Saturday 14 October 2017

தரையிறங்க மறந்த விமானங்கள்

முன் குறிப்பு: கொஞ்சம் பெரிய கதை.  இது முழுக்க முழுக்க கற்பனை               கதையில்லீங்க;  பேர மாத்தி சொல்லியிருந்தாலும், இந்தக் கதையின் நாயகி நிஜம்.


ம்ப முடியாத தருணங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை.  இது ராகேஷுக்கும் நன்கு தெரியும்.  மிருணாவை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்தித்ததும் அப்படித்தான்.  படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து ஒரு கணம் தலை நிமிர்த்திய போது கடந்து சென்ற பெண் மிருணா போலவே இருப்பதாக தோன்றியது.  உற்றுப் பார்த்து அது அவளேதான் என்று உறுதி செய்து கொண்டான்.

பதினொரு வருஷத்துக்கு முந்தைய மிருணாவுக்கும், இவளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் தெரிந்தது.  நிச்சயமாக அது வருடங்கள் கடந்ததனால் மட்டும் ஏற்பட்ட  வித்தியாசம் இல்லை.  அதையும் தாண்டி ஏதோ ஒன்று என்று மனதுக்குப் பட்டது.  அவள் நிச்சயமாக ராகேஷை கவனிக்கவில்லை.  போனில் யாருடனோ பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.  

மாலையும் கழுத்துமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டு சிவாவுடன் அவள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்தக் கணம்தான் இன்னும் மனதுக்குள் நினைவில் இருக்கிறது.  நான் நினைத்ததை அடைந்து விட்டேன் பார்  என்ற கம்பீரம் அவள் முகத்தில் அப்போது நிறைந்திருந்தது.  சிவாவின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு, சாட்சியாகவும், வாழ்த்து சொல்லவும் வந்திருந்த நண்பர்களுக்கு அவள் நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.  

மிருணா நடந்து சென்று ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமரும் கணம் வரை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.  மெதுவாக திரும்பி ஜீவாவும், குழந்தைகளும் எங்கிருக்கிறார்கள் என்று தேடினான்.  அவர்கள் மூவரும், விமானங்கள் மேலேறுவதையும், தரையிறங்குவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  எழுந்து அவர்களை நோக்கி நடந்தான்.

"என்ன புக் போரடிச்சுருச்சா. இல்ல பிள்ளைகள தேடிருச்சா,"  புன்னகையுடன் கேட்டாள் ஜீவா.  "ஜீவா எனக்குத் தெரிஞ்சவுங்க ஒருத்தர இங்க பார்த்தேன்.  அவங்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தணும்.  வர்றீங்களா," கேட்டான் ராகேஷ்.  "இங்க பாருங்கப்பா, உங்க அப்பாவுக்கு சிங்கபூரிலேயும் யாரோ  தெரிஞ்சவுங்க இருக்குறாங்க பாரு," சிரித்துக்கொண்டே பிள்ளைகளுடன் எழுந்தாள் ஜீவா. 

மூவரையும் அழைத்துக்கொண்டு மிருணாவை நோக்கி நடந்தான்.  அவள் எதிரே நின்று, "ஹலோ மிருணாளினி, எப்படியிருக்கீங்க."  பெயர்  சொல்லி யாரோ அழைக்கும் ஆச்சரியமும், பதட்டமும் சேர நிமிர்ந்து பார்த்தாள், அதுவரை கைப்பையில் ஏதோ குடைந்து கொண்டிருந்தவள்.  ராகேஷைப் பார்த்ததும், அவள் முகத்தில் அலையடித்த உணர்ச்சிகளை எப்படி வகைப் படுத்துவது என்று ராகேஷுக்குப் புரியவில்லை.  அதில் அவனை அடையாளம் கண்டு கொண்டதும், அதிர்ச்சிதான் அதிகமிருந்ததாகத்  தோன்றியது.

"அடையாளம் தெரியுதா; நாந்தான் ராகேஷ்.  இவங்க என் மனைவி ஜீவிதா, எனக்கு சுருக்கமா ஜீவா.  இவங்க ரெண்டு பெரும் என் பெண்கள்; பெரியவங்க ரோகிணி, எட்டு வயசு; சின்னவங்க ராதிகா, அஞ்சு வயசு," சகஜமாக பேசினான் ராகேஷ். "ஜீவா இவங்கதான் நான் அடிக்கடி சொல்லுவேனே, தி கிரேட் மிருணாளினி.  ரோகிணி, ராதிகா, ஆண்டிக்கு வணக்கம் சொல்லுங்க."

"வணக்கம்  ஆண்டி," வணக்கம் சொன்னார்கள் குழந்தைகள். "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி," கை குலுக்கினாள் ஜீவா.  மிருணாவும் பதிலுக்கு ஒரு புன்னகையை திருப்பிக் கொடுத்தவாறே கை குலுக்கினாள்.

"ஏய் ராகேஷ், இது என்ன புதுசா முழுப் பேர் சொல்லி கூப்பிடுற;  போங்க, வாங்கன்னு மரியாதை வேற," என்ற மிருணா, "சாரி கைஸ், நான் ரொம்ப பசியில இருக்கேன்.  யாரார் என் கூட சாப்பிட வர்றீங்க."

"இல்ல, நாங்க எல்லாரும் இப்போதான் சாப்பிட்டோம்," என்றான் ராகேஷ்.

"வாட் அபவுட் ஐஸ் கிரீம் கேர்ள்ஸ்," என்று குழந்தைகளைக் கேட்டாள் மிருணா.

"ஏய்," என்ற உற்சாகக் குரலுடன் குழந்தைகள் ஆவலுடன் ஒட்டிக் கொண்டன.  "சரி ஜீவா.  நீயும் கூட அவங்க கூட போ.  நான் இங்கேயே இருக்கிறேன்,"  என்று அவர்கள் நால்வரையும் அனுப்பினான் ராகேஷ்.

தூரத்தில் நால்வரும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்திருப்பதும், குழந்தைகள் முன் ஐஸ் கிரீம் இருக்க,  ஜீவா முன்னால் ஒரு தட்டில் கட்லெட் இருந்தது.  சில நிமிடங்களிலேயே  பல வருஷப் பழக்கம் போல் ஜீவாவுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மிருணா.

அது தான் மிருணா.

ராகேஷ், ராகவ், மணி, செந்தில் என்று நால்வரும் கல்லூரிக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்த காலம் அது.   ராகவ் வீட்டில் குரூப் ஸ்டடி என்ற பெயரில், கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருந்த ஒரு மாலையில் தான், அந்த அறைக்குள் புயலென வந்தாள் மிருணா.  "ஏம்பா ராகவ், நாங்க மூணு பேரு நிஜமாவே அடுத்த ரூம்ல படிச்சுட்டு இருக்கோம்;  அத மனசுல வச்சுக்கிட்டு சத்தம் போடுங்க," என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

மிருணாவை பேரழகி என்றெல்லாம் வகைப்படுத்தி விட முடியாது. ஒரு சாதாரணமான மற்றும் அசாதாரணமான பெண் அவள். ஆனால், அவள் இருக்கும் இடத்தை ஒளிமயமாய் மாற்றும் வித்தை அவளிடமிருந்தது.  கொஞ்சம், கொஞ்சமாக நண்பனின் தங்கை என்ற முறையில் அவர்கள் வட்டத்தில் நெருங்கிய அவளுக்கு, ராகேஷ் மட்டும் ஏதோ ஒரு வகையில் அவள் சகஜமாகப் பேசும் நண்பனாக மாறி  விட்டான்.

படிப்பில் புலி என்றால், சமையலில் நளனின் சகோதரி;  வீட்டை ஒரு கலைக் கூடமாய் வைத்திருந்தாள்;  கல்லூரியிலும் கவிதை, கதை, நாடகம் என்று அவளின் கொடியைப் பறக்க விட்டிருந்தாள்.

"இவ்ளோ திறமைசாலியான உனக்குப் புருஷனா வரப் போற அதிர்ஷ்டக்காரன் யாருன்னு தெரியல.  அவன நெனச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு," விளையாட்டாய் பேசும் ஒரு கணத்தில் ராகேஷ் சொன்னான்.

"அந்த அதிர்ஷ்டக்காரன் சிவா தான்;  அவனை நானே உனக்கு ஒரு முறை  அறிமுகப்படுத்தணும்," சகஜமாக சொல்லிவிட்டு போனாள்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் ஏதோ நாடகம் போலவும்,  அந்த நாடகத்துக்குள்ளேயே  ஒரு பாத்திரமாய்  வாழ்ந்து கொண்டே வேடிக்கையும் பார்ப்பது போலத்தான் இருந்தது ராகேஷுக்கு.  வேறு ஜாதி என்ற காரணத்தினால் சிவாவை, ராகவ் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்ததும்,  சிவா வீட்டிலும் அந்தஸ்தை காரணம் காட்டி எதிர்த்ததும் நடந்தது.

கல்லூரி முடிந்து, மிருணா ஒரு வேலையில் அமர்ந்ததும், நண்பர்களை மட்டும் அழைத்து சிவாவை பதிவுத் திருமணம் செய்து  கொண்டாள்.  அந்த சந்தர்ப்பம்தான் ராகேஷ் மிருணாவை கடைசியாய் பார்த்தது.  அதன் பிறகு இன்றுதான்..... ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிந்தது;  அவள் மகிழ்ச்சியாய் இல்லை.  பேச்சிலும், பாவனையிலும் உற்சாகமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும், அதில் ஒரு குறை பளிச்சென தெரிந்தது.

அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதன் காரணமாய், ராகவும் அவன் குடும்பமும் ராகேஷை முழுமையாய் ஒதுக்கி விட்டார்கள்.  காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.  ராகேஷை கடல் கடந்து பிழைப்பு தேடித்  துரத்தியது.  ஊரிலும் பழைய நண்பர்களுடன் முழுமையாகத் தொடர்பு அறுந்து போனது.

"ல்லவேளை, காலி இருக்கையெல்லாம் இருக்கு; உன்னோட ஜீவாவும், பிள்ளைகளும் முன்னாடி வரிசையில இருக்காங்க.  நாம சென்னைக்குப் போற நாலு மணி நேரம் நான், உன்கூடப்  பேசணும்.  அதான் உன் பக்கத்து இருக்கைக்கு வந்தேன்.  ஜீவாகிட்ட பெர்மிசன் வாங்கியாச்சுப்பா," சொல்லிக் கொண்டே ராகேஷின் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள் மிருணா.  ஒன்றும் சொல்லத்  தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் - அவள் உதிர்க்கப் போகும் வார்த்தைகளுக்காகக்   காத்திருந்தான்.


"வாழ்க்கையில ஒவ்வொரு சந்தர்ப்பத்துலயும் நாம ஒரு முடிவு எடுப்போம்; அந்தக் கணத்தில் அது மிகச் சரியான முடிவாகத் தோன்றும்.  எதிர் காலத்தில் அந்த முடிவின் விளைவுகள் எதிர் மறையா போகும் போதுதான், ஏனிப்படி முடிவெடுத்தோம் அப்படின்னு தோணும்.  அப்படித்தான், சிவாவை கல்யாணம் செஞ்சுக்கிரதுன்னு நான் எடுத்த முடிவு என் வாழ்க்கையின் மிகக் கசப்பான தருணங்கள்ள என்னைய தள்ளிருச்சு.  ஹோல்ட் ஆன் ராகேஷ், நான் பேசணும்;  அதுக்குப் பிறகு நீ எனக்கு ஆறுதல் தரும்னு நினைக்கிற வார்த்தைகள சொல்லலாம்.   எங்க திருமண வாழ்க்கையோட ஆயுள்  மூணு வருஷம்தான்.  அந்த மூணு வருஷத்துலகூட நான் சந்தோஷமா இருந்த நாட்கள் ரொம்பக் கம்மி. 

"சிவா நிச்சயமா எனக்கு ஒரு நல்ல கணவனா இருப்பான்னு நம்பித்தான் அந்த முடிவ எடுத்தேன்.  அதுக்காக என்னைய உள்ளங்கையில வச்சு பாத்துக்கணும்னு நான் எதிர் பார்க்கல;  ஒரு சக மனுஷியா, மனைவியா என்னைய நடத்துவான்னு நம்பினேன்.  ஆனா, அவன் வளர்ந்த சூழ்நிலை,  ஒரு பெண்ணை எப்படி நடத்தணும் அப்படின்னு அவன் குடும்பத்துல போதிக்கப்பட்டது எல்லாம் வேற மாதிரி.  முதல்ல அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கல; அல்லது கிடைச்ச வேலைய அவனால ஏத்துக்க முடியல.  அவன் குடும்பப் பாரம்பரியம் வியாபாரம்.  அதுல வீட்டுப் பெண்களுக்கு எந்த விதத்துலயும் பங்கில்லை;  ஆண்கள் என்ன சொல்லுறாங்களோ, அதுக்குக் கட்டுப்பட்டு நடப்பது மட்டும்தான் அவங்க வீட்டுப் பெண்களின் பழக்கம்.  அதுக்கு மாறா நான் சுயமா சிந்திக்கிறதும், வேலை பார்க்கிறதும், அவனால ஏத்துக்க முடியல.  தினம்தோறும் எங்களுக்குள்ள பிரச்சினைகள் வர ஆரம்பிச்சுது.  இதுக்கிடையில எங்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.  குழந்தைய பார்த்துக்க என்னைய வேலைய விடச் சொன்னான்.  ஆனால், அவனுக்கு எந்த வருமானமும் இல்லாதது ஒரு பெரிய தடையா இருந்துச்சு.  நான் வேலைய விட முடியாதுன்னு சொல்லிட்டேன்.  இந்த எல்லாமும் சேர்ந்து நாங்க மூணே வருஷத்துல கோர்ட் படி ஏறிட்டோம்.  சட்டப்படி விவாகரத்தும் ஆயிருச்சு.  இவ்வளவு பிரச்சினைகளிலும், எங்க வீட்டில இருந்து எனக்கு எந்த வித ஆதரவும் கிடைக்கல.  நான் தனியாளா நின்னு சமாளிச்சேன். 

"இவ்வளவுக்குப் பிறகும், நான் எழுந்து நின்னேன்.  வேலை, பையன் ரெண்டையும் சமாளிச்சேன்.  வேலையிலேயும் ப்ரோமோசன் அது இதுன்னு மேலே வந்தேன்.  பையனப் பாத்துக்கவும் எனக்கு கௌசல்யா கிடைச்சா.  ஏறக்குறைய என்னோட கதைதான் அவளோடது.  ஆனா படிப்பு கிடையாது; என்னைய மாதிரி குழந்தையும் கிடையாது.  ஏதோ ஒரு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டு இருந்தவ, எனக்கு வேலைக்கு ஆள் தேவைன்னு வந்தாள்.  என்னோட பிரச்சினைகள தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சுக்கிட்டு எனக்கு ஆதரவா நிக்கிறா.

"மிகப் பெரிய அதிர்ச்சிகள எனக்கு இன்னும் ஒளிச்சு வச்சிருந்தது காலம்.  நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு கேன்சர் இருக்குன்னு கண்டு பிடிச்சாங்க.  எங்க அப்பாவும் ரிடையர் ஆகிட்டார்.  அண்ணனும், கல்யாணமாகி தனியா போயிட்டான்.  அம்மாவுக்கு மருத்துவச் செலவ எங்க அப்பாவால சமாளிக்க முடியல.  விஷயம் தெரிஞ்சு, ஒரு தோழி மூலமா நான் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டேன்.  எங்கம்மா அந்த பணத்த தூக்கி எறிஞ்சுட்டு, ஒருவேளை அவங்க செத்துட்டாலும் நான் வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.  அது போலவே ஆறு மாசத்துல எங்கம்மா இறந்துட்டாங்க;  ஆனா எனக்கு அவங்க முகத்த பாக்க முடியல.  சொந்த ஊரிலய நான் நாலு தெரு தள்ளி இருந்தும், எங்கப்பா ஒரு முதியோர் இல்லத்துல அனாதையா இருக்காரு.  என் கூட வந்து இருக்க சொல்லி அனுப்பினேன்.  முடியாதுன்னு சொன்னவரு, எங்க அம்மா மாதிரியே, அவர் செத்துட்டாலும் முகத்துல முழிக்கக் கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

"ஏன் ராகேஷ், உனக்கு எங்க மாமா, அத்தைய தெரியுமில்லையா?  அவங்களுக்கு குழந்தையே கிடையாது.  என் மேலே உயிரா இருப்பாங்க; அவங்கள ஒரு முறை கோயில்ல பாத்து, நமஸ்காரம் பண்ணுனேன்.  உடனே ரெண்டு பெரும் தீட்டு ஆயிடுச்சுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.  எங்க வீட்டில் நான் ஒரு இளவரசியா, மகாராணியா இருந்தேன் ராகேஷ்;  உனக்குத்தான் தெரியுமே.  இன்னைக்கு நான் அவங்க யாரோட முகத்துலையும் முழிக்கிற அருகதை அத்துப் போனவளா ஆயிட்டேன்.  சிவா என்னைய புரிஞ்சுக்காம போன ஏமாற்றத்த விட எங்க வீட்டில இருந்து என்னை அடியோட ஒதுக்கி வச்சதுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. 


"காதலிக்கிற காலத்துல, இந்த விமானம் மாதிரி பஞ்சுப் பொதி மேகங்களுக்கிடையில பறந்துகிட்டு இருந்தேன்.  தரையிறங்கும் போது கொஞ்சம் கொஞ்சமா நகரம் பெரிசாயிக்கிட்டே வந்து நம்மை தாக்குமே, அது தான் உண்மையான வாழ்க்கைன்னு நான் புரிஞ்சுகிட்டேன்.  விமான நிலையத்துல இருக்கும் போதுதான் கௌசல்யா போன் பண்ணியிருந்தாள்.  என் பையன் சுந்தர்  இப்போ நாலாவது படிக்கிறான்; அவங்க ஸ்கூல் ஆண்டு விழா இன்னிக்கு.  ஆனா என் வேலை, என்னை கடல் கடந்து இங்க கட்டிப் போட்டுருச்சு.  பாரு, என்னோட கதைய சொல்லி உன்னைய ரொம்ப போரடிச்சுட்டேன்.  ஊருக்கு வந்தா, ஒரு முறை வீட்டுக்கு வந்துட்டு போ;  நினைவு வச்சு என்னை பார்க்கவும் யாரோ இருக்காங்கன்னு எனக்கு ஒரு ஆறுதல்.  எங்க வீட்டுக்கும் விருந்தாளிங்க வர்றாங்கன்னு சுந்தருக்கும்  ஒரு சந்தோஷம் கிடைக்கும்," ஒரு பெருமூச்சுடன் முடித்தாள் மிருணா.

அவளை ஆறுதல் படுத்தும் வார்த்தைகள் எதுவும் தன்னிடம் இருப்பதாக ராகேஷுக்கு தோன்றவில்லை.  ஜன்னல் வழியாக மேகக் கூட்டத்தை பார்த்துக் கொண்டே முணுமுணுத்தான், "தரையிறங்க மறந்த விமானங்கள்."








No comments:

Post a Comment