Thursday 18 November 2021

ஆஞ்ஞான்

 எங்க ஆஞ்ஞான் கடைசி மூச்சு காத்துல கலந்து இன்னியோட அஞ்சு நாளாச்சு.  மனுச மனசுக்கு தெரியுதா; சாயந்திரம் நாலு மணியானா கையி அலைபேசி எடுத்து பிசைய ஆரம்பிக்கிது - ஆஞ்ஞானோட பேச.  ஈமக்கிரியைக்கு கெடத்தியிருந்த  ஆஞ்ஞான் உருவம் மனசவிட்டுப் போக மாட்டேங்கிது.  அப்படியே எந்திரிச்சு உக்காந்திரமாட்டாகளான்னு அப்ப துடிச்ச மனசு இன்னும் அப்படியே  துடிக்கிது.   

கனவு காணுறது வெற்றிக்கான முதல் படின்னு சொன்னாரு கலாம்;  ஆனா நான் இப்ப காணுற கனவுலயெல்லாம் ஆஞ்ஞான்தான் இருக்காக;  அவுக நெனப்பு மூச்ச முட்டும்போதெல்லாம், ஒவ்வொரு நொடியவும் முழுங்க முடியாம தவிக்கிறேன்.  

மனசும், கனவும்தான் ஆஞ்ஞானை சுத்திக்கிட்டு இருக்குது;  உடம்போ  எட்டாத தூரத்துல இருக்கு.  

கால எந்திரம் கண்டுபிடிச்சவுக யாராவது இருந்தா சொல்லுங்க;  நான் பொறந்தப்ப எங்க ஆஞ்ஞான் எப்படியெல்லாம் என்னை கொஞ்சியிருப்பாகன்னு பாக்கணும்.  எங்கள ஆளாக்க அவுக எம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சாகன்னு பாக்கணும். 

ஆறுதல் சொல்ல ஆயிரம் பேரு  இருந்தாலும் அவுக இல்லைங்கிற காயம் ஆற எவ்ளோ நாளாகும்னு தெரியல;  காலம்கிற மருத்துவன்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டேன்.  வேறென்ன சொல்றதுன்னு தெரியல.  ஆறுதல் சொன்னவுகளுக்கும், அவசர நேரத்துல உதவி பண்ணவுங்களுக்கும் நன்றி.

(ஆஞ்ஞான் என்ற சொல் தந்தையை விளிக்கும், ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கும் முன்னால் வரை வழக்கத்திலிருந்த ஒரு தமிழ் சொல்)  

No comments:

Post a Comment