Sunday 9 July 2023

Sirf Ek Bandaa Kaafi Hai

 கைய, கால வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுதா?  இந்த IMDB ரேட்டிங்கை அப்பப்ப போயி பாக்குறது வழக்கமா போச்சு.  அப்படித்தான் இன்னிக்கு போயி பாத்தா இந்த தலைப்புல இருக்கே, Sirf Ek Bandaa Kaafi Hai, இந்தப் படத்துக்கு 7.9 ரேட்டிங் குடுத்துருக்காங்க.  சரி என்னதான் இருக்குன்னு லிங்க் தேடிப் புடிச்சு ஒரு வழியா பாத்துட்டேன்.  உண்மையிலேயே நல்ல படம்தான்.  பேசிருக்குற கதையும் நல்லாத்தான் இருந்துச்சு.  ஆனா, நம்ப முடியாத, நம்ம இந்தியாவுல நடக்க முடியாத ஒரு முடிவை சொல்லியிருக்கு.  

கதை என்னன்னா, ஒரு அதிகாரம் மற்றும் பண பலம் உள்ள ஒரு சாமியார்.  எல்லா பணக்கார சாமியாரும் செய்யிற மாதிரி பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் இப்படியெல்லாம் நடத்துறார்; அடுத்த பிறவி இல்லாத மார்க்கத்துக்கு, சொர்க்கத்துக்கு போறதுக்கு வழி சொல்லி பிரசங்கம் எல்லாம் நடத்துறார்.  எல்லா நல்லதும் நடத்திக்கிட்டே, நாம பாத்த, கேள்விப்பட்ட எல்லா சாமியார் மாதிரியே எல்லா உள் லீலைகளும் நடத்துறார்.  என்ன ஒரு வித்தியாசம்னா நித்தியானந்தா மாதிரி வீடியோ வெளியாகல்லை.  ஆனா, இவர் ஒரு மைனர் பொண்ணுகிட்ட அப்படி நடந்துக்கிறார்.  அந்தப் பொண்ணு தைரியமா காவல் நிலையம் போயிருச்சு;  விஷயம் கோர்ட் படி ஏறிருச்சு.  இவருதான், அதிகாரத்தை சட்டை பையில் வச்சுருக்காரே;  விலைக்கு வாங்க முடியிறவங்களை வாங்குறார்; வாங்க முடியாதவங்களை கொல்றார்.   ஆனா, நம்ம நாயகன் கடைசி வரைக்கும் போராடி, அஞ்சு வருஷம் வழக்கை நடத்தி (நாயகன் ஒரு வழக்குரைஞர்) அந்த சாமியாருக்கு தண்டனை வாங்கி கொடுத்துடுறாரு.

பொதுவா இந்த மாதிரி கதையில வர்ற நாயகன், கடவுள் நம்பிக்கையோ அல்லது மதம் குறித்த பற்றோ இல்லாத ஒரு மனிதனாதான் சித்தரித்திருப்பார்கள்.  ஆனா, இந்த கதையோட நாயகனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு.  ஆனா, அந்த கடவுள் நம்பிக்கைக்காக ஒரு சாமியாரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதோ அல்லது அவரது தவறை மூடி மறைக்க முயல்வதோ இல்லாமல், ஒரு நடுநிலைவாதியாய் காட்டிருக்காங்க. ஒரு வேளை, இந்த மாதிரி மனநிலை பெரும்பாலான நபர்களுக்கு இருந்திருந்தால், அதாவது கடவுள் நம்பிக்கை மற்றும் மதப்பற்று இருப்பதற்கும், அந்த நம்பிக்கை மற்றும் பற்றை அரசியலாய் ஆக்குவதற்கும், உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருந்தால் மாபெரும் தவறுகள், அவலங்கள் இந்தியாவில் நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கும் அப்படின்னு தோணுது.  

இதுல என்னடா நம்ப முடியாத விஷயம் இருக்குன்னு கேட்டா, இந்தியாவுல இவ்வளவு அதிகார மற்றும் பண பலம் உள்ள ஒரு சாமியாரை உள்ள தள்ளுறதெல்லாம் கனவுலையும் நெனச்சுப் பாக்க முடியாத ஒரு கற்பனை.  அந்த படத்தோட இயக்குனர் ஒருவேளை நிஜத்தில் நடக்க முடியாததை திரையிலாவது நடத்தி பாக்கலாம்னு ஆசைப்பட்டிருப்பாரு போல.  

கொஞ்ச நாளா எனக்கொரு பயம்.  கூடிய சீக்கிரம் நான் ஒரு மனநல மருத்துவரை பாக்கணும்னு நெனைக்கிறேன்.  ஒரு சிலர், ஒரு சில நேரங்களில் பேசுறது எனக்கு வேற மாதிரியே கேக்குது.  அப்படித்தான் இந்த திரைப்படத்துல அந்த சாமியாரை எல்லாரும் குருஜி, குருஜின்னு சொல்லுறாங்க.  ஆனா, எனக்கு வேற மாதிரி கேக்குது.  (சில விஷயத்தை அப்படியே வெளிய சொல்ல முடியாதுல்ல. அதான்..........)


1 comment:

  1. நல்லதொரு திரைப்ப விமர்சனம். திறந்த மனதுடன் எழுதப்பட்டுள்ளது. திரைப்படம் போன்ற படைப்பிலக்கியத்தில் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்க வேண்டும். இலக்கிய அறம் என்பது அதுதானே. அநீதியை வென்று நீதியை நிலைநாட்டுவதே நல்ல படைப்பிலக்கியத்தின் அடையாளமாகும். அந்த வகையில் இதுவொரு வெற்றிப் படமாகவே இருக்க வேண்டும். நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உறுதியாகப் பார்ப்பேன். அதுசரி படத்தில் பங்கேற்ற கலைஞர்களின் பங்கு குறித்து ஒன்றும் சொல்லவில்லையே? படத்தின் பெயரையும் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கலாம். தொடர்ந்து திரை விமர்சனம் எழுதுங்கள் நகரத்தான் அவர்கள்!

    ReplyDelete