Friday 17 September 2021

புகைப்படம்

 "இந்த  காமரால எத்தன படம் எடுக்க முடியும்.  என்ன பிலிம் போடணும்",னு வைத்திலிங்கம் அண்ணாச்சி கேட்டாக.  அண்ணாச்சி ஒரு வெள்ளந்தி மனுசன்.  அந்தக் காலத்துல - ரொம்ப காலமெல்லாம் இல்ல, ஒரு முப்பது வருஷம் முந்தி வரைக்கும் ஓடிட்டு இருந்த திருவள்ளுவர் போக்குவரத்துக்கு கழகத்துல ஓட்டுனரா இருந்தவுக.  நாலு ஊரு பாத்துவுக; விதவிதமான மனுசங்களப் பாத்தவுக.  அப்படியிருந்தும் ஒரு மனுசன் எப்படி வெள்ளந்தியா இருக்க முடியும்னுதான் எனக்கு ஆச்சரியம்.  அவுக இப்படி கேட்டது பத்து வருசத்துக்கு முன்னால.  இப்ப அவுக இல்ல; தவறிட்டாக.  

"இல்ல அண்ணாச்சி, இது டிஜிட்டல் கேமரா.  இதுல பிலிம் கெடையாது.  இந்த ஒரு சின்ன கார்டு தான்.  சுமாரா 300 போட்டோ எடுக்கலாம்", னு நான் சொன்னதும் அவுகளுக்கு அம்புட்டு ஆச்சரியம்.  இப்பம் ஏன் திடீருன்னு அவுக நெனப்பு வந்துச்சுன்னா, பிபிசி-யில Antique Road Show அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.  நேத்து அதுல சுமார் 70 வருசத்துக்கு முன்னால ராணி எலிசபெத் II பதவி ஏத்துக்கிட்டத ஒரு மனுசன் போட்டோ புடிச்சிருக்கான்.  அந்த போட்டோ இப்பம் அவனோட வாரிசு ஒருத்தருகிட்ட இருக்கு.  அந்த போட்டோ எல்லாம் இப்போ எத்தனையோ மில்லியன் டாலருக்கு வெல போகும்னு அதப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாய்ங்க.  ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நெனைக்கிறேன்.  மனுச மனசு ஒரு குரங்குன்னு.  இருந்திருந்தாப்புல எங்கெங்கேயோ ஓடும்.  அப்படித்தான் போட்டோ பத்தி நெனைக்க ஆரம்பிச்சதும் வைத்திலிங்கம் அண்ணாச்சி ஞாபகம்.  

அதோட நின்னா பரவாயில்லை; அதையும் தாண்டி போய்க்கிட்டே இருக்கு.  இன்னைக்கி பாத்தா எல்லார் கையிலயும் போன் இருக்கு;  அதுல நெனச்ச நேரத்துல போட்டோ எடுக்கலாம்.  ஏன் விடியோவே எடுக்கலாம்.  ஆனா, நான் படிக்கிற காலத்துல ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க என்னென்ன அக்கப்போருல்லாம்  நடக்கும்னு நெனச்சுப் பாக்குது இந்த மனசு.  பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப பஸ் பாஸ் வாங்கணும்னா கண்டிப்பா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.  அதுக்கு ஒரு பெரிய ஆராய்ச்சி நடக்கும்;  அக்கம் பக்கத்துல எந்த ஸ்டூடியோ இருக்கு, அதுல போட்டோ எடுக்க என்ன விலை.  போட்டோ எடுத்தா நெகடிவ் சேத்து  குடுப்பாய்ங்களா;  ஏன்னா நெகடிவ் இருந்தா அதுலேயிருந்து தேவைப்படும்போது போட்டோ எடுத்துக்கலாம்.  இல்லையின்னா, ஒவ்வொரு தடவையும் புதுசா போயி ஸ்டூடியோ கதவை தட்டணும்.  இதுல இன்னொரு பிரச்சனை என்னன்னா, போட்டோ எடுத்து சில சமயம் ஒரு வாரம் வரைக்கும் ஆகும் நம்ம கைக்கு வர்றதுக்கு.  ஏன்னா அந்த ரோல் முழுக்க எடுத்து முடிச்சப்பறம்தான் பிரிண்ட் போடுவாங்க.  

கேப்ரோன் ஹால் பள்ளிக்கூடம் முன்னாடி ஜி.ஆர்.மணி ஸ்டுடியோ இருக்கும்; இன்னைக்கும் இருக்குதான்னு தெரியல.  அந்த ஸ்டுடியோ போனா அங்க இருக்கிற அண்ணன்  நல்லா பளிச்சுன்னு போட்டோ எடுத்துக் குடுப்பாருன்னு எல்லாரும் சொல்லுவாய்ங்க.  அவரு தலை நெறைய எண்ணெய் தேச்சுக்கிட்டு வந்தா போட்டோ எடுக்க மாட்டாரு.  அப்படி இருந்தா முடி நரைச்சாப்பல தெரியுமாம்.  அதே மாதிரி வேர்வையோட போனாலும், பின்னாடி இருக்கிற பாத்ரூமுல முகத்த கழுவி, பவுடர் போட்டு வந்தாத்தான் போட்டோ எடுக்குற படலமே  ஆரம்பிக்கும்.  முகத்த நேரா வையி; கண்ண சுருக்காத; அப்படி சாயி, இப்புடி நேரா நில்லுன்னு ஒரு வழி பண்ணித்தான் போட்டோ எடுப்பாரு.  ஆனா, நான் அவருகிட்ட ஒரு தடவைதான் போட்டோ எடுத்திருக்கேன்.  ஏன்னா அவரு 4 ரூவா 50 காசு வாங்குவாரு.  அது போக அவரு நெகடிவ் குடுக்க மாட்டாரு. இந்த ஓம் ஸ்டுடியோ இருக்கு பாருங்க, அதான் இந்த அரசரடியில மாடியில இருக்குமே, அங்க 4 ரூவாதான்.  அதுவும் போக நெகடிவ் குடுத்துருவாங்க.  

இப்படித்தாங்க, ஒன்னு மேல ஒண்ணா நெனப்பு அடுக்கிக்கிட்டே போகுது.  அப்பல்லாம் வீட்டுப் பின்னாடி நின்னு பாத்தா விளாங்குடி ஸ்டேஷன் தெரியும்; போற, வார எல்லா ரயிலும் தெரியும்.  அந்த ரயிலு என்ஜின் பின்னாடி கோத்துக்கிட்டு வரிசையா போற பெட்டிங்க மாதிரி ஒவ்வொரு நெனப்பா தொரத்திக்கிட்டே வருது.  

போட்டோ பத்தில்லாம் இவ்வளோ பேசிட்டு சும்மா போக முடியுமா.  அதான் போறதுக்கு முன்னால ரெண்டு புகைப்படம். 

இது உலகப் புகழ் பெற்ற  ஒரு புகைப்படம்.  அமெரிக்க அண்ணாச்சி செஞ்ச அக்கிரமங்களுக்கு ஒரு சாட்சி.



இந்த போட்டோக்கு விளக்கம் குடுத்தா என்னய அதிகப்பிரசங்கிம்பீங்க;  இல்லன்னா ஆன்டி இந்தியன்னு சொல்லுவீங்க.  அதுனால, NO COMMENTS.

எங்கே என் சினார் வாசம்.

நம்ம வாசிப்பில் எங்கேயோ, எப்போதோ வாசித்த ஒரு கட்டுரையோ அல்லது ஒரு கவிதையோ நம்மை எங்கோ இழுத்துச் செல்லும்.  நம்முடைய ஒரு சூழ்நிலைக்கு அது அப்படியே பொருந்தும்.  இந்த கவிதையை எழுதியவனும், அதை மொழி பெயர்த்தவனும், அதை எனக்கு அறிமுகம் செய்தவனும் இப்போது எனக்கு அருகாமையில் இல்லை; ஆனாலும் அவன் நெய்த இந்த கவிதை என்னை அசைத்துப் பார்க்கிறது.  

காஷ்மீரத்து இளைஞன் அவன்; தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தை சூழ்ந்த இனிய குடும்பம் அவனது.  காலம் செய்த கோலங்கள் விசித்திரமானவை;  போராளிகளாலும்/தீவிரவாதிகளாலும் அவர்களை ஒடுக்க முயலும் அரசு எந்திரத்தினாலும் அவன் தனது மண்ணை விட்டு நகர்கிறான் - குடும்பத்துடன்.  

காலம் எப்போதும் ஒன்றே போலிருக்காதல்லவா?  அவன் நகர்ந்த மண்ணிலும் அவன் உழைத்துப் பிழைக்க ஓர் உத்தியோகம் கிடைக்கிறது.  ஆனால், அவன் தாய் நோய் வாய்ப்படுகிறாள்.  மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்.  மருந்துச் சீட்டு தரப்படுகிறது,

                "சினார் மர வாசங்கள் நிறைந்த தென்றல் போதும்;
                    சினார் மரப்பூக்கள் நிரம்பிய பாதையில் பயணிக்க வேண்டும்."

கான்க்ரீட் காடுகளுக்குள் சினார் மரங்களை எங்கு தேடுவதென்று தெரியாமல் அந்த மகன் அழுகிறான்.

இப்போது ஒரு கண்ணுக்குத்  தெரியாத ஓர் எதிரியால் என் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன;  என் சினார் 5626 மைல் தொலைவில் இருக்கிறது.  அது இயற்கையாய் உருவானதோ அல்லது செயற்கையாய் உருவாக்கப்பட்டதோ - கொரோனா என்ற நுண்ணுயிரி என்னை....................