நிறைய முறை நாம சொல்லி இருந்தாலும், திரும்ப சொல்றதுல எந்த தப்பும் இல்லை. மனம் ஒரு குரங்குன்னு பாடியவர் நிச்சயமா உணர்ந்துதான் பாடி இருக்கிறார். ஒரு இடத்துல அல்லது விஷயத்துல நில்லாம ஓடிக்கிட்டே இருக்கிறது இந்த மனம்.
மனம் பத்தி பேசும் போது, மணம் நினைவுக்கு வருது. சமீபத்துல என் மகள் திருமணம் சுற்றத்தார் ஆசியும், இறைவனின் அருளும் கூடி நடந்தது. ஒரு தகப்பனா மனம் இளகிய நேரம் அது. திருமணம் முடிந்ததும், நண்பர் கூட்டம் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல், திருமணத்தை நான் சிறப்பாய் நடத்தி விட்டதாய் பாராட்டினார்கள். அந்த நண்பர்கள் உதவி தான் திருமணம் நடந்தேறியது என்பதே உண்மை. நிச்சமாய் நான் நல்ல நண்பர்கள் சூழ இருக்கின்றேன் என்ற எண்ணமே ஒரு நிம்மதி உணர்வை தருகிறது.
கல்யாணத்திற்கு முதல் நாள், திருமண மேடை உள்ளிட்ட அலங்காரங்கள் முடிந்து எல்லோரும் போன பின்பு, நானும் திரு. நடராஜனும் உட்கார்ந்து திருமண நடைமுறைகள், சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் (திரு. நடராஜன் கொங்கு சமூகம் சார்ந்தவர்; அங்கு இந்த சம்பிரதாயங்களை சாங்கியம் என்று கூறுவார்கள்) குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் இடையில் எனக்கு ஏனோ ரத்னா பெரியம்மா ஞாபகம் வந்தது. அவரிடம் அது குறித்து அப்போது பேசவில்லை என்றாலும், இப்போது இந்த கிறிஸ்துமஸ் விடுப்பில் நம்ம Blog ல் கிறுக்கி ரொம்ப நாள் ஆகிவிட்டதால் அது குறித்து கிறுக்கலாம் என்று தோன்றியது.
ஏனோ தெரியவில்லை, ரத்னா பெரியம்மா ஞாபகம் வருகிறது. ரத்னா பெரியம்மா பற்றி பேச வேண்டுமென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி முதலில் சொல்ல வேண்டும். என் அம்மாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சொந்த ஊர். நான் பிறந்தது அங்கேதான். என் அம்மாச்சி வீடு இருக்கும் கீழப்புதுத் தெரு முழுதும் எங்கள் சொந்தங்கள்தான். அது மட்டுமல்ல; கீழத்தெரு, பிள்ளைமார் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு இப்படி ஒரு ஏழெட்டு தெருக்கள் முழுக்க பிள்ளைமார் மட்டுமே. அநேகமாக அனைவருமே ஒருவருக்கொருவர் சொந்தம் தான். எங்கள் அம்மாச்சி வீட்டுக்கு எதிர் வரிசையில் என் அத்தை வீடு; என் அப்பாவுக்கு அக்கா வீடு. இதனால், எங்களின் பள்ளி விடுமுறைகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே கழிந்தது. எங்கள் அத்தை வீட்டிலிருந்து அநேகமாக ஒரு பத்து வீடு தள்ளிதான் ரத்னா பெரியம்மா வீடு. அவர் எனக்கு எந்த முறையில் பெரியம்மா என்றெல்லாம் எனக்கு தெரியாது; என் அம்மாவுக்கு அக்கா முறை என்பதால் எனக்கு பெரியம்மா, அவ்வளவுதான்.
தூரத்து சொந்தமானாலும், விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போதெல்லம் பெரியம்மா பாசமாய் பேசுவார். அவர் மட்டுமல்ல, அந்த வீட்டில் செல்லா அக்காவும் கூட பாசமாய் இருப்பார். அவர்கள் வீட்டிலிருந்து நாலாவது வீடு பெரியம்மா பிறந்த வீடு. பெரியம்மாவின் அப்பா, அம்மா காலத்திற்கு அப்புறம் பெரியம்மாவின் அண்ணன் வீடு. எல்லோரிடமும் பாசம் காட்டும் ஒரு அற்புதப் பிறவி பெரியம்மா. அண்ணன் மற்றும் அண்ணியிடம் அவ்வளவு அன்பு மற்றும் உரிமை கொண்டாடுவார். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது, "வரிசையாரு என்ன சமையல்; அண்ணன் சாப்பிட்டாச்சா; வயலுக்கு போயிட்டாகளா," என்று ஏதாவது ஒரு கேள்வியுடன் அண்ணன் வீட்டிற்கு போய் வருவார் பெரியம்மா. (எங்கள் இனத்தில் அண்ணியை வரிசையார் என்றுதான் அழைப்பார்கள்)
எல்லாமும் நன்றாய் போய்க் கொண்டிருந்த நிலையில், பெரியம்மா அவர்கள் அண்ணன் வீட்டிற்குப் போவதை அறவே நிறுத்தும் ஒரு காலம் வந்தது. காரணம் மிகவும் விசித்திரமானது.
பெரியம்மா பெண் செல்லா அக்காவுக்கும், பெரியம்மா அண்ணன் மகனுக்கும் திருமணம் பேசி முடித்தார்கள். வழமைப்படி பெண் வீட்டில்தான் திருமணம்; மாப்பிள்ளை வீட்டார் என்றோ, அல்லது பெண் வீட்டார் என்றோ எந்த வித்தியாசமும் இன்றி எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றாய் நின்று திருமணத்தை சிறப்பாய் நடத்தினார்கள். திருமணம் முடிந்து மணமகள் புகுந்த வீட்டிற்கு போகும் நிகழ்வுக்கு, பெண்ணின் பெற்றோர் உடன் போகும் வழக்கம் கிடையாது என்பதால், செல்லா அக்காவின் சித்தப்பா, சின்னம்மா உடன் சென்றார்கள். அதன் பிறகு மறுவீடு அழைக்க ஒரு முறை ரத்னா பெரியம்மாவும், பெரியப்பாவும் அவர்கள் வீடு சென்றது மட்டுமே நடந்தது. மறுநாளிலிருந்து அண்ணன் வீட்டிற்கு செல்லும் வழக்கத்தை பெரியம்மா அறவே நிறுத்தி விட்டார்கள். அக்கம் பக்கத்தார் ஏன் என்று கேட்டதற்கு பெரியம்மா சொன்ன பதில் தான் விசித்திரம்.
"நான் அண்ணன் வீட்டுக்கு சும்மா போனாலும், என் பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்குத்தான் நான் வந்ததாக எங்க அண்ணனும், வரிசையாரும் நினைத்து விடக் கூடாது. அது மட்டுமல்ல, செல்லாவையும் அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடாது; அப்படி வர வேண்டி இருந்தாலும், மாமா அல்லது அத்தையிடம் சொல்லிவிட்டுத்தான் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்."
No comments:
Post a Comment