமானு நீங்கதான் சொல்லணும்) வெளியிட்டுருக்காரு மாண்புமிகு முதல் மந்திரி.  

இந்த அஞ்சுல எனக்கு முக்கியமான சந்தேகம் அஞ்சாவது அறிப்புலதான்.(மொத்தத்துல எல்லாமே சந்தேகத்துக்கு உட்பட்டதுங்குறது வேற விஷயம்)  அது என்னன்னா மீனவருங்களுக்கு 5000 வீடு கட்டித்தரப் போறாங்களாம்.  மொத்த மதிப்பீடு 85 கோடி ரூவாயாம்.  அப்படின்னா ஒரு வீட்டுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்.  இந்த ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூவாயில காண்டிராக்ட் எடுக்குற புண்ணியவான், மேல இருந்து கீழ வரைக்கும் கவனிச்சு முடிச்சப்பறம் எப்படி வீடு கட்டுவான்; இல்ல அப்புடி கட்டுன வீடு என்ன லட்சணத்துல இருக்கும்னு யோசிச்சு பாத்தேன் -   உஸ்..... அப்பா இப்பமே கண்ணக் கட்டுதே.

இது போக பிரசவத்துக்கு காசு, வண்டி வாங்க மானியம்னு எல்லாமே கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு.  ஆனா, ஒரு அரசாங்கங்கிறது அடிப்படை வசதிய செஞ்சு குடுக்கணுமே தவிர, தனியாருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கக் கூடாது.  உதாரணமா அரசாங்க ஆசுபத்திரிய எல்லாரும் பயன்படுத்துற தரத்துக்கு மேம்படுத்திக் குடுக்கணுமே தவிர, நான் பணம் தர்றேன்; நீ தனியார் ஆசுபத்தரிக்கு போன்னு சொல்லக்கூடாது.  அது போல public transport வசதிகள (அதாங்க அரசாங்க போக்குவரத்து) ஒழுங்கு பண்ணித் தர்றதுக்கு ஏற்பாடு பண்ணாம, வண்டி வாங்கிக்க மானியம் தாரேன்னு சொல்லுறது எதுக்குன்னா ......... ஒனக்கு மானியம்; எனக்கு கமிஷன் அப்படின்னு இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.  (கூவத்தூர் செலவயெல்லாம் எப்படிய்யா திரும்ப எடுக்குறது அப்படின்னு நீங்க கேக்குறது புரியுது)

வறட்சி நிலையில குடிக்கத் தண்ணி இல்ல;  விவசாயி  செத்துக்கிட்டு இருக்கான்; கர்நாடகா, தண்ணி குடுக்க முடியாதுன்னு சொல்லிருச்சு;  ஆந்திராவும், கேரளாவும் தடுப்பணைகள் கட்டிகிட்டே இருக்காங்க;  இப்புடி உயிர் போற பிரச்சினைகள் தலைக்கு மேல இருக்கும்போது


நீங்களே முடிவு பண்ணிக்குங்க மக்கழே! இன்னைக்கில்ல, என்னைக்கி வந்தாலும் தேர்தலப்போ என்ன பண்ணனும் அப்புடிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும்.

Saturday 18 February 2017

வஞ்சனைகள் செய்தா(வா)ரடி

நடந்தவை அனைத்துக்கும் நாம் அனைவரும் சாட்சி.  இத்தனை கேவலமான நபர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதும், அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்ததும் நம்முடைய தவறு.  இதை நாம் அனைவரும் வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

இந்த தவறுகளுக்கு நம்முடைய பிராயச்சித்தம் என்ன?  சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றிவிட்டால் போதுமா?  நாம் என்ன செய்யப் போகிறோம்?   

தொகுதி திரும்பும் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை ஒரு பிரபல நடிகர் நம்மிடம் வைத்துள்ளார்.  அது மட்டுமல்ல, எதிர் காலத்தில், அடுத்த தேர்தலில் இதே முகங்கள் வெவ்வேறு  முகமூடிகளுடன், வெவ்வேறு  கோஷங்களுடன், வெவ்வேறு கொள்கை முழக்கங்களுடன் உலா வரப் போகிறார்கள்.  அவர்களுக்கு நம்முடைய பதில் என்னவாய் இருக்க வேண்டும் என்பதை உறுதியாய் முடிவு செய்தல் வேண்டும்.  அந்த  முடிவை நீங்கள் செயல்படுத்த வேண்டிய நேரத்தில்  கண்டிப்பாய் செயல்படுத்த வேண்டும்.  இதை நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா?? செய்வீர்களா???

இல்லை கண்ணில் காசைக் காட்டியதும், அனைத்தையும் மறந்துவிடுவீர்களா?

Monday 13 February 2017

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்........

கூவத்தூருல ஒரு விடுதியாம்; அதுக்குள்ள இருக்காங்களாம் எம்.எல்.ஏ. எல்லாரும்.   அவங்கள விசாரிக்கணும்னு உத்தரவு போட்டுச்சாம் நீதிமன்றம். போனாங்கய்யா காவல் துறை அதிகாரியும், வருவாய்த்துறை அதிகாரியும்.  அவங்க எல்லாரும் ஒன்னு சொன்னாப்புல (சொல்லிக்குடுத்த மாதிரியே) சுய விருப்பத்தின்பேரிலேயே இருக்குறதா ரெண்டு அதிகாரிகிட்டேயும் சொல்லிட்டாங்க.

அந்த விடுதியில அவங்க தங்கியிருக்கவும், மத்த சாப்பிட கொள்ள - குடிக்க - ஆகுற செலவெல்லாம் யாரு எத்துக்குறாங்க. இல்ல அவங்கவுங்களே பில்லு செட்டில் பண்ணுறாங்களா.  அப்புடின்னா அவங்க ஊரைவிட்டு வரும்போதே இதையெல்லாம் எதிர்பாத்து கையில பணம் ஏதும் கொண்டாந்தான்களா.  அப்புடின்னா அவ்வளவு பணத்த எந்த பாங்க்ல எடுத்தாங்க, இல்ல அதுக்கு ஏதும் ஆதாரம் இருக்கா.  அப்புடில்லாம் இல்ல, வேற யாரும் செலவ எத்துக்குராங்கன்னா, அந்த வேற யாரோ ஒருத்தர் அத்தனை பேருக்கும் நிச்சயமா சொந்தமா இருக்கப் போறதில்ல.  அந்த வேற யாரோ இந்த எம்.எல்.ஏ. எல்லார்கிட்டயும் ஏதோ எதிர் பாத்து, லஞ்சமா இந்த செலவெல்லாம் எத்துக்கிறாங்களா.  அப்படின்னா எல்லா எம்.எல்.ஏ.வும் மொத்தமா லஞ்சம் வாங்குறாங்கன்னு அப்பட்டமா தெரிஞ்சு போச்சுல்ல.  அப்ப அந்த எம்.எல்.ஏ. எல்லாரும் மொத்தமா பதவிய இழந்துருவாங்களா.  இத எந்த ஒரு நீதிமன்றத்துலயாவது வழக்கா போட முடியுமா.

ஊரெல்லாம் இருக்குற குண்டர்களையும், ரௌடிகளையும் கைது செய்யுறதா சொல்லுற காவல்துறைக்கு, கூவத்தூருல காவலுக்கு நிக்கிறவங்கள பாத்தா ரௌடியா தெரியலையா.  இல்ல கூவத்தூருல கல்லெடுத்துக் குடுத்து அழகு பாக்குறதே காவல்துறைதானா.  ஏன்னா ஏற்கனவே மரினாவுல கலவரம் நடந்ததா சொல்லி கல்லெடுத்து அடிச்ச அனுபவம் காவல்துறைக்கு  இருக்குல்ல.

கூவத்தூர் விடுதியில ஒரே நேரத்துல எத்தன பேரு தங்குறதுக்கு அனுமதி இருக்கு; இப்போ எத்தன பேரு தங்கியிருக்காங்க.   ரெண்டு நாளைக்கு முன்னால்கூட Philippines-ல  நிலநடுக்கம்னு  படிச்சேன்.  ஒருவேள சுனாமி வந்துருச்சுன்னா கடலோரத்துல இருக்குற விடுதியில இருந்து எல்லாரையும் எப்படி காப்பாத்துவாங்க.

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்........