இன்றைய தேதிக்கு செய்திகளில் அதிகமாக அடிபடும் இடம் சபரி மலை. கட்டுக்கடங்காத பக்தர் கூட்டமும், திணறும் அரசின் கையறு நிலையும் விவாதப் பொருளாக இருக்கிறது. தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள் என்ற செய்தி மலைப்பை தருகிறது. அதனால்தான், இதற்க்கு அறிந்தும், அறியாமலும், என்று தலைப்பிட தோன்றியது. ஐயப்ப வழிபாட்டின் இறுதியில் இந்த அறிந்தும், அறியாமலும் என்று நடந்த தவறுகளுக்கு மன்னிப்பை கோரும் வழிபாடும் இடம் பெறும். ஆனால், அந்த ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் முன் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களுக்கு காரணம் என்ன, அவை சரியான முறையில் பின்பற்ற வேண்டிய தேவை என்ன என்பதெல்லாம் தெரியாமலே நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதிலொரு சம்பிரதாயத்தைப் பற்றிதான் இதில் பார்க்கப் போகிறோம்.
ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் என்ற செய்தி மிகப் பெரிய மலைப்பை தருகிறது; எனக்குத் தெரிந்து நான் முதன் முதல் சபரி மலை சென்ற போது (சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்) ஆண்டு முழுவதும் கூட ஐந்து முதல் ஆறு லட்சம் பக்தர்கள் வருவார்கள். அப்போதெல்லாம், நாம் கொண்டு செல்லும் அபிஷேக நெய், நாமே சன்னிதானத்தில் அபிஷேகத்திற்கு கொடுத்து, அந்த அபிஷேகத்தை நாமே கண்டு களிக்கலாம். அதன் பிறகு அந்த நெய்யில் ஒரு பகுதி நமக்கே பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் நாம் கொண்டு செல்லும் நெய் அங்கிருக்கும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பின்னர் நமக்கு தேவையான பிரசாத நெய் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
நான் பிரிஸ்பேன்/ஆஸ்திரேலியா வந்த புதிதில் ஜெகதீஷ் அண்ணன் சபரி மலை சென்றார். அப்போது இருமுடி கட்டும் பூஜைக்கும் அழைத்திருந்தார். அப்போது நெய் அடைக்க வேண்டிய தேங்காய் கண் திறக்கப்பட்டு, இளநீர் முழுதும் வடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், தேங்காயின் வெளிப்புறம் நார், மற்றும் தூசு அப்படியே இருந்தது. இருமுடி கட்டித் தர வந்திருந்த பெரியவர் அதனை சுட்டிக் காட்டி, அந்த தேங்காய் வெளிப்புறம் முழுவதுமாய் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அல்லாது அது ஒரு பெரும் தெய்வ குற்றம் என்றும் சுட்டிக் காட்டினார். எனக்கு அதன் காரணம் (தேங்காயின் வெளிப்புறம் சுத்தம் செய்ய வேண்டிய காரணம்) தெரியுமாதலால், நெய் அடைத்த பின்பு கூட அதை சுத்தம் செய்து கொள்ளலாம், அதில் தவறில்லை என்று கூறினேன்.
நெய் அடைக்கும் தேங்காயின் வெளிப்புறம் மிகவும் சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாம் சன்னிதானம் சென்று தேங்காய் உடைத்து நெய்யை வெளி எடுக்கும் போது, அந்த நார் அல்லது தூசு நெய்யுடன் கலந்து விட வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகத்தான் தேங்காயை சுரண்டி சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதைத் தவிர்த்து அதில் தெய்வ குற்றத்திற்கான காரணம் ஏதுமில்லை என்று எடுத்துக் கூறிய பின்பு, நெய் அடைத்து முடித்த பின்பு தேங்காயின் வெளிப்புறத்தை சுத்தம் செய்து இருமுடியில் காட்டினார்.
இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே; இதே போல் பல்வேறு நடைமுறைகளும் இன்றும் காரணம் தெரியாமல், சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் என்ற பெயராலும் தெய்வ குற்றம் என்ற பெயராலும் அர்த்தமில்லாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு சில நடைமுறைகள், இன்றைய நம்முடைய வாழ்க்கை முறைக்கு தேவையில்லாத/ஒத்துவராத (காண்ட்ராக்டர் நேசமணி வார்த்தையில் கூறினால் தேவையில்லாத ஆணிகள்) சம்பிரதாயங்களையும் சுமந்து கொண்டிருக்கிறோம். அந்த தேவையில்லாத ஆணிகள் எவை என்று அடுத்த முறை பார்க்கலாம்.