Sunday 6 May 2018

பகாசுரன்

பசி பசின்னு பகாசுரன் அலைந்து கொண்டிருக்கிறான்.  நிஜமாகவே  அரக்கர்கள் இருந்தார்களான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு.  ஆனால்-

இது ஒரு சந்தேகமா, நன்றாக என்னை உற்றுப் பார்; நான் தான் அந்த பகாசுரன்.  எனக்கு முடி சூடியவன்  நீதான்.  உன்னைக் கொன்று தின்ன எனக்கு அதிகாரங்கள் உன்னால் தான் வழங்கப்பட்டது.  எந்தக் காரணம் கொண்டும் நீ ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து விடக் கூடாது என்பது மட்டுமே என்னுடைய ஒரே நோக்கம்.  நித்தமும் உன்னை அலைக்கழிக்கவும், உன் உயிரை உறிஞ்சி எடுக்கவும் அங்கீகரித்து நீதான் எனக்கு வோட்டளித்தாய்.  அதிகாரக் கட்டிலில் அமர்த்தினாய்.

காவேரி என்றாய், நீர் கொடு என்றாய்; நான் நினைத்தால் நிச்சயம் கொடுக்க முடியும்.   மாறாய் ஏன் கொடுக்க வேண்டும் என்று தான் நான் கேட்கிறேன்.  நீர் கொடுத்தால் நீ விவசாயம் செய்வாய்; உன் நெற்களஞ்சியம் விளைந்து தலை நிமிர்ந்து நிற்கும். நான் எப்படி மீதேன் என்றும், ஹைட்ரோகார்பன் என்றும் உன் நிலத்தை பாழ்படுத்த முடியும்.  உன் குடி கெடுத்தால்தான், என் நோக்கம் நிறைவேறும்.  இதில் ஒரு ஆயிரம் விவசாயி மரித்தால், எனக்கு சிறிதேனும் பசியாறும்.  ஆனால், நாந்தான் பகாசுரன் ஆயிற்றே;  என் பசி முழுமையாய் ஆறி விடாது.  

உன் மாநிலத்தில்தான் அதிகமாய் மருத்துவ படிப்பிடங்கள் இருக்கிறது.  அதையும் விற்று தின்றால்தான், இன்னும் சிறிது பசியாறும்.  நீட் என்றேன்;  ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்தேன்.  அனிதாவின் மரணமும் என் பசியை ஆற்றிவிடவில்லை.  அதையும் மீறி நீ தேர்வுக்கு தயாரானாய்;  வேறு வழியில்லை.  உனக்கு அறிமுகமில்லாத இடத்தில் தேர்வு எழுத பணித்தேன்.  துணை வந்த தகப்பன் மரித்தான் என்ற செய்தி அறிந்தேன்;  அதற்கும் என் வயிற்றின் ஒரு ஓரம் இடமிருக்கிறது.  

நல்லா கேட்டுக்குங்க தமிழக மக்களே.  இந்த பகாசுரனின் முழக்கம் கேட்குதா;  அவன்தான் தெளிவா சத்தமாதானே சொல்லுறான்.  இவன் நீட்டுன்னு ஒரு தேர்வு வைக்கனும்னு சொன்னான்; எதுக்குன்னா நீ கடைபிடிக்கிற தேர்வு முறை தரமா இல்லைன்னு சொன்னான்.  நேத்துதான் தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி தமிழ் நாட்டு மருத்துவர்கள் தலை சிறந்தவர்கள் அப்படின்னு பேசியிருக்காரு.  இதுல யாரு பொய் சொல்லுறாங்கன்னு தெரியல.  நாம கடைபிடிச்சுட்டிருந்த தேர்வு முறையில்தான் இது வரைக்கும் மருத்துவர்கள் தமிழ் நாட்டுல படிச்சுட்டு இருந்தாங்க - தமிழிசை உட்பட.  

1 comment:

  1. இவன் பசி எப்பதான் தீரும்?

    ReplyDelete