Tuesday, 4 June 2024

"அத்தான், பாத்துக்கலாம் அத்தான் "

 இந்த நேர்மறை வார்த்தைகளை என்னிடம் இனி யார் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  யாரேனும் உதவி என்று கேட்டால், உன்னுடைய பாதம் எப்போதும் ஓரடி முன்னே இருக்கும்.  சில சமயம் நான் ஏதேனும் ஒரு வேலையை கடினமானதாக இருக்கும் என்று கணித்து உன்னிடம் ஆலோசனை கேட்டால் உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், "வாங்கத்தான் பாத்துக்கலாம்".

எவருக்கும் இருப்பது போல் உனக்கும் குறைகள் இருந்தன; உன் குறைகளை மட்டுமே சீர் தூக்கிப் பார்த்துப் பேசும் நாக்குகள் இருந்தன, இருக்கின்றன.  ஆனால் எனக்கு மட்டும் உன்னுடைய நிறைகள் மட்டுமே தெரிந்தன.  ஏன் என்று தெரியவில்லை; மைத்துனன் என்ற உறவையும் தாண்டி உனக்கும், எனக்குமான உறவுக்கு என்ன பெயர் வைப்பதென்று எனக்கு புரியவில்லை.  

இன்று நீ இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள இயலாத ஒவ்வொருவருக்கும் நான் ஆறுதல் வார்த்தைகளை பரிசளித்துக் கொண்டிருக்கிறேன்.  அழுவதால் பயனில்லை என்று அவர்களை தேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.  உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் எனக்கு என்னவோ என்னருகிலிருந்து நீ, "அத்தான், விடுங்க பாத்துக்கலாம் அத்தான்", என்று ஆறுதல் கூறுவது போல் கற்பனை உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்.  

அதெப்படி ஒரு மனிதனுக்கு இத்தனை தொடர்புகள் இருக்க முடியும்; அதெப்படி ஒரு மனிதனால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை வைத்துக் கொண்டிருக்க முடியும் என்றெல்லாம் நான் பார்த்து வியந்த மனிதர்கள் ஒரு சிலரே.  அந்த வியப்புக்குரிய மனிதர்களில் நீயும் ஒருவன். 

நீயில்லாத அந்த மதுரையை நான் இனி எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் சங்கர்.