Friday 31 August 2018

தேவதைகள் சகவாசம்


தேவதைகள் சகவாசம்
-நகரத்தான்

நீண்ட வரிசை அலுப்பைத் தந்தது.  அநேகமாக அரை மணி நேரம் ஆகி விட்டது.  காஷியர் பெண்மணியும் வேகமாக வேலை செய்வதாகத்தான் தெரிந்தது.  வேறு வழியில்லை;  இன்றைக்குப் பணம் கட்டியே ஆக வேண்டும்.  மனைவியும், மகள்களும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  பத்து நிமிடத்தில் பணம் கட்டி விட்டு போய்விடலாம் என்றுதான் வங்கிக்குள் நுழையும்போது அவர்களிடம் சொல்லியிருந்தேன். மீண்டும் திரும்பி காஷியர் பெண்மணியைப் பார்த்தேன்.  அத்தனை கூட்டத்திலும், சுறுசுறுப்பாக, சிரித்த முகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தார். காஷியருக்கு, டெல்லெர் என்ற பெயரும் உண்டு;  எனவேதான், ATM என்பது Automatic Teller Machine என எனது முன்னாள் மேலாளர் ரசாக் சொன்னது நினைவுக்கு வந்தது.  ATM என்பது Any Time Money என்று மனோகரன் பேசிக் கொண்டிருந்ததற்கு அவரின் விளக்கம் அது.  காஷியர் என்பதற்கு தமிழாக்கம் காசாளர் என்பது நினைவின் குறுக்கே வந்தது. 

தற்போது கொஞ்ச நாளாக இப்படித்தான், ஏதாவது ஒரு வேலையின் போது குறுக்கே அது சார்ந்த வேறு  நினைவு வருகிறது.  அந்த காசாளர் பெண்மணியின் முகம் கூட நன்கு பழகிய முகமாகத் தோன்றுகிறது.  மனித முகங்களை நினைவில் வைத்துக் கொள்வதென்பது, என்னைப் பொறுத்தவரை சிரமமான ஒன்று.  ஆயினும், இந்த பெண்மணி ஏதோ ஒரு விதத்தில் எனக்குப் பழக்கமானவர் போன்று எனக்குத் தெரிகிறார்.  அவர் காகிதங்களையும், பணத்தையும் வாங்கும்போதும், கொடுக்கும்போதும் எனக்கென்னவோ அந்தக் கைகள் நெல்லிக்காயும், கொய்யாவும் எனக்கு எடுத்துக் கொடுத்த அந்தக் கைகளை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறது.

ஒருவழியாக என்னுடைய முறை வந்துவிட்டது.  நிறைவு செய்து வைத்திருந்த படிவத்துடன், பணத்தையும் கொடுத்தேன்.  வாங்கிக் கொண்டவர் படிவத்தை ஒரு முறை பார்த்தார்.
“சார், நீங்க பெனால்டி சேத்து கட்டுறீங்களா?” என்றார். 
“ஆமாம் மேடம்,” என்றேன்.
“இதுக்கு மேனேஜர் ஒப்புதல் குடுக்கணும்.  அவர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு வந்துடுங்க,” என்றார்.
எனக்குள் திடீரென்று ஏதோ தோன்றியது. “மேடம் உங்க பேரு கல்பனாவா?’
ஒரு நெற்றி சுருக்கத்துடன், “ஆமாம்,” என்றார்.
“சோழவந்தான் கல்பனா?
“ஆமாம்.”
“நான் ரமேஷ். திண்டுக்கல் பாசஞ்சர் – நான் விளாங்குடி ரமேஷ்,” எனக்கு கோர்வையாகப் பேச வரவில்லை.
சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து, “ரமேஷா, நீயா,” ஏறக்குறைய ஒரு அடக்கமான கூவல். “நிஜமாவே நீதானா,” ஆச்சரியம், சந்தோஷம் கலந்த கேள்வி.
கிட்டத்தட்ட முப்பத்தெட்டு  ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம். கல்பனா அக்கா தன்னுடைய இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டு, தண்ணீர் பாட்டில் எடுத்து சற்று நீர் பருகினார். சில நொடிகள் ஆசுவாசுப்படுத்திக் கொண்டார்.
“ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுறியா? உன் கிட்ட நிறையப் பேசணும்,” என்றார்.
“இல்லக்கா, ஏற்கனவே ரொம்ப நேரமாச்சு.  என்னோட மனைவியும், பொண்ணுங்களும் பொறுமை இழந்துருவாங்க.”
“அவங்க எங்க இருக்காங்க,” என்றார்.  அவர்கள் மூவரும் அமர்ந்திருந்த பெஞ்சை நோக்கி கை காட்டினேன்.  ஒன்றும் பேசாமால், அவருடைய செல்போன் எடுத்து யாரிடமோ பேசி விட்டு, “சரி, ஒரு பத்து நிமிஷம் அவங்களோட நீயும் இரு.  நானே மேனேஜர் கையெழுத்து இதுல வாங்கி சரி பண்ணிக்கிறேன்.  இன்னும் பத்து நிமிஷத்துல எங்க வீட்டுக்காரர் வந்துருவாரு.  அவரும் உன்னைப் பாத்தால் சந்தோஷப்படுவாரு.  நான் இப்ப வந்துருவேன்,” என்றார்.
நான் ஒன்றும் பேசாமால் பெஞ்சை நோக்கி நகர்ந்தேன். மனைவி அருகில் அமர்ந்துகொண்டேன்.  “என்ன முடிஞ்சுருச்சா. போலாமா,” என்றாள் என் மனைவி.  “இல்லை. இன்னும் கொஞ்சம் நேரமாகும். என்னை ஒன்றும் கேட்காதே. நான் டென்ஷன்ல இருக்கேன்.”  பத்து நிமிஷத்தில் வரப்போகும் சேகர் அண்ணனை எப்படி எதிர் கொள்ளப்போகிறேன் என்ற பதட்டம் என்னுள்ளே வந்தமர்ந்து கொண்டது.
திண்டுக்கல் பாசஞ்செரில் நான் பள்ளிக்குப் போக ஆரம்பித்ததற்கு, எங்கள் வீட்டின் பொருளாதார சூழ்நிலையும் ஒரு காரணம்.  நான் அப்போது ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன்.  காலை எட்டேகாலுக்கு கூடல்நகரிலிருந்து கிளம்பும் 12 D பேருந்தில் ஏறினால், சுமார் எட்டேமுக்காலுக்கு பள்ளி வந்து விடலாம். மாலை நாலேகாலுக்கு பள்ளி மணி அடித்ததும் ஒரே ஓட்டமாக ஓடி மீண்டும் 12 D யை சந்தை நிறுத்தத்தில் ஏறினால், ஐந்து மணிக்குள் வீடு.  ஒரே பிரச்சினை, மாதம் எட்டு ரூபாய் நாற்பது பைசா பஸ் பாஸ் எடுக்க வேண்டும்.  அதற்க்கு போட்டோ எடுக்கின்ற செலவு வேறு.  அன்றைக்கு தேதியில் – 1978 ல் – போட்டோ எடுப்பதற்கு செய்ய வேண்டிய வித்தைகள், ஒரு தனிக் கதை.  ஆனால், ரயிலில் மூன்று மாதங்களுக்கு ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசாக்களில் முடிந்து விடும்.  ஒரே கஷ்டம் காலை ஒன்பதேகால் மணிக்குள் விளாங்குடியில் திண்டுக்கல் பாசஞ்செர் பிடிக்க முடியாவிட்டால் நேரத்திற்கு பள்ளியில் இருக்க முடியாது.  அதேபோல் மாலை நாலேகாலுக்கு பள்ளி முடிந்தால், ஐந்தேமுக்காலுக்குத்தான் ரயில் கிளம்பும்.  அந்த நேரத்தில், மதுரை ஜங்ஷன் ஐந்தாம் எண் நடைமேடை எங்களின் ஆட்டம், பாட்டம், விளையாட்டுக்களால் திமிலோகப்படும்.  இந்த ஒன்றரை மணி நேரத்தில் பெரும்பாலும் ஹோம் வொர்க் செய்து முடித்து விடுவதும் உண்டு.  காலை சுமார் ஆறரை மணிக்கு திண்டுக்கல்லில் கிளம்பும் பாசெஞ்சேர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பலரின் ஆதாரம்.  இது போக தினமும் மதுரை வரை வந்து செல்லும் சிறு வியாபாரிகள் பலருக்கும் குறைந்த செலவிலான போக்குவரத்து ஆதாரம்.
நான் ரயிலில் பள்ளி செல்ல ஆரம்பித்த மூன்றாம் நாளே கல்பனா அக்காவின் அறிமுகம் கிடைத்து விட்டது.   மாலை விளாங்குடியில் நாங்கள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும், கடைசி பெட்டியில் – பெண்களுக்கான பிரேத்தியேக பெட்டி – கதவோரம் நின்று கொண்டிருந்த பெண்ணின் செருப்பு கழண்டு விழுந்து விட்டது. புது மஞ்சள் நிற செருப்பு.  எனக்கு ஏதோ தோன்ற அதை ஒரு பெஞ்சின் கீழ் தள்ளி விட்டு வந்தேன்.  மறுநாள் காலை சந்துரு அந்த செருப்பைப் பார்த்துவிட்டு அதை எடுத்துக் கொண்டு வந்தான்.  “டேய் ரமேஷு, புது செருப்புடா,” என்றான்.  நான்தான் முதல் நாள் அதை பெஞ்சின் கீழ் தள்ளினேன் என்பதை விளக்கிவிட்டு, அதை வாங்கிக் கொண்டேன்.  ரயில் வந்ததும் அதை எடுத்துச் சென்று கடைசி பெட்டியில் இருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, நான் முன் பெட்டிக்கு ஓடினேன்.
அன்று மாலைதான் கல்பனா அக்காவுடன் என்னுடைய முதல் அறிமுகம் ஆனது. பள்ளிச் சீருடையில் இருந்தார்.  பிளஸ் ஓன் படிப்பதாகவும், செருப்பை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றியும் சொன்னார்.  சோப்ளாங்கி சுந்தர்தான் அவர் பெயர் கல்பனா என்றும், சோழவந்தானில் இருந்து வருகிறார் என்றும் சொன்னான்.  (மூன்று சுந்தர் இருந்ததால், கொஞ்சம் வத்தலாக இருந்த சுந்தர், சோப்ளாங்கி சுந்தர் என பட்டம் பெற்றான்) அவனும் சோழவந்தானில் இருந்துதான் வந்து கொண்டிருந்தான்.
அன்றிலிருந்து தினம் மாலை எனக்கு, கடலை, மாங்காய், கொய்யா, வெள்ளரிக்காய், நெல்லிக்காய் என தினம் ஒன்றாய் கல்பனா அக்கா கொடுப்பார்.  மாலை நேரப் பசிக்கு அந்தக் கொறித்தல்கள் தேவாமிர்தம். ஒரு வியாழக்கிழமை மாலை – எங்கள் பள்ளிக்கருகில் வாரச்சந்தை வியாழக்கிழமை கூடும் – நான் வைத்திருந்த காய்கறிப் பையை பார்த்து விட்டு, “என்னடா அது பையில காய்கறி,” என்றார்.  “வீட்டுக்கு, சந்தையில இருந்து வாங்கிட்டுப் போறேன்,” என்றேன்.
அதன் பிறகு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் பையில் விதம், விதமான காய்கறி வந்து சேரும். “பையத்  திரும்ப கொண்டு வந்திரனும்டா,” என்ற எச்சரிக்கை இலவச இணைப்பாக இருக்கும். ஒரு முறை கையில் வெற்றிலைக் கட்டு இருப்பதை பார்த்து விட்டு, “எதுக்கு இவ்வளவு வெத்தல வாங்கிட்டுப் போற,” என்ற கேள்வி எழுப்பினார். “ஊருல இருந்து, ஆச்சியும், தாத்தாவும் வந்திருக்காங்க.  ரெண்டு பேரும் நெறைய வெத்தல போடுவாங்க.”  மறு நாளிலிருந்து,  ஆச்சி, தாத்தா ஊருக்குப் போகும்வரை, கொழுந்து வெற்றிலை தினம் வந்துவிடும்.
“அந்த அக்கா வீட்டுல நெறைய தோட்டம் வச்சுருக்காங்க.  வெத்தல கொடிக்கால் கூட இருக்கு.   ஆனா, எங்க யாருக்கும் எதுவும் குடுக்க மாட்டங்க.  அதென்னவோ ஒனக்கு மட்டும் குடுக்குறாங்க,” சோப்ளாங்கி சுந்தர் ஒரு முறை சொன்னான்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் விச்சு அண்ணனும், சேகர் அண்ணனும் அறிமுகம் ஆனார்கள். இருவரும் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.  விச்சு அண்ணனுக்கு ஒரு தலை ராகம் சங்கர் என்ற பட்டப் பெயர் உண்டு.  மாலை ஐந்தாம் எண் பிளாட்பாரத்தில் தினமும் அவர் கச்சேரி நடக்கும். 
கூடையில கருவாடு’, என அவர் பாட ஆரம்பித்தால், நேயர் விருப்பத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து டிபன் பாக்ஸிலேயே தாளம் போட்டு அருமையாகப் பாடுவார். அசப்பிலும், ஒரு தலை ராகம் நாயகன் சங்கர் போலவே இருப்பார்.  சேகர் அண்ணன் நேர் எதிர்;  யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஏதாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பார்.  அவர் ஒரு நோட்டு முழுக்க கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகவும் சொல்லுவார்.
சேகர் அண்ணன், கல்பனா அக்காவின் மாமன் மகன் என்றும், விச்சு அண்ணன் அத்தை மகன் என்றும் சுந்தரின் தகவல்.  சேகர் அண்ணனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றும், ஒரு சில முறை கஞ்சா புகைத்துவிட்டு ஊரில் தகராறு செய்திருப்பதாகவும், ஒரு முறை கஞ்சா போதையில் கிணற்றில் குதித்து விட்டதாகவும், சேகர் அண்ணனைத்தான் கல்பனா அக்கா கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் சுந்தர் சொல்லியிருந்தான்.
கல்பனா அக்கா ஒரு சில நாட்கள் சேகர் அண்ணனுடன் பேசிக் கொண்டிருப்பதையும், அப்போதெல்லாம் அவர் கண் கலங்கி இருப்பதையும் பார்த்திருக்கிறேன். விச்சு அண்ணன் குடும்பத்திற்கும், கல்பனா அக்கா குடும்பத்திற்கும் ஏதோ பிரச்சினை உண்டென்றும், அதனால் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்பதும் தெரியும். 
“ஏன் ரமேஷு, இந்த கல்பனா யாருட்டயும் சிரிச்சுப் பேச மாட்டா, பயங்கர கஞ்சம் வேற.  எப்புடி உனக்கு மட்டும் பிரெண்ட் ஆனா.  அதுவும் அப்பப்ப குடுக்கல், வாங்கல் வேற நடக்குது.  அது எப்புடிரா,” விச்சு அண்ணன் ஒரு முறை கேட்டார்.
“அவன் முக ராசிக்கு, தேவதைகள் சகவாசம் ஜாஸ்தி,” சொல்லிவிட்டு ஏனோ சிரித்தார் அருகிலிருந்த சேகர் அண்ணன். 
“தேவதைகள் சகவாசம்.  சேகரு, நீயும் கவிதைங்கிற பேருல என்னன்னவோ எழுதி என்னைய படிச்சுப் பாக்கச் சொல்லுவ.  இந்த வரி இருக்கே. தேவதைகள் சகவாசம் ஆகா, நீ எழுதுன, சொன்ன கவிதைகளோட உச்சம் இந்த ரெண்டு வார்த்தைதாண்டா,  விச்சு அண்ணன் நிஜமாக பேசுகிறாரா அல்லது கிண்டலா என்று எனக்குப் புரியவில்லை. 
இந்த உரையாடலுக்கு அடுத்த வாரம்தான் அந்த விபரீதம் நடந்தது.  விச்சு அண்ணன் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்து, அதை கல்பனா அக்காவிடம் கொடுக்கச் சொன்னார்.  தோழிகளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த கல்பனா அக்காவிடம் போய், “இந்தாங்கக்கா,” என்று நீட்டினேன். “என்னடா அது,” கையில் வாங்காமல் கேட்டார்.  “தெரியலக்கா, விச்சு அண்ணன் குடுக்கச் சொன்னாரு,” என்றேன். “யாரு ஒரு தலை ராகமா. குடு பாக்கலாம்,” வாங்கிக் கொண்டார்.  நான் விளையாட்டு மும்முரத்தில் ஓடி வந்துவிட்டேன். 
சில நிமிடங்களில், தண்ணீர் குழாய்க்குப் பின் ஒளிந்து நின்றவன் – கண்ணாமூச்சி ஆட்டம் – தலையில் நங்கென்று கொட்டு விழுந்தது.  திரும்பிப் பார்த்தால், கல்பனா அக்கா. கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துச் சென்று, விச்சு அண்ணன் முன்னால் நிறுத்தினார்.
“இங்க பாரு, இந்த லவ் லெட்டர் குடுக்கிற வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காத.  சின்னப் பயகிட்ட குடுத்து அனுப்புற.  நாலு பிள்ளைகளோட பேசிக்கிட்டு இருக்கும்போது கொண்டாந்து குடுத்தா.. மத்தவங்க என்ன நினைப்பாங்க. அறிவில்ல,” என்று திட்டிவிட்டு, அந்தக் கடிதத்தை விச்சு அண்ணன்  மேலேயே எறிந்தார்.  “இன்னொருவாட்டி இவரு என்னத்தயாவது குடுத்தாருன்னு கொண்டாந்த, அவ்வளவுதான்,” என்று எனக்கும் ஒரு மிரட்டல் இருந்தது.
“தேவதைகளுக்குக் கோபமும் வரும்,” சிரித்துக் கொண்டே ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார் சேகர் அண்ணன்.
ஒன்றிரண்டு நாட்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது திட்டிக் கொண்டிருந்தார் கல்பனா அக்கா. அதன் பிறகு, எப்படியோ எங்களுக்கிடையில் சமாதானம் பிறந்தது.
என்னுடைய  பத்தாம் வகுப்பு, கடைசி பரீட்சை நாளன்று கல்பனா அக்கா  அழுதுவிட்டார். “எனக்குக் கூடப் பிறந்த அக்கா, அண்ணன்லாம் இருக்காங்க.  ஆனா, தம்பி கிடையாது. உன்னையத்தான் கூடப் பிறந்த தம்பியா நெனச்சிருந்தேன்.  இனிமேல உன்னையும் பாக்க முடியாது,” என்று கண்ணீர்விட்டார்.  நான் படித்த பள்ளியில் மேல்நிலை வகுப்புகள் இல்லை என்பதால், நான் பள்ளி மாற வேண்டிய கட்டாயம்.  கல்பனா அக்காவும் பிளஸ் டூ எழுதியிருந்ததால், அவர் எதிர் காலம் குறித்தும் எந்த வித கணிப்பும் இல்லாத நிலையில் எங்கள் பிரிவு நடந்தது.
“சார், உங்க பேரு ரமேஷா,” அநேகமாக வங்கியின் அட்டண்டர் ஆக இருக்க வேண்டும், என் எதிரே நின்றிருந்தார்.  “ஆமாம்,” எழுந்து நின்றேன்.  “உங்க நாலு பேரையும் லஞ்ச் ரூமுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க, கல்பனா மேடம்,” அவர் நடக்க, நாங்கள் நாலு பேரும் தொடர்ந்தோம்.
லஞ்ச் ரூமில் நான் சேகர் அண்ணனை சந்திக்கப் போகிறேன். விச்சு அண்ணனுக்காக, லவ் லெட்டர் எடுத்துக் கொண்டு தூது போனவன் நான். என்னை அவரும், அவரை நானும் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்.
அடுத்த அதிர்ச்சி, லஞ்ச் ரூமில் எனக்காகக் காத்திருந்தது, ஒரு தலை ராகம் சங்கர் என்ற புகழ் (பட்டம்) பெற்ற விச்சு அண்ணன்.  “ஏய் ரமேசு, நல்லாயிருக்கியா,” கையைப் பிடித்துக் கொண்டார். எனக்குப் பேச்சே வரவில்லை.  பேச்சென்ன பேச்சு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.  சுற்று, முற்றும் பார்த்தேன். இன்னும் கல்பனா அக்கா வந்திருக்கவில்லை.
ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “அண்ணே நீங்களா.   நல்லாயிருக்கீங்களா,” என்றேன்.
“நீங்களான்னு நீ இழுக்கிறதுலயே புரியுது.  நீ என்னைய எதிர்பார்க்கல இல்ல.”
சங்கடமாக இருந்தாலும் சொல்லிவிட்டேன், “நான் சேகர் அண்ணனை எதிர்பார்த்தேன்.”
“அது பெரிய கத ரமேசு.  மொதல்ல கல்பனாவுக்கு சேகரத்தான் பேசி முடிச்சிருந்தாங்க.  அவன் நேரம், ஒரு நாள் கஞ்சா போதையில வைகை எக்ஸ்பிரஸ்ல விழுந்துட்டான்.  மூட்டை கட்டித்தான் எடுத்துட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாளு கல்பனாவும் பித்துப் பிடிச்சாப்புலதான் இருந்தா,” தொடர்ந்து விச்சு அண்ணன் பேசிக் கொண்டிருந்தார்.  அநேகமாக, அதன் பிறகு கல்பனா அக்கா அதிலிருந்து மீண்டு வந்ததும், இவர்கள் இருவருக்குமான காதல் மற்றும் கல்யாணம் குறித்தும், சென்னைக்கு மாறுதல் ஆகி  வந்தது பற்றியும் அவர் பேசியிருக்கலாம்.  ஆனால், என் காதில் எதுவும் விழவில்லை. சேகர் அண்ணன் ரயிலில் விழுந்து இறந்து போனார் என்ற செய்திக்குப் பிறகு, என் செவியிலும், மூளையிலும் எதுவும் ஏறவில்லை. 
இன்னும் சற்று நேரத்தில் வரப் போகும் கல்பனா அக்காவை நேருக்கு நேராக எப்படிப் பார்த்துப் பேசப் போகிறேன் என்று தெரியவில்லை. அவரைப் பற்றி நினைக்கும் போது, பயம் வந்து நெஞ்சை அடைத்துக் கொள்கிறது; இந்தக் கதையில், இதுவரை நடந்ததை முழுமையாக உங்களிடம் நான்  சொல்லவில்லை. இதற்கு மேலும் நான் சொல்லாமல் இருக்க முடியாது.  அதை சொன்னால்தான் கல்பனா அக்கா குறித்து நான் ஏன் பயந்தேன் என்பது உங்களுக்குப் புரியும். தயவு செய்து நீங்கள் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்; உங்களால் ரகசியம் காக்க முடியுமென்றால் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.

இந்த இடத்தில் மதுரை சந்திப்பின் (Madurai Junction) அமைப்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய மேற்கு நுழைவு வாயில் அந்தக் காலத்தில் இருக்கவில்லை.  நடை மேடை மேம்பாலம் மட்டும் இருக்கும். இப்போது போல் அந்தக் கடைசி நடைமேடையில் பயணிகள் ரயில் எதுவும் வராது.  அந்த நடைமேடையில்  Goods Wagon-கள் மட்டும் நின்று கொண்டிருக்கும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. தினசரி மாலை கல்லூரி முடிந்ததும், சேகர் அண்ணன் நேராக அங்குதான் போவார்.  அவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்பதற்காக நானும், சந்துருவும் ஒரு நாள் மெதுவாக போய்ப் பார்த்தோம். சேகர் அண்ணன் ஒரு பெட்டிக்குப் பின்னால் நின்று கொண்டு புகை பிடித்துக் கொண்டிருந்தார். ஏதோ அரவம் கேட்டுத் திரும்பிய அவர் எங்கள் இருவரையும் பார்த்து விட்டார்.
“டேய், இங்க வாங்கடா,” என்று அவர் அழைத்ததும், சந்துரு படியேறி ஓடிவிட்டான். நான் மட்டும் அவரிடம் தனியாக மாட்டிக் கொண்டேன்.  மாட்டிக்கொண்டேன் என்பதைவிட, அவருடன் பேசிப் பார்க்கும் ஒரு ஆவல் என்னிடம் இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
“ஒம்பேருதான ரமேஷ்.  இங்க ஏண்டா வந்த.  நான் என்ன பண்ணுறேன்னு பாத்துட்டு வரச் சொன்னாளா அவ,” என்றார்.  “யாருண்ணே, என்ன சொல்லுறீங்க,” புரியாத மாதிரி கேட்டேன்.
“அவதாண்டா, கல்பனாதான நான் என்ன பண்ணுறேன்னு பாத்துட்டு வரச் சொன்னா.”
“இல்லண்ணே.  நானாத்தான் வந்தேன்.  சும்மா நீங்க என்ன பண்ணுறீங்கன்னு பாக்கலாமுன்னு வந்தேன்,” என்றேன்.
“அவள எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  ஆனா அவளுக்குதான் என்னைக் கண்டாலே ஆகல.  ஆமா, உங்கிட்ட பேசும்போது, என்னைப் பத்தி எதுவும் சொல்லுவாளா,” அவருடைய கண்களின் ஓரம் ஒரு ஆவல் மின்னியது.
“நீங்க அந்த அக்காவைக் கட்டிக்கப் போறவரு.  உங்களைப் பத்தி என்கிட்டே ஏண்ணே அவுங்க பேசணும்.  அந்த அக்காதான் நேராவே உங்ககிட்ட பேசுறாங்களே,” என்றேன்.
“ஆமா, பேசுறா பேச்சு.  எங்கிட்ட பேசுற ஒவ்வொரு தடவையும் தேளாத்தான் கொட்டுறா.  நான் கவிதை எழுதுறேன்னு உருப்படியில்லாம திரியிறேனாம். ஒழுங்காப் படிக்கிறதில்லையாம். என்னைக் கட்டிகிட்டா அவ வாழ்க்கை சீரழிஞ்சு போயிருமாம்.  இதெல்லாம் பரவாயில்ல, நீ செத்துப் போயிரு.  நான் வேற யாரையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமாயிருப்பேன்னு எங்கிட்டய சொல்லுறா.  மனசு கஷ்டப்பட்டு அவ என்னைக் கட்டிக்கிறத விட, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தாலும் எனக்குப் போதும்.  எனக்கு அவள ரொம்பப் பிடிக்கும்டா.  என்னோட கவிதைகளோட நாயகியே அவதாண்டா.  அவ சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.  இன்னைக்கு உனக்கு சொல்லுறேன், நான் போதையிலே சொல்லுறேன்னு நீ நெனச்சாலும், நான் என்னிக்காவது செத்துப் போனா, அது நிச்சயமா கல்பனாவோட சந்தோஷத்துக்காகத்தான்.” இதைச் சொல்லிவிட்டு, குலுங்கிக் குலுங்கி, கண்ணீர்விட்டு அழும் சேகர் அண்ணனை ஒரு பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போது சொல்லுங்கள்.  நான் வரப் போகும் கல்பனா அக்காவுக்காகக் காத்திருப்பதா, அல்லது சொல்லாமல் கொள்ளாமல் வங்கியைவிட்டு வெளியேறுவதா.