Saturday 14 October 2017

தரையிறங்க மறந்த விமானங்கள்

முன் குறிப்பு: கொஞ்சம் பெரிய கதை.  இது முழுக்க முழுக்க கற்பனை               கதையில்லீங்க;  பேர மாத்தி சொல்லியிருந்தாலும், இந்தக் கதையின் நாயகி நிஜம்.


ம்ப முடியாத தருணங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை.  இது ராகேஷுக்கும் நன்கு தெரியும்.  மிருணாவை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்தித்ததும் அப்படித்தான்.  படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து ஒரு கணம் தலை நிமிர்த்திய போது கடந்து சென்ற பெண் மிருணா போலவே இருப்பதாக தோன்றியது.  உற்றுப் பார்த்து அது அவளேதான் என்று உறுதி செய்து கொண்டான்.

பதினொரு வருஷத்துக்கு முந்தைய மிருணாவுக்கும், இவளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் தெரிந்தது.  நிச்சயமாக அது வருடங்கள் கடந்ததனால் மட்டும் ஏற்பட்ட  வித்தியாசம் இல்லை.  அதையும் தாண்டி ஏதோ ஒன்று என்று மனதுக்குப் பட்டது.  அவள் நிச்சயமாக ராகேஷை கவனிக்கவில்லை.  போனில் யாருடனோ பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.  

மாலையும் கழுத்துமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டு சிவாவுடன் அவள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்தக் கணம்தான் இன்னும் மனதுக்குள் நினைவில் இருக்கிறது.  நான் நினைத்ததை அடைந்து விட்டேன் பார்  என்ற கம்பீரம் அவள் முகத்தில் அப்போது நிறைந்திருந்தது.  சிவாவின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு, சாட்சியாகவும், வாழ்த்து சொல்லவும் வந்திருந்த நண்பர்களுக்கு அவள் நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.  

மிருணா நடந்து சென்று ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமரும் கணம் வரை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.  மெதுவாக திரும்பி ஜீவாவும், குழந்தைகளும் எங்கிருக்கிறார்கள் என்று தேடினான்.  அவர்கள் மூவரும், விமானங்கள் மேலேறுவதையும், தரையிறங்குவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  எழுந்து அவர்களை நோக்கி நடந்தான்.

"என்ன புக் போரடிச்சுருச்சா. இல்ல பிள்ளைகள தேடிருச்சா,"  புன்னகையுடன் கேட்டாள் ஜீவா.  "ஜீவா எனக்குத் தெரிஞ்சவுங்க ஒருத்தர இங்க பார்த்தேன்.  அவங்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தணும்.  வர்றீங்களா," கேட்டான் ராகேஷ்.  "இங்க பாருங்கப்பா, உங்க அப்பாவுக்கு சிங்கபூரிலேயும் யாரோ  தெரிஞ்சவுங்க இருக்குறாங்க பாரு," சிரித்துக்கொண்டே பிள்ளைகளுடன் எழுந்தாள் ஜீவா. 

மூவரையும் அழைத்துக்கொண்டு மிருணாவை நோக்கி நடந்தான்.  அவள் எதிரே நின்று, "ஹலோ மிருணாளினி, எப்படியிருக்கீங்க."  பெயர்  சொல்லி யாரோ அழைக்கும் ஆச்சரியமும், பதட்டமும் சேர நிமிர்ந்து பார்த்தாள், அதுவரை கைப்பையில் ஏதோ குடைந்து கொண்டிருந்தவள்.  ராகேஷைப் பார்த்ததும், அவள் முகத்தில் அலையடித்த உணர்ச்சிகளை எப்படி வகைப் படுத்துவது என்று ராகேஷுக்குப் புரியவில்லை.  அதில் அவனை அடையாளம் கண்டு கொண்டதும், அதிர்ச்சிதான் அதிகமிருந்ததாகத்  தோன்றியது.

"அடையாளம் தெரியுதா; நாந்தான் ராகேஷ்.  இவங்க என் மனைவி ஜீவிதா, எனக்கு சுருக்கமா ஜீவா.  இவங்க ரெண்டு பெரும் என் பெண்கள்; பெரியவங்க ரோகிணி, எட்டு வயசு; சின்னவங்க ராதிகா, அஞ்சு வயசு," சகஜமாக பேசினான் ராகேஷ். "ஜீவா இவங்கதான் நான் அடிக்கடி சொல்லுவேனே, தி கிரேட் மிருணாளினி.  ரோகிணி, ராதிகா, ஆண்டிக்கு வணக்கம் சொல்லுங்க."

"வணக்கம்  ஆண்டி," வணக்கம் சொன்னார்கள் குழந்தைகள். "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி," கை குலுக்கினாள் ஜீவா.  மிருணாவும் பதிலுக்கு ஒரு புன்னகையை திருப்பிக் கொடுத்தவாறே கை குலுக்கினாள்.

"ஏய் ராகேஷ், இது என்ன புதுசா முழுப் பேர் சொல்லி கூப்பிடுற;  போங்க, வாங்கன்னு மரியாதை வேற," என்ற மிருணா, "சாரி கைஸ், நான் ரொம்ப பசியில இருக்கேன்.  யாரார் என் கூட சாப்பிட வர்றீங்க."

"இல்ல, நாங்க எல்லாரும் இப்போதான் சாப்பிட்டோம்," என்றான் ராகேஷ்.

"வாட் அபவுட் ஐஸ் கிரீம் கேர்ள்ஸ்," என்று குழந்தைகளைக் கேட்டாள் மிருணா.

"ஏய்," என்ற உற்சாகக் குரலுடன் குழந்தைகள் ஆவலுடன் ஒட்டிக் கொண்டன.  "சரி ஜீவா.  நீயும் கூட அவங்க கூட போ.  நான் இங்கேயே இருக்கிறேன்,"  என்று அவர்கள் நால்வரையும் அனுப்பினான் ராகேஷ்.

தூரத்தில் நால்வரும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்திருப்பதும், குழந்தைகள் முன் ஐஸ் கிரீம் இருக்க,  ஜீவா முன்னால் ஒரு தட்டில் கட்லெட் இருந்தது.  சில நிமிடங்களிலேயே  பல வருஷப் பழக்கம் போல் ஜீவாவுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மிருணா.

அது தான் மிருணா.

ராகேஷ், ராகவ், மணி, செந்தில் என்று நால்வரும் கல்லூரிக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்த காலம் அது.   ராகவ் வீட்டில் குரூப் ஸ்டடி என்ற பெயரில், கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருந்த ஒரு மாலையில் தான், அந்த அறைக்குள் புயலென வந்தாள் மிருணா.  "ஏம்பா ராகவ், நாங்க மூணு பேரு நிஜமாவே அடுத்த ரூம்ல படிச்சுட்டு இருக்கோம்;  அத மனசுல வச்சுக்கிட்டு சத்தம் போடுங்க," என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

மிருணாவை பேரழகி என்றெல்லாம் வகைப்படுத்தி விட முடியாது. ஒரு சாதாரணமான மற்றும் அசாதாரணமான பெண் அவள். ஆனால், அவள் இருக்கும் இடத்தை ஒளிமயமாய் மாற்றும் வித்தை அவளிடமிருந்தது.  கொஞ்சம், கொஞ்சமாக நண்பனின் தங்கை என்ற முறையில் அவர்கள் வட்டத்தில் நெருங்கிய அவளுக்கு, ராகேஷ் மட்டும் ஏதோ ஒரு வகையில் அவள் சகஜமாகப் பேசும் நண்பனாக மாறி  விட்டான்.

படிப்பில் புலி என்றால், சமையலில் நளனின் சகோதரி;  வீட்டை ஒரு கலைக் கூடமாய் வைத்திருந்தாள்;  கல்லூரியிலும் கவிதை, கதை, நாடகம் என்று அவளின் கொடியைப் பறக்க விட்டிருந்தாள்.

"இவ்ளோ திறமைசாலியான உனக்குப் புருஷனா வரப் போற அதிர்ஷ்டக்காரன் யாருன்னு தெரியல.  அவன நெனச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு," விளையாட்டாய் பேசும் ஒரு கணத்தில் ராகேஷ் சொன்னான்.

"அந்த அதிர்ஷ்டக்காரன் சிவா தான்;  அவனை நானே உனக்கு ஒரு முறை  அறிமுகப்படுத்தணும்," சகஜமாக சொல்லிவிட்டு போனாள்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் ஏதோ நாடகம் போலவும்,  அந்த நாடகத்துக்குள்ளேயே  ஒரு பாத்திரமாய்  வாழ்ந்து கொண்டே வேடிக்கையும் பார்ப்பது போலத்தான் இருந்தது ராகேஷுக்கு.  வேறு ஜாதி என்ற காரணத்தினால் சிவாவை, ராகவ் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்ததும்,  சிவா வீட்டிலும் அந்தஸ்தை காரணம் காட்டி எதிர்த்ததும் நடந்தது.

கல்லூரி முடிந்து, மிருணா ஒரு வேலையில் அமர்ந்ததும், நண்பர்களை மட்டும் அழைத்து சிவாவை பதிவுத் திருமணம் செய்து  கொண்டாள்.  அந்த சந்தர்ப்பம்தான் ராகேஷ் மிருணாவை கடைசியாய் பார்த்தது.  அதன் பிறகு இன்றுதான்..... ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிந்தது;  அவள் மகிழ்ச்சியாய் இல்லை.  பேச்சிலும், பாவனையிலும் உற்சாகமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும், அதில் ஒரு குறை பளிச்சென தெரிந்தது.

அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதன் காரணமாய், ராகவும் அவன் குடும்பமும் ராகேஷை முழுமையாய் ஒதுக்கி விட்டார்கள்.  காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.  ராகேஷை கடல் கடந்து பிழைப்பு தேடித்  துரத்தியது.  ஊரிலும் பழைய நண்பர்களுடன் முழுமையாகத் தொடர்பு அறுந்து போனது.

"ல்லவேளை, காலி இருக்கையெல்லாம் இருக்கு; உன்னோட ஜீவாவும், பிள்ளைகளும் முன்னாடி வரிசையில இருக்காங்க.  நாம சென்னைக்குப் போற நாலு மணி நேரம் நான், உன்கூடப்  பேசணும்.  அதான் உன் பக்கத்து இருக்கைக்கு வந்தேன்.  ஜீவாகிட்ட பெர்மிசன் வாங்கியாச்சுப்பா," சொல்லிக் கொண்டே ராகேஷின் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள் மிருணா.  ஒன்றும் சொல்லத்  தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் - அவள் உதிர்க்கப் போகும் வார்த்தைகளுக்காகக்   காத்திருந்தான்.


"வாழ்க்கையில ஒவ்வொரு சந்தர்ப்பத்துலயும் நாம ஒரு முடிவு எடுப்போம்; அந்தக் கணத்தில் அது மிகச் சரியான முடிவாகத் தோன்றும்.  எதிர் காலத்தில் அந்த முடிவின் விளைவுகள் எதிர் மறையா போகும் போதுதான், ஏனிப்படி முடிவெடுத்தோம் அப்படின்னு தோணும்.  அப்படித்தான், சிவாவை கல்யாணம் செஞ்சுக்கிரதுன்னு நான் எடுத்த முடிவு என் வாழ்க்கையின் மிகக் கசப்பான தருணங்கள்ள என்னைய தள்ளிருச்சு.  ஹோல்ட் ஆன் ராகேஷ், நான் பேசணும்;  அதுக்குப் பிறகு நீ எனக்கு ஆறுதல் தரும்னு நினைக்கிற வார்த்தைகள சொல்லலாம்.   எங்க திருமண வாழ்க்கையோட ஆயுள்  மூணு வருஷம்தான்.  அந்த மூணு வருஷத்துலகூட நான் சந்தோஷமா இருந்த நாட்கள் ரொம்பக் கம்மி. 

"சிவா நிச்சயமா எனக்கு ஒரு நல்ல கணவனா இருப்பான்னு நம்பித்தான் அந்த முடிவ எடுத்தேன்.  அதுக்காக என்னைய உள்ளங்கையில வச்சு பாத்துக்கணும்னு நான் எதிர் பார்க்கல;  ஒரு சக மனுஷியா, மனைவியா என்னைய நடத்துவான்னு நம்பினேன்.  ஆனா, அவன் வளர்ந்த சூழ்நிலை,  ஒரு பெண்ணை எப்படி நடத்தணும் அப்படின்னு அவன் குடும்பத்துல போதிக்கப்பட்டது எல்லாம் வேற மாதிரி.  முதல்ல அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கல; அல்லது கிடைச்ச வேலைய அவனால ஏத்துக்க முடியல.  அவன் குடும்பப் பாரம்பரியம் வியாபாரம்.  அதுல வீட்டுப் பெண்களுக்கு எந்த விதத்துலயும் பங்கில்லை;  ஆண்கள் என்ன சொல்லுறாங்களோ, அதுக்குக் கட்டுப்பட்டு நடப்பது மட்டும்தான் அவங்க வீட்டுப் பெண்களின் பழக்கம்.  அதுக்கு மாறா நான் சுயமா சிந்திக்கிறதும், வேலை பார்க்கிறதும், அவனால ஏத்துக்க முடியல.  தினம்தோறும் எங்களுக்குள்ள பிரச்சினைகள் வர ஆரம்பிச்சுது.  இதுக்கிடையில எங்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.  குழந்தைய பார்த்துக்க என்னைய வேலைய விடச் சொன்னான்.  ஆனால், அவனுக்கு எந்த வருமானமும் இல்லாதது ஒரு பெரிய தடையா இருந்துச்சு.  நான் வேலைய விட முடியாதுன்னு சொல்லிட்டேன்.  இந்த எல்லாமும் சேர்ந்து நாங்க மூணே வருஷத்துல கோர்ட் படி ஏறிட்டோம்.  சட்டப்படி விவாகரத்தும் ஆயிருச்சு.  இவ்வளவு பிரச்சினைகளிலும், எங்க வீட்டில இருந்து எனக்கு எந்த வித ஆதரவும் கிடைக்கல.  நான் தனியாளா நின்னு சமாளிச்சேன். 

"இவ்வளவுக்குப் பிறகும், நான் எழுந்து நின்னேன்.  வேலை, பையன் ரெண்டையும் சமாளிச்சேன்.  வேலையிலேயும் ப்ரோமோசன் அது இதுன்னு மேலே வந்தேன்.  பையனப் பாத்துக்கவும் எனக்கு கௌசல்யா கிடைச்சா.  ஏறக்குறைய என்னோட கதைதான் அவளோடது.  ஆனா படிப்பு கிடையாது; என்னைய மாதிரி குழந்தையும் கிடையாது.  ஏதோ ஒரு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டு இருந்தவ, எனக்கு வேலைக்கு ஆள் தேவைன்னு வந்தாள்.  என்னோட பிரச்சினைகள தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சுக்கிட்டு எனக்கு ஆதரவா நிக்கிறா.

"மிகப் பெரிய அதிர்ச்சிகள எனக்கு இன்னும் ஒளிச்சு வச்சிருந்தது காலம்.  நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு கேன்சர் இருக்குன்னு கண்டு பிடிச்சாங்க.  எங்க அப்பாவும் ரிடையர் ஆகிட்டார்.  அண்ணனும், கல்யாணமாகி தனியா போயிட்டான்.  அம்மாவுக்கு மருத்துவச் செலவ எங்க அப்பாவால சமாளிக்க முடியல.  விஷயம் தெரிஞ்சு, ஒரு தோழி மூலமா நான் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டேன்.  எங்கம்மா அந்த பணத்த தூக்கி எறிஞ்சுட்டு, ஒருவேளை அவங்க செத்துட்டாலும் நான் வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.  அது போலவே ஆறு மாசத்துல எங்கம்மா இறந்துட்டாங்க;  ஆனா எனக்கு அவங்க முகத்த பாக்க முடியல.  சொந்த ஊரிலய நான் நாலு தெரு தள்ளி இருந்தும், எங்கப்பா ஒரு முதியோர் இல்லத்துல அனாதையா இருக்காரு.  என் கூட வந்து இருக்க சொல்லி அனுப்பினேன்.  முடியாதுன்னு சொன்னவரு, எங்க அம்மா மாதிரியே, அவர் செத்துட்டாலும் முகத்துல முழிக்கக் கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

"ஏன் ராகேஷ், உனக்கு எங்க மாமா, அத்தைய தெரியுமில்லையா?  அவங்களுக்கு குழந்தையே கிடையாது.  என் மேலே உயிரா இருப்பாங்க; அவங்கள ஒரு முறை கோயில்ல பாத்து, நமஸ்காரம் பண்ணுனேன்.  உடனே ரெண்டு பெரும் தீட்டு ஆயிடுச்சுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.  எங்க வீட்டில் நான் ஒரு இளவரசியா, மகாராணியா இருந்தேன் ராகேஷ்;  உனக்குத்தான் தெரியுமே.  இன்னைக்கு நான் அவங்க யாரோட முகத்துலையும் முழிக்கிற அருகதை அத்துப் போனவளா ஆயிட்டேன்.  சிவா என்னைய புரிஞ்சுக்காம போன ஏமாற்றத்த விட எங்க வீட்டில இருந்து என்னை அடியோட ஒதுக்கி வச்சதுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. 


"காதலிக்கிற காலத்துல, இந்த விமானம் மாதிரி பஞ்சுப் பொதி மேகங்களுக்கிடையில பறந்துகிட்டு இருந்தேன்.  தரையிறங்கும் போது கொஞ்சம் கொஞ்சமா நகரம் பெரிசாயிக்கிட்டே வந்து நம்மை தாக்குமே, அது தான் உண்மையான வாழ்க்கைன்னு நான் புரிஞ்சுகிட்டேன்.  விமான நிலையத்துல இருக்கும் போதுதான் கௌசல்யா போன் பண்ணியிருந்தாள்.  என் பையன் சுந்தர்  இப்போ நாலாவது படிக்கிறான்; அவங்க ஸ்கூல் ஆண்டு விழா இன்னிக்கு.  ஆனா என் வேலை, என்னை கடல் கடந்து இங்க கட்டிப் போட்டுருச்சு.  பாரு, என்னோட கதைய சொல்லி உன்னைய ரொம்ப போரடிச்சுட்டேன்.  ஊருக்கு வந்தா, ஒரு முறை வீட்டுக்கு வந்துட்டு போ;  நினைவு வச்சு என்னை பார்க்கவும் யாரோ இருக்காங்கன்னு எனக்கு ஒரு ஆறுதல்.  எங்க வீட்டுக்கும் விருந்தாளிங்க வர்றாங்கன்னு சுந்தருக்கும்  ஒரு சந்தோஷம் கிடைக்கும்," ஒரு பெருமூச்சுடன் முடித்தாள் மிருணா.

அவளை ஆறுதல் படுத்தும் வார்த்தைகள் எதுவும் தன்னிடம் இருப்பதாக ராகேஷுக்கு தோன்றவில்லை.  ஜன்னல் வழியாக மேகக் கூட்டத்தை பார்த்துக் கொண்டே முணுமுணுத்தான், "தரையிறங்க மறந்த விமானங்கள்."








Saturday 7 October 2017

இன்னும் எவ்ளோ தூரம் போகணும் மாப்ளே

இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டது.  இன்றுவரை பிரித்வி முகம் கொடுத்து பேசவில்லை.  ஏதோ வேண்டாத விருந்தாளியாகத்தான் ராசுவை நடத்தி வந்தான்.  ராசுவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பிரித்விதான் உற்ற நண்பன்.  கடந்த ஆறு மாதமாக அவனைப் பிரிந்திருந்த நாட்கள் ராசுவுக்கு வெறுமையாகவே கழிந்தது.  ஆகவேதான் செவ்வாய் கிரகத்துக்கு வேலைக்கு ஆள் தேவை என்றதும் ராசு முதல் ஆளாக வந்து நின்றான். 

நேர்முகத் தேர்வு செய்தவன்கூட, “அதென்ன பேரு ராசு”, என்று கேட்டான்.  அசலாக அவன் பெயர் ராஜு என்றுதான் ஆதார் அட்டையில் இருந்தது.  ஆனால் பிறந்ததிலிருந்து அப்பாவும், அம்மாவும் அவனை ராசு என்றுதான் கூப்பிட்டு அதுவே அவனுடைய பெயராக நிலைத்து விட்டது.  “ஏன் சார், பூமியிலருந்து செவ்வாய் கிரகத்துக்கு போக வருஷக்கணக்கா ஆகும்னு சொல்லுறாங்களே, அப்படியா?”, என்றுதான் நேர்முகத் தேர்விலேயும் கேட்டான்.  அதற்க்கு அந்த அலுவலர், “தம்பி நீ இன்னும் 2017-லயே இன்னும் இருக்க.  இப்பல்லாம் ரெண்டு வாரத்துலயே செவ்வாய் கிரகத்துக்கு போயிறலாம்.  இப்ப 2093-ல நாம இருக்கோம் தம்பி,” என்றார்.  அவர் பிரித்வி இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து, அவனோடு சேர்ந்தே வேலை செய்யவும், தங்கவும்  அவர்தான் ஏற்ப்பாடு செய்து அனுப்பி வைத்தார்.

செவ்வாயில் இறங்கிய மறுநாளே பிரித்வியுடன்  ராசுவை சேர்த்து விட்டார்கள்.  ராசுவுக்கு பிரிந்த உயிர் திரும்பிய மாதிரி இருந்தது.  பிரித்விதான் ராசுவை வேண்டாத விருந்தாளியாக நடத்தினான்.  மூன்று நாட்கள் கழித்து ராசுவையும், பிரித்வியோடு வேலைக்கு அனுப்பினார்கள். 

அந்த வண்டி விநோதமாக இருந்தது.  அது ஓடும் போலவும் இருந்தது; பறக்கும் போலவும் இருந்தது.  அந்தக் காலத்தில் இருந்ததாக சொல்லப்படும் ரயில் என்ற வாகனம் போல பின்னால் ஏகப்பட்ட பெட்டிகள் கோர்க்கப்பட்டிருந்தன.  அவற்றில் உருளை வடிவ டாங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  அதில் ஏறி என்ஜினை உயிர்ப்பித்தவுடன் ராசுவையும் உள்ளே ஏறிக்கொள்ளச் சொன்னான் பிரித்வி.  விசுக்கென்று உயரக் கிளம்பியது அந்த வாகனம். சிறிது தூரம் சென்றதும்  பிரித்வியைப் பார்த்து ராசு கேட்டான், “இன்னும் எவ்ளோ தூரம் போகணும் மாப்ளே”, என்று.

“உன்னைய யாருடா இங்க வரச் சொன்னது.  உருப்படியா பெத்தவங்களுக்குப் பிள்ளையா ஊருலயே இருந்துருக்கலாமுள்ள.  கடைசியில நீயும் இங்க வந்து மாட்டிக்கிட்டியே,” என்றான் பிரித்வி.  “ஏன் மாப்ளே இங்க இந்த வேலையில என்ன குறை,” அப்பாவியாக கேட்டான் ராசு.  “நாம பூமியில ஓட்டிட்டு இருந்த அதே தண்ணி வண்டிதான் இது.  ஆனா, அங்கேயாவது வாரத்துக்கு ஒரு நாளாவது லீவு கெடைக்கும்.  இங்க அது கூட கெடையாது.  அதுவுமில்லாம திரும்ப பூமிக்குப் போகவும் முடியாது.  பணமும், அதிகாரமும் இருக்குறவனுக்கு நாம உயிரோட இருக்குற வரைக்கும் தண்ணி வண்டி ஓட்ட வேண்டியதுதான். என்னைய மாதிரியே நீயும் எமாந்துட்டியே மாப்ளே”, பிரித்வி சொன்னதைக் கேட்டதும், செவ்வாய் கிரக வாழ்க்கை சொர்க்கம் என்ற அவனுடைய கற்பனையில் விழுந்த அடியும், கசக்கின்ற நிஜமும் ஒரு கணம் மூச்சை நிறுத்தியது.

Friday 6 October 2017

சத்தமா சொல்லிராதீங்க

கண்ணுல ரத்தம் வந்துச்சுன்னு ரொம்பப் பேரு சொல்லக் கேட்டுருக்கேன்.  சமீபத்துல அது எனக்கே நடந்துச்சு.  இன்னைய தேதிக்கு தமிழ்நாட்டோட நெலமைய நெனச்சா எல்லாருக்கும் ரத்தம் வருங்கிறது உண்மை;  ஆனா சமீபத்துல இந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ள போயிட்டு எனக்கு ரெண்டு கண்ணுலயும் ரத்தம் வந்துருச்சு.  

இந்த கோயில UNESCO பாதுகாக்கப்பட்ட பழைய பாரம்பரியம் மிக்க சின்னமா அறிவிச்சுருக்கு.  அப்படிப்பட்ட பெருமையுள்ள கோயில புதுப்பிக்கிறேன்னு அங்கங்க இடிச்சு வச்சுருக்காங்க.  இந்த கோயில்கள் பராமரிப்புக்குன்னு ஒரு மூத்த ஸ்தபதி ஒருத்தர - அநேகமா அவரு பேரு கணபதி ஸ்தபதின்னு நெனைக்கிறேன் - இந்த தமிழ்நாடு அரசாங்கமே நியமிச்சுருக்கு.  ஆனா அவரு இந்த இடிச்சு புதிப்பிக்கிறது சம்பந்தமா யாரும் தன்னை ஆலோசிக்கலைன்னும், இப்புடி மனம் போனபடி இடிக்கிறது ஆகம விதிகளுக்கு எதிரானதுன்னும் சொல்லிருக்காரு.  

இதப் பாத்ததும் எனக்குன்னு என்னமோ சில, பல வருஷங்களுக்கு முன்னால ஆப்கானிஸ்தான் நாட்டுல தீவிரவாதிங்க புத்தர் சிலைகளையும், பாரம்பரிய கலைச்சின்னங்களையும் அழிச்சாங்கன்னு படிச்சதுதான் நெனப்புக்கு வந்துச்சு.   அந்த தீவிரவாதிகளாவது அவங்க நம்புறதா சொல்லுற கோட்பாட்டுக்கு உட்பட்டு அத செஞ்சாங்க.  ஆனா இங்க என்ன காரணத்துக்காக இப்பிடி ஒரு வேலைய செஞ்சாங்கன்னு தெரியல.

இப்பம் ரெண்டு நாளைக்கு முன்னால பெய்ஞ்ச மழையில மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ள தண்ணி வந்துருச்சுன்னு படிச்சேன்.  அதுக்கு  கோயிலைச் சுத்தி இருக்குற ரோட்டையெல்லாம் ஒசரமாக்கிட்டதால கோயிலுக்குள்ள தண்ணி வந்துருச்சுன்னு நெறையப் பேரு கருத்து சொல்லிருக்காங்க.  மக்கழே, தயவு செஞ்சு இத சத்தமா சொல்லிராதீங்க.  

அப்புறம் கோயில மேடாக்குறோமுன்னு அதுக்கும் ஒரு டெண்டர விட்டு,  வேலைய ஆரம்பிச்சு  அதுக்கும் கணக்கு வழக்கு பாத்துருவாங்க.


Friday 21 July 2017

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய

அம்மணக்காரன் ஊருல கோமணம் கட்டுனவன் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க.  அப்புடித்தான் இந்த அமைச்சர்கள் எல்லாரும் சேந்து,  இந்த மாநிலத்த மொத்தமா அம்மணமாக்கிப்  அழகு பாக்குற வேலையில இருக்கும்போது - ஒருத்தன் மட்டும் கோமணம் கட்டுனா பொறுக்குமா?

அப்புடி பொறுக்காமத்தான் ஒலக நாயகன்னா யாருன்னே தெரியாதுன்னாரு ஒருத்தரு;  வட்டி கட்டினாயா, வரி கட்டினாயா அப்புடின்னு கேட்டாரு ஒருத்தரு;   X-RAY எடுத்துப் பாத்து எலும்பே இல்லன்னாரு இன்னொருத்தரு.

எல்லாத்துக்கும் ஒரே பதிலா, ஊழல் பட்டியல அனுப்புங்கய்யான்னு சொன்ன ஒடனே நடக்குதுய்யா மாய மந்திர வேலையெல்லாம்.

அரசாங்கத்தோட வலை மனையில E-MAIL addressலாம், காணாமப் போகுதாம்;  அலைபேசி எண்ணெல்லாம் மறைஞ்சு போகுதாம்;  அந்த பயம் இருக்கட்டும்.

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..............




Friday 2 June 2017

ருசிக்கல்லு

சினிமாக்கு போகணும்னா, ஒரு அரை மணி நேரமாவது முன்னால போயிரனும்.  அதுவும் ஒரு விளம்பரம் விடாம பாத்து, சினிமாவும் பாத்து, அதுல வணக்கம் போட்டு வீட்டுக்குப் போங்கடான்னு தொரத்துற வரைக்கும் உக்காந்திருப்போம் - இப்ப இல்ல; சின்ன வயசுல.  அதுல ஒரு விளம்பரம்  பற்பசையை வாங்கச் சொல்லி வரும்.  அதுல ஒரு பயில்வானு பல்லு தேய்க்க சாம்பலும், உப்பும் எடுப்பாரு.  ஒடனே, "உடல் பலத்துக்கு பாதாமும், பிஸ்தாவும்;  பல்லுக்கு கரியும், உப்பும் தானா", அப்புடின்னு சொல்லி அந்த பற்பசைக்கு விளம்பரம் பண்ணுவாங்க.  ஆனா இப்ப சமீபத்துல, "உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா;  கார்பன் இருக்கா", - ன்னு கேக்குறாங்க.  அப்ப என்னன்னவோ பொய்யச் சொல்லி எங்களையெல்லாம் பற்பசைக்கு அடிமையாக்கிட்டீங்க.  அந்தக் காலத்துல மொத மொதல்ல, டீயும், காபியும் அறிமுகப் படுத்தினப்ப, வீடு வீடா வந்து இலவசமா குடுப்பாங்களாம்.  இப்ப மொத்தமா இந்த சமூகத்தையே காபி, டீ இல்லாத வாழ்க்கையே இல்லைங்கிற நெலமைக்கு கொண்டாந்து விட்டுட்டாங்க.

இதே மாதிரிதான், நாம சாப்பிடுற சாப்பாட்டுல இந்த சத்து வேணும், அந்த வைட்டமின் வேணும்னு சொல்லி, பரம்பரை உணவு பழக்கத்துல இருந்து திசை திருப்பி விட்டுட்டு, நாம சர்வ சாதாரணமா சமையல்ல உபயோகப்படுத்துற மஞ்சள வைட்டமின்ல ஒண்ணாக்கி, turmeric மாத்திரையா விக்கிறாங்க.

நேத்து நியூஸ் என்னன்னா, இந்த zika வைரஸ்க்கு ஒரு மருந்து கண்டுபிடுச்சுட்டாங்களாம்.  ஆனா அது மார்க்கெட்டுக்கு வர்றதுக்கு ரெண்டு வருஷம் ஆகுமாம்.  ஏன்னா அந்த மருந்து ஒரு செடியிலருந்து தயாரிக்கணுமாம்.  அதை முழுமையா நடைமுறைக்கு கொண்டு வர ரெண்டு வருஷம் வேணுமாம்.  முக்கியமான விஷயம், அந்த தாவரம் எதுன்னு சொல்லவே இல்லை.  மொட்டையா Australian Native Plant-ன்னு சொல்லி முடிச்சுக்கிட்டாங்க.  ஒரு வேளை என்ன Plant-னு தெரிஞ்சு போச்சுன்னா, மக்கள் அந்த தாவரத்த நேரடியா சமைச்சு சாப்பிட்டு, அந்த வியாதி குணமாயிருச்சுன்னா........  நிச்சயமா அந்த தாவரமும் ஏதாவது ஒரு சமூகம், மருந்தா பயன்படுத்துற ஒண்ணாத்தான் இருக்கும்.  

இன்னிக்கி எல்லாம் வல்ல உலக பஞ்சாயத்து தலைமையகம், அமெரிக்காலருந்து ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லியிருக்காரு, உப்பு அதிகமா சேத்துக்கிறது ரத்தக் கொதிப்புக்கான காரணம் இல்ல.  ஒடம்புல உப்புச் சத்து அதிகமானா அதுக்குத் தகுந்த அளவு தண்ணீர் சேர்க்கணும்; அந்த தண்ணீரே மருந்துன்னு.  

உப்புக்கு இன்னொரு பேரு ருசிக்கல்லு.


Wednesday 31 May 2017

சென்னை மாநகரத்திலே......

எங்கய்யா போனாங்க நம்ம ஐடியா மணி எல்லாரும்.  கடல்ல கொட்டின எண்ணைய வாளி வச்சு கோதினவனும், அணைக்கட்டுல தெர்மகூல் விட்டவனும்.  கூட்டிட்டு வாங்கய்யா சீக்கிரம்.  இந்த சென்னை மாநகரத்திலே ஒரு கட்டிடம் தீப்பிடிச்சு எரியுது ரெண்டு நாளா.  அணைக்கிறதுக்கு ஐடியா வேணும்.  

இன்னமும் விதி முறை மீறின கட்டிடங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாம தடை உத்தரவு குடுக்குற நியாயமாரே, இப்ப இந்த தீய அணைக்கிறதுக்கு ஒரு உத்தரவு சீக்கிரம் குடுங்கைய்யா.

நல்லா வேளை உயிர் சேதம் இல்லாம போச்சு.  இந்த லட்சணத்துல நம்ம மாநிலத்துலதான் அணு உலை வச்சு மின்சாரம் எடுக்குறான்.  அதுவும் இல்லாம மீத்தேன் எடுக்குறேன், ஹைட்ரோ கார்பன் கண்டுபுடிச்சுட்டேன்னு வேற ஆரம்பிக்கிறாங்க.  

எல்லாம் அவன் செயல்.

என்னங்க சார் உங்க சட்டம்!!!!!! ஓஹோ இதுதானா திட்டம்.

மூணு வருஷமா ஆட்சியில இருந்தவுங்க, இன்னைக்கு திடீருன்னு ஒரு சங்க எடுத்து ஊதி இருக்காங்க;  மாட்ட இறைச்சிக்காக விக்கக் கூடாதுன்னு.  இம்புட்டு நாளா இல்லாம இன்னைக்கு என்னய்யா ஞானோதயம் வந்துச்சு இந்துத்துவா கொள்கைய இந்த நாட்டு மக்கள் மேல திணிக்கனும்னு, அப்புடிங்கற யோசனையா இருந்துச்சு.  ஆனா, இந்த மந்திரிமாரெல்லாம் இறைச்சி சாப்பிடக் கூடாதுன்னு நாங்க சொல்லவே இல்லையே அப்புடிங்குறாங்க.

இன்னொன்னு யோசிச்சுப் பாத்தா, உலகத்துலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி பண்ணுறதுல நம்ம இந்தியாதான் ரெண்டாவது இடத்துல இருக்குது.  உலகத்துக்கெல்லாம் நம்ம ஊருல இருந்து பெரிய பெரிய கார்பரேட் கம்பனிக்காரன் இறைச்சி விக்கிறான்;  உள்ளூருல சிறு தொழிலா ஒருத்தன் தானே அறுத்து வித்து லாபம் பாக்குறான்.  இது எப்படி நியாயம் அப்புடின்னு மோடி அண்ணாச்சி காத கடிச்சு, இப்புடி ஒரு சட்டம் கொண்டாந்துருக்குறாங்க.  

மொதல்ல மெதுவா மாடு, ஒட்டகம் அப்புடின்னு ஆரம்பிச்சு, அப்புடியே ஆடு, கோழி எல்லாத்தையும் லிஸ்டுல கொண்டாந்துருவாங்க.  அப்புறம் நீ பெரிய கம்பனிக்காரன் கண்ட ரசாயனத்தையும் கலந்து விக்கிற இறைச்சியைத்தான் வாங்கியாகனும்.  

சமீபத்துல இந்த ஸ்டேட் பேங்க் ஆப் வட்டிக்கடை ஒரு சட்டம் போட்டது, நம்மளோட  பணத்த அக்கௌன்ட்ல வச்சிருக்க நாமளே வட்டி கட்டணும்னு.  அந்த வட்டிக் காச எடுத்து, மேல சொன்ன பெரிய கம்பனிக்கு கடன் கொடுப்பாங்க.  அந்த முதலாளி கடன வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுன்னு வெளிநாட்டுக்கு  ஓடிப் போயிருவான்.  

ஆக, இந்த மந்திரிமாரு சொன்ன மாதிரி இறைச்சி சாப்பிடக் கூடாதுன்னு இந்த அரசாங்கம் சொல்லவே இல்ல மக்களே; நீயா அறுத்து நீயா சாப்பிடக் கூடாதுன்னுதான் சொல்லுறாங்க.  கார்பரேட் கம்பனிக்காரன் விக்கிறத வாங்கி சாப்பிட்டு, எல்லா வியாதியையும் விலை கொடுத்து வாங்கிக்கோன்னு.   இப்பம் புரிஞ்சுதா திட்டம் மக்களே.

Thursday 13 April 2017

என்னமோ போடா மாதவா

உழுதவன் கணக்குப் பாத்தா கோவணம்  கூட மிஞ்சாது - ன்னு இப்ப நேரடியா பாத்துட்டு இருக்கோம்.  வெறுமனே பாத்துட்டுதான் இருக்கோம்; ஒண்ணும் நம்மளால பண்ண முடியல.   இருக்க எல்லா மாநிலத்துக்காரனும் போராடுற விவசாயிய சந்திச்சு ஆதரவு தெரிவிச்சுருக்குறாங்க - தமிழக அரச தவிர.

நமக்கு முக்கியமா ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மட்டும்தான் இருந்துச்சு.  அது தவிர மூடுன கடைகளுக்குப் பதிலா வேற இடம் தேடி அலைய வேண்டிய வேலையிருக்கு.  கடைய வர விட மாட்டோம்னு போராடுறவங்கள காவல் துறைய ஏவி அறைய வேண்டிய வேலை இருக்கு.  

நம்ம பிரதமருக்கு வாற, போற வெளிநாட்டு தலைவருங்கள பாத்து, போட்டோ எடுத்துக்குற வேலை இருக்கு.  முக்கியமா யானை பாதையை மறிச்சாருன்னும்,  பத்து லட்சம் மரங்கள அழிச்சாருன்னும், பேரு பெத்த ஜக்கிக்கு பத்மவிபூஷன் குடுக்குற விழா இருக்கு.  

கிறுக்குப் பயலுகள யாரு விவசாயம் செய்யச் சொன்னா, அப்புடின்னு மன நிலைதான் இந்த அரசாங்கத்து இருக்குற மாதிரி தெரியுது. மீதேன் கம்பெனிக்கு நெலத்த வித்துட்டு போங்கடாங்குற மனப்பான்மை அப்பட்டமா தெரியுது.  நடக்குற அநியாயத்த  எல்லாம் பாக்குறப்ப, 






என்னமோ   போடா மாதவா ............ எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday 21 February 2017

இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்கள்ள

இப்பந்தாய்யா ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னேன்.  இப்ப ஆரம்பமாயிருச்சு.  பொதுமக்கள் மத்தியில இருக்குற அதிருப்திய எப்புடிரா மாத்துறதுன்னு ரொம்ப யோசிச்சு அஞ்சு அறிப்பு (அவரு பேசுறத கேக்கும் பொது அந்த அறிவிப்பு அப்புடின்ற வார்த்த என் காதுல அறிப்புன்னுதான் விழுந்துச்சு - இது எனக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமானு நீங்கதான் சொல்லணும்) வெளியிட்டுருக்காரு மாண்புமிகு முதல் மந்திரி.  

இந்த அஞ்சுல எனக்கு முக்கியமான சந்தேகம் அஞ்சாவது அறிப்புலதான்.(மொத்தத்துல எல்லாமே சந்தேகத்துக்கு உட்பட்டதுங்குறது வேற விஷயம்)  அது என்னன்னா மீனவருங்களுக்கு 5000 வீடு கட்டித்தரப் போறாங்களாம்.  மொத்த மதிப்பீடு 85 கோடி ரூவாயாம்.  அப்படின்னா ஒரு வீட்டுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்.  இந்த ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூவாயில காண்டிராக்ட் எடுக்குற புண்ணியவான், மேல இருந்து கீழ வரைக்கும் கவனிச்சு முடிச்சப்பறம் எப்படி வீடு கட்டுவான்; இல்ல அப்புடி கட்டுன வீடு என்ன லட்சணத்துல இருக்கும்னு யோசிச்சு பாத்தேன் -   உஸ்..... அப்பா இப்பமே கண்ணக் கட்டுதே.

இது போக பிரசவத்துக்கு காசு, வண்டி வாங்க மானியம்னு எல்லாமே கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு.  ஆனா, ஒரு அரசாங்கங்கிறது அடிப்படை வசதிய செஞ்சு குடுக்கணுமே தவிர, தனியாருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கக் கூடாது.  உதாரணமா அரசாங்க ஆசுபத்திரிய எல்லாரும் பயன்படுத்துற தரத்துக்கு மேம்படுத்திக் குடுக்கணுமே தவிர, நான் பணம் தர்றேன்; நீ தனியார் ஆசுபத்தரிக்கு போன்னு சொல்லக்கூடாது.  அது போல public transport வசதிகள (அதாங்க அரசாங்க போக்குவரத்து) ஒழுங்கு பண்ணித் தர்றதுக்கு ஏற்பாடு பண்ணாம, வண்டி வாங்கிக்க மானியம் தாரேன்னு சொல்லுறது எதுக்குன்னா ......... ஒனக்கு மானியம்; எனக்கு கமிஷன் அப்படின்னு இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.  (கூவத்தூர் செலவயெல்லாம் எப்படிய்யா திரும்ப எடுக்குறது அப்படின்னு நீங்க கேக்குறது புரியுது)

வறட்சி நிலையில குடிக்கத் தண்ணி இல்ல;  விவசாயி  செத்துக்கிட்டு இருக்கான்; கர்நாடகா, தண்ணி குடுக்க முடியாதுன்னு சொல்லிருச்சு;  ஆந்திராவும், கேரளாவும் தடுப்பணைகள் கட்டிகிட்டே இருக்காங்க;  இப்புடி உயிர் போற பிரச்சினைகள் தலைக்கு மேல இருக்கும்போது


நீங்களே முடிவு பண்ணிக்குங்க மக்கழே! இன்னைக்கில்ல, என்னைக்கி வந்தாலும் தேர்தலப்போ என்ன பண்ணனும் அப்புடிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும்.

Saturday 18 February 2017

வஞ்சனைகள் செய்தா(வா)ரடி

நடந்தவை அனைத்துக்கும் நாம் அனைவரும் சாட்சி.  இத்தனை கேவலமான நபர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதும், அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்ததும் நம்முடைய தவறு.  இதை நாம் அனைவரும் வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

இந்த தவறுகளுக்கு நம்முடைய பிராயச்சித்தம் என்ன?  சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றிவிட்டால் போதுமா?  நாம் என்ன செய்யப் போகிறோம்?   

தொகுதி திரும்பும் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை ஒரு பிரபல நடிகர் நம்மிடம் வைத்துள்ளார்.  அது மட்டுமல்ல, எதிர் காலத்தில், அடுத்த தேர்தலில் இதே முகங்கள் வெவ்வேறு  முகமூடிகளுடன், வெவ்வேறு  கோஷங்களுடன், வெவ்வேறு கொள்கை முழக்கங்களுடன் உலா வரப் போகிறார்கள்.  அவர்களுக்கு நம்முடைய பதில் என்னவாய் இருக்க வேண்டும் என்பதை உறுதியாய் முடிவு செய்தல் வேண்டும்.  அந்த  முடிவை நீங்கள் செயல்படுத்த வேண்டிய நேரத்தில்  கண்டிப்பாய் செயல்படுத்த வேண்டும்.  இதை நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா?? செய்வீர்களா???

இல்லை கண்ணில் காசைக் காட்டியதும், அனைத்தையும் மறந்துவிடுவீர்களா?

Monday 13 February 2017

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்........

கூவத்தூருல ஒரு விடுதியாம்; அதுக்குள்ள இருக்காங்களாம் எம்.எல்.ஏ. எல்லாரும்.   அவங்கள விசாரிக்கணும்னு உத்தரவு போட்டுச்சாம் நீதிமன்றம். போனாங்கய்யா காவல் துறை அதிகாரியும், வருவாய்த்துறை அதிகாரியும்.  அவங்க எல்லாரும் ஒன்னு சொன்னாப்புல (சொல்லிக்குடுத்த மாதிரியே) சுய விருப்பத்தின்பேரிலேயே இருக்குறதா ரெண்டு அதிகாரிகிட்டேயும் சொல்லிட்டாங்க.

அந்த விடுதியில அவங்க தங்கியிருக்கவும், மத்த சாப்பிட கொள்ள - குடிக்க - ஆகுற செலவெல்லாம் யாரு எத்துக்குறாங்க. இல்ல அவங்கவுங்களே பில்லு செட்டில் பண்ணுறாங்களா.  அப்புடின்னா அவங்க ஊரைவிட்டு வரும்போதே இதையெல்லாம் எதிர்பாத்து கையில பணம் ஏதும் கொண்டாந்தான்களா.  அப்புடின்னா அவ்வளவு பணத்த எந்த பாங்க்ல எடுத்தாங்க, இல்ல அதுக்கு ஏதும் ஆதாரம் இருக்கா.  அப்புடில்லாம் இல்ல, வேற யாரும் செலவ எத்துக்குராங்கன்னா, அந்த வேற யாரோ ஒருத்தர் அத்தனை பேருக்கும் நிச்சயமா சொந்தமா இருக்கப் போறதில்ல.  அந்த வேற யாரோ இந்த எம்.எல்.ஏ. எல்லார்கிட்டயும் ஏதோ எதிர் பாத்து, லஞ்சமா இந்த செலவெல்லாம் எத்துக்கிறாங்களா.  அப்படின்னா எல்லா எம்.எல்.ஏ.வும் மொத்தமா லஞ்சம் வாங்குறாங்கன்னு அப்பட்டமா தெரிஞ்சு போச்சுல்ல.  அப்ப அந்த எம்.எல்.ஏ. எல்லாரும் மொத்தமா பதவிய இழந்துருவாங்களா.  இத எந்த ஒரு நீதிமன்றத்துலயாவது வழக்கா போட முடியுமா.

ஊரெல்லாம் இருக்குற குண்டர்களையும், ரௌடிகளையும் கைது செய்யுறதா சொல்லுற காவல்துறைக்கு, கூவத்தூருல காவலுக்கு நிக்கிறவங்கள பாத்தா ரௌடியா தெரியலையா.  இல்ல கூவத்தூருல கல்லெடுத்துக் குடுத்து அழகு பாக்குறதே காவல்துறைதானா.  ஏன்னா ஏற்கனவே மரினாவுல கலவரம் நடந்ததா சொல்லி கல்லெடுத்து அடிச்ச அனுபவம் காவல்துறைக்கு  இருக்குல்ல.

கூவத்தூர் விடுதியில ஒரே நேரத்துல எத்தன பேரு தங்குறதுக்கு அனுமதி இருக்கு; இப்போ எத்தன பேரு தங்கியிருக்காங்க.   ரெண்டு நாளைக்கு முன்னால்கூட Philippines-ல  நிலநடுக்கம்னு  படிச்சேன்.  ஒருவேள சுனாமி வந்துருச்சுன்னா கடலோரத்துல இருக்குற விடுதியில இருந்து எல்லாரையும் எப்படி காப்பாத்துவாங்க.

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்........


Monday 23 January 2017

போராடு - வலி தாங்கு

உறவே, உன்னை நலமா என்று கேட்க மாட்டேன்.  நீ நலமாயில்லை என நானறிவேன்.  உன் அருகிருந்து உன்னை ஆறுதல்படுத்த ஆசை;  ஆனால் உன்னிலிருந்து பல நூறு மைல் தூரத்தில் நான் இருக்கிறேன். என்னுடைய பிழைப்பு இங்கு வி(தை)திக்கப்பட்டிருக்கிறது.  ஆனாலும், என் மனது நிறைய நீதான் இருக்கிறாய்.  

உறவே என்று அழைத்தாயே நீ யார் என்று கேட்கின்றாயா?  ரத்த பந்தம் இருந்தால் மட்டும்தான் உறவா;  சில காலமாகவே உன்னை என் மகளாக, மகனாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  2015 டிசம்பர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீ ஓடி, ஓடி உதவி செய்தாயே அப்போதிருந்தே நான் உன்னை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  பாரம்பரிய உரிமையாம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க நீ களம் கண்டபோது, உன் மீதான என் நம்பிக்கைகள் பெருகின.  போராட்ட களத்தில் உன் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கண்டபோது  பெருமிதம் கொண்டேன்.  உன்னை நம்பி குடும்பம், குடும்பமாய் களத்திற்கு வந்த போது, என்னில் என் மண்ணின் மீதான  பிணைப்பு அதிகமாயிற்று.  குழந்தைகள் முதல், பெண்கள் மற்றும் பெரியவர் வரை நீ பராமரித்த விதம், பாதுகாத்த முறை என்னை வியக்க வைத்தது.

உடலளவில் நான் வெகு தூரத்தில் இருந்தாலும், மனதளவில் உன்னருகே நானிருந்தேன்; மரினாவில் நீ கொடுத்தாயே அந்த டீயை பருகினேன்; அலங்காநல்லூர் கேட்டு கடையில் அந்த இரவில் உன்னோடு நானும் முழக்கமிட்டேன்; தமுக்கத்தில் உன் தோள் சாய்ந்து நான் உறங்கியது உனக்கு நினைவிருக்கும்; கோவை காந்திபுரத்திலும், ஈரோடிலும், சேலத்திலும், திருச்சியிலும், இன்னும் நான் சொல்லமறந்த, பெயர்கூட எனக்கு தெரியாத ஒவ்வொரு ஊரிலும் நான் உன்னோடு இருந்தேன்.  போராட்ட  களத்தை, பாதுகாக்க வந்த காவலரை, நீ பராமரித்த விதம், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு நீ தந்த மதிப்பு - எல்லாம் உலகமே வியந்து பாராட்டிய போதும், எனக்குள் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே இருந்தது.  அது நேற்று நிஜமாய் நடந்தேறி விட்டது.  சுய லாபத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக உன்னுடைய....மன்னித்துவிடு.... நம்முடைய போராட்டத்தை பகடை உருட்டி விளையாடி விட்டனரே.  இது நிகழ்ந்துவிடக் கூடாது என்றுதான் நான் பயந்திருந்தேன்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்; அத்தனை நாள் போராட்டத்திலும் உன்னோடு சிரித்துப் பெசிக்கொண்டிருந்தானே அந்த காவலன், நீ கொடுத்த டீயையும், பிஸ்கட்டையும் உண்டு களித்தானே அந்த காவலன், உன்மீது தடி வீசியபோது உனக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும்; எனக்கில்லை. அந்தக் காவலனின் மீது மறந்தும், உன் மனதாலும்கூட சபித்து விடாதே.  காரணம் என் அனுபவம்.  அதைக் கேட்க உனக்கு நேரமும், பொறுமையும் இருந்தால் தொடர்ந்து வா.

சில, பல ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலை சார்ந்த ஒரு போராட்டம்;  நான் அப்போது அந்த போராட்டத்தில்; நானும் ஒரு தொழிலாளி;  அருகே நின்று சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்தான் அந்த காக்கிச்சட்டைக்காரன்.  அறிந்தவன்தான், என் வயதுக்காரன்தான். எந்த வினாடியில் அவனுக்கு உத்தரவு கிடைத்ததோ, என்மீது வீசினான் அவன் கையிலிருந்த தடியை. நேற்று உனக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சி எனக்கும் நேர்ந்தது.

இதற்க்கு ஐந்தாறு மாதங்களுக்குப்பின், ஒரு பிற்பகல் நேரம் என் அறையின் கதவு தட்டப்பட்டது.  திறந்தால், "அண்ணே, அவருக்கு ரொம்ப ஒடம்புக்கு முடியல.  ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்.  வேற யாரும் பக்கத்துல இல்ல.  நீங்க கொஞ்சம் கூட்டிட்டு போறீங்களா", அந்தக் காவலனின் மனைவி இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்தாள்.  என்னுடைய சைக்கிளின் பின்னே அவனை அமர்த்தி, ஐந்து கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.  அதன்பிறகும் அவன் என்னுடன் பேசுவதில்லை.  இரண்டாண்டுகளுக்குப்பின், வேலை இட மாறுதலுக்காய் ஊரைவிட்டுப் போகும் போது என்னைப் பார்த்து கரம் குவித்துவிட்டுப் போனவன்தான்.  

அதனால்தான் சொல்லுகிறேன், உன்மீது தடி வீசியவனுக்கும் இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு உன்  சகோதரி காத்திருக்கிறாள்.  அவனுக்கும் உன் வயதில் ஒரு மகனோ, மகளோ இருக்ககூடும்.  உன் கரத்தை உடைத்தால்தான் அவன் வீட்டு அடுப்பெரியும்;  உன் தலையை பிளந்து ரத்தம் பார்த்தால்தான் அவன் குழந்தைக்கு பால் கிடைக்கும்; உன் வாகனத்தை தீயிட்டால்தான் அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.  அவனும் தமிழன்தானே; அவனுக்கும் வீரம் உண்டல்லவா.  அதைப் பரீட்சித்துப்பார்க்க நிராயுதபாணியாய் நீ மட்டும்தானே அங்கிருந்தாய்.  அதனால்தான் சொல்லுகிறேன் மறந்தும்கூட, மனதால்கூட அவனை சபித்துவிடாதே.

உன் உடலில் வலி ஏற்படுத்தினால், உன் மன உறுதியைக் குலைத்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவருக்கு உன் பதில் என்னவாய் இருக்கப் போகிறது என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்.  நான் உனக்கு எந்த அறிவுரையோ, ஆலோசனையோ சொல்லப் போவதில்லை.  எனக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டுமென்று உனக்குத் தெரியும் என்பது.  வானத்தையும் வில்லை வளைக்க முடியும் - வானளாவிய அதிகாரம் உன்னிடமிருந்தால்.  இன்று அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து - தங்களிடம் மட்டுமே அது என்றென்றும் இருக்கும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர்களிடமிருந்து - உன் கைக்கு எவ்விதம் மாற்றுவது என்ற வழிமுறையை எண்ணிப்பார்.  

                                                              "உலகம் உன் வசம்"

Saturday 21 January 2017

க...............க..............க.............?

பராசக்தி அப்புடிங்கிற ஒரு பழைய திரைப்படத்துல - சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகத் திரைப்படம் - கா கா கா அப்புடின்னு ஒரு பாட்டு வந்துச்சு.  இந்த க...............க..............க.............? அது இல்லை.   ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால அப்ப இருந்த மத்திய அரசாங்கம் மொழித் திணிப்பு செய்யுறாங்கன்னு சொல்லி, இப்ப நடக்குற மாதிரியே போராட்டாம்லாம், நடந்ததாகவும், ரயில் மறியல் செஞ்சதாகவும், அந்தப் போராட்டங்களின் பலனாக ஆட்சிக்கு வந்ததாகவும் சரித்திரம்லாம் இருக்கு.  அந்த கட்சியின் கொள்கைதான் மேல சொன்ன க...............க..............க.............?

இந்த கொள்கைய உயிர் மூச்சா வச்சிருக்குறதா சொல்லிக்கிற அந்த தலைவர்களும், அவங்களோட வழித் தோன்றல்களும் - இது பிரிஞ்சு போனவங்க, தனிக்கட்சி அமைச்சவங்க எல்லாரும் - இன்னைக்கு தேதியில, காசும், இன்னபிற etc etc ம் கொடுத்து ஆளுங்கள கொண்டு வந்து, பொதுமக்களோட சர்வ சுதந்திரத்தையும் சீர்குலைச்சு போராட்டம்கிற பேருல என்னனவோ பண்ணுற கூத்தையெல்லாம் பார்த்த நமக்கு............,

போராட்ட களத்தை தாங்களே சுத்தம் செஞ்சுக்குறாங்களாம்;  போக்குவரத்த சீர் பண்ணிக்கிறாங்களாம்;  கூட மாட இருக்குறவங்களுக்கு ஒத்தாசையா இருக்காங்களாம்; ரயில மறிச்சுட்டு, உள்ள இருந்த பயணிகளுக்கு சாப்பாடு, தண்ணி குடுத்து பாத்துக்கிட்டாங்களாம்; பொது சொத்துக்கு ஏதும் சேதம் பண்ணலையாம்; முக்கியமா கூட இருக்குற பொண்டு புள்ளைகள பத்துறமா பாத்துக்குறாங்களாம்.

முக்கியமா அவங்க பக்கத்துலையே அரசியல்வியாதிகள அண்ட
விடலையாம்.

போராட்டம்  பண்ணுறது, உரிமைய மீட்டேடுக்குறது எங்க டமை  அப்புடின்னு இறங்குன புள்ளைங்க ண்ணியமா, ட்டுப்பாடோட  நடந்துக்குறதெல்லாம் பாத்தா நம்ம ஊரும் நாடும் நிச்சயமா மத்த எல்லா மக்க மனுசருக்கும் ஒரு முன்னுதாரணம் அப்புடின்னு பெருமையா இருக்கு.

க...............க..............க.............? எங்க கொள்கை, உயிர் மூச்சு அப்புடின்னுல்லாம் சோடா குடிச்சு கத்துறவுங்களுக்கெல்லாம் மேல நின்னுட்டீங்கய்யா/நின்னுட்டீங்கம்மா.