Saturday 7 October 2017

இன்னும் எவ்ளோ தூரம் போகணும் மாப்ளே

இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டது.  இன்றுவரை பிரித்வி முகம் கொடுத்து பேசவில்லை.  ஏதோ வேண்டாத விருந்தாளியாகத்தான் ராசுவை நடத்தி வந்தான்.  ராசுவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பிரித்விதான் உற்ற நண்பன்.  கடந்த ஆறு மாதமாக அவனைப் பிரிந்திருந்த நாட்கள் ராசுவுக்கு வெறுமையாகவே கழிந்தது.  ஆகவேதான் செவ்வாய் கிரகத்துக்கு வேலைக்கு ஆள் தேவை என்றதும் ராசு முதல் ஆளாக வந்து நின்றான். 

நேர்முகத் தேர்வு செய்தவன்கூட, “அதென்ன பேரு ராசு”, என்று கேட்டான்.  அசலாக அவன் பெயர் ராஜு என்றுதான் ஆதார் அட்டையில் இருந்தது.  ஆனால் பிறந்ததிலிருந்து அப்பாவும், அம்மாவும் அவனை ராசு என்றுதான் கூப்பிட்டு அதுவே அவனுடைய பெயராக நிலைத்து விட்டது.  “ஏன் சார், பூமியிலருந்து செவ்வாய் கிரகத்துக்கு போக வருஷக்கணக்கா ஆகும்னு சொல்லுறாங்களே, அப்படியா?”, என்றுதான் நேர்முகத் தேர்விலேயும் கேட்டான்.  அதற்க்கு அந்த அலுவலர், “தம்பி நீ இன்னும் 2017-லயே இன்னும் இருக்க.  இப்பல்லாம் ரெண்டு வாரத்துலயே செவ்வாய் கிரகத்துக்கு போயிறலாம்.  இப்ப 2093-ல நாம இருக்கோம் தம்பி,” என்றார்.  அவர் பிரித்வி இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து, அவனோடு சேர்ந்தே வேலை செய்யவும், தங்கவும்  அவர்தான் ஏற்ப்பாடு செய்து அனுப்பி வைத்தார்.

செவ்வாயில் இறங்கிய மறுநாளே பிரித்வியுடன்  ராசுவை சேர்த்து விட்டார்கள்.  ராசுவுக்கு பிரிந்த உயிர் திரும்பிய மாதிரி இருந்தது.  பிரித்விதான் ராசுவை வேண்டாத விருந்தாளியாக நடத்தினான்.  மூன்று நாட்கள் கழித்து ராசுவையும், பிரித்வியோடு வேலைக்கு அனுப்பினார்கள். 

அந்த வண்டி விநோதமாக இருந்தது.  அது ஓடும் போலவும் இருந்தது; பறக்கும் போலவும் இருந்தது.  அந்தக் காலத்தில் இருந்ததாக சொல்லப்படும் ரயில் என்ற வாகனம் போல பின்னால் ஏகப்பட்ட பெட்டிகள் கோர்க்கப்பட்டிருந்தன.  அவற்றில் உருளை வடிவ டாங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  அதில் ஏறி என்ஜினை உயிர்ப்பித்தவுடன் ராசுவையும் உள்ளே ஏறிக்கொள்ளச் சொன்னான் பிரித்வி.  விசுக்கென்று உயரக் கிளம்பியது அந்த வாகனம். சிறிது தூரம் சென்றதும்  பிரித்வியைப் பார்த்து ராசு கேட்டான், “இன்னும் எவ்ளோ தூரம் போகணும் மாப்ளே”, என்று.

“உன்னைய யாருடா இங்க வரச் சொன்னது.  உருப்படியா பெத்தவங்களுக்குப் பிள்ளையா ஊருலயே இருந்துருக்கலாமுள்ள.  கடைசியில நீயும் இங்க வந்து மாட்டிக்கிட்டியே,” என்றான் பிரித்வி.  “ஏன் மாப்ளே இங்க இந்த வேலையில என்ன குறை,” அப்பாவியாக கேட்டான் ராசு.  “நாம பூமியில ஓட்டிட்டு இருந்த அதே தண்ணி வண்டிதான் இது.  ஆனா, அங்கேயாவது வாரத்துக்கு ஒரு நாளாவது லீவு கெடைக்கும்.  இங்க அது கூட கெடையாது.  அதுவுமில்லாம திரும்ப பூமிக்குப் போகவும் முடியாது.  பணமும், அதிகாரமும் இருக்குறவனுக்கு நாம உயிரோட இருக்குற வரைக்கும் தண்ணி வண்டி ஓட்ட வேண்டியதுதான். என்னைய மாதிரியே நீயும் எமாந்துட்டியே மாப்ளே”, பிரித்வி சொன்னதைக் கேட்டதும், செவ்வாய் கிரக வாழ்க்கை சொர்க்கம் என்ற அவனுடைய கற்பனையில் விழுந்த அடியும், கசக்கின்ற நிஜமும் ஒரு கணம் மூச்சை நிறுத்தியது.

No comments:

Post a Comment