Saturday 22 July 2023

பேய்கள் அரசாண்டால் - பிணம் தின்னும் சாத்திரங்கள்.

 அவன் பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டான் அந்த முண்டாசுக் கவிஞன்.  அப்படியேவா நடக்கணும்.  எல்லாத்தையும் அரசியலாக்கிப் பார்த்தால் என்னாகும் என்பதற்கு மணிப்பூர் ஒரு சாட்சி.  ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் எப்படியோ மூடி (மோடி) மறைத்துவிட்டார்கள்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்துவிட்டார்கள்.  இப்போது வீடியோ வெளியானவுடன் பதறிக் கொண்டு இரு மாதங்களுக்கு முன் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.  அதுவும் ஒரு சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுதான் வேதனை; இந்தக் கொடுமையை நிறைவேற்றியவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிய நிலையில் வெறும் மூன்று அல்லது நான்கு பேர் மீது மட்டும் நடவடிக்கை என்பது யாரையோ காப்பாற்றும் செயலாகத்  தோன்றுகிறது.  அதுவும் அந்த கலவரக்காரர்களிடம் தங்களை ஒப்படைத்தது காவல்துறையினர்தான்  என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதைப் பார்த்தால் இது இன்னொரு குஜராத் கலவரம் என்று சந்தேகம் எழுகிறது.  

முதலில் இந்த மணிப்பூர் கலவரத்துக்கு இவர்கள் (அதிகார வர்க்கம்) கூறும் காரணமே இட்டுக்கட்டிய கதை என்று சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து.  மைட்டி மற்றும் குக்கி இனத்தவருக்கிடையிலான இனக்கலவரம் என்பதே ஒரு கட்டுக் கதை எனப்படுகிறது.  பழங்குடியினத்தவரான குக்கி மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கிறித்தவம் சார்ந்தவர்கள் என்பதும், மைட்டி இனத்தவர் அங்கு ஆளும் அரசால் தூண்டிவிடப்பட்டு இந்தக் கலவரத்தை நடத்தியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. இப்படித்தான் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு, காவல்துறையின் கைகளை கட்டிப் போட்டனர்.   அதே போன்ற ஒரு நாடகம்தான் மணிப்பூரிலும் அரங்கேறியிருக்கிறது.  

இந்தக் கொடுமை வெளி வந்துவிடக்கூடாது என்றுதான் இணைய சேவை அங்கு முடக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.  ஒன்று நிச்சயம்;  இந்தக் கொடுமையை செய்தவர்கள் மீது நடவடிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரியாது;  இந்த விடியோவை வெளியிட்டவர் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். 

நம்ம ஜி நேற்று திருவாய் திறந்து சொல்லிவிட்டார், அந்த குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று.  என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இந்த கொடுமை குறித்து மகளிர் ஆணையம் மூன்று கடிதங்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பியதாகவும், ஆனால் எந்தவித பதிலும் மாநில நிர்வாகம் அளிக்கவில்லை என்றும் மகளிர் ஆணையத்தின் தலைவர்(வி) கூறியிருக்கிறார்.  அதாவது, மகளிர் ஆணையத்துக்கு முன்னரே தெரிந்த விஷயம்  நம்ம ஜிக்கு நேற்றுதான் தெரிந்திருக்கிறது; அல்லது முன்னரே தெரிந்திருந்தாலும் அதை மூடி மறைத்திருக்கிறார்.  என்னே  ஒரு சாணக்கியத்தனம்.

எடுத்ததற்கெல்லாம் காங்கிரஸை குறை சொல்லியே - அதுவும் நேருவிலிருந்து ஆரம்பித்து - தன்னுடைய/அரசுடைய தவறுகளுக்கு/கையாலாகாத்தனத்திற்கு சப்பைக் கட்டு கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் இந்த முறை யாரை நோக்கிக்  கை நீட்டப்போகிறார்கள்?  2014-ல் 33 லட்சம் கோடியாக இருந்ததாம் இந்திய அரசின் கடன்;  ஒன்பது ஆண்டுகளில் 133 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாம்.  100 லட்சம் கோடி கடன் எதற்காக வாங்கப்பட்டது?  அதில் எத்தனை லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடியில் அதானிக்கும், அம்பானிக்கும்   கொட்டிக் கொடுக்கப்பட்டது?  The right man in the wrong party என்று வாஜ்பாய் குறித்து சொல்வார்கள்.  அந்த Right Man ஆட்சியில்தான் உளவுத்துறை குளறுபடியால் கார்கில் போர் மூண்டது;  அந்தப் போரில்  உயிர் நீத்த வீரர்களுக்கு வாங்கப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல் நடந்தது என்பதை மறந்து விடக்கூடாது. மொத்தத்தில் பிணம் தின்னுதல் இவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை.

ரோமாபுரி பற்றி எறிந்த பொது நீரோ பிடில் வாசித்தான் என்று ஒரு சொல்லாடல் ஒன்று உண்டு; அதற்கு ஆதாரம் இல்லை என்றும், ஏனென்றால் நீரோ காலத்தில் பிடில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றொரு வாதம் உண்டு.  ஆனால், நம்ம ஜியிடம் சொந்தமாக விமானம் இருக்கிறது; அதனால்தான் மணிப்பூர் பற்றி எரியும்போது அவர் உல்லாசப்பயணம் போகிறார்.


1 comment:

  1. சங்கிகளுக்கு மார்க்ஸ், மஸ்ஜித், மெக்காலே மீது வெறுப்பு. அதாவது கம்யூனிஸ்ட்டுகள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகாது. வெறுப்பு அரசியலை நடத்துபவர்கள். இவர்களிடம் அன்பை,பண்பை, கருணையை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் விரக்தி வேண்டாம். இவர்களுக்கும் முடிவு உண்டு.

    ReplyDelete