Friday 5 October 2018

தொண்ணூத்தாறு - கிட்டத்தட்ட ஒரு விமரிசனம்?

என்னைய மாதிரி ஒரு சாமானியப் பய பார்வையில தோத்துப் போன காதல் கதைய சொல்லுறதுதான் தொண்ணூத்தாறு.  இணை சேர முடியாத எந்தக் காதலும் தோத்ததுதான் அப்பிடிங்கிற என்னைய மாதிரி அரைவேக்காட்டுக்கெல்லாம்,  பொடனியில ஒரு தட்டுத் தட்டி, இது வேற மாதிரி அப்பிடின்னு சொல்லிருக்காங்க.  சில பல  ஆண்டுக்குப் பிறகு சந்திக்கிற காதலர்களும், அவங்க சேர்ந்து கடத்துற ஒரு இரவும்தான் திரைப்படம்.

பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், ரெஸ்டாரன்ட், ஷாப்பிங் மால் அப்புடின்னு பலதரப்பட்ட எடத்துலயும் பால்ய கால  காதலன்/காதலிய பாக்குறதுக்கு, சந்திக்கிறதுக்கு நிறையப் பேருக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.  ஆனா, அது பெரும்பாலும் ஒரு மின்னல் வெட்டு மாதிரி கடந்து போயிரும்.  ஏன்னா, அன்றாட வாழ்க்கை நம்மள ஒடனே உள்ள இழுத்துரும்.  அந்த சந்திப்ப நினைக்கவோ, கடந்த காலத்த அசை போடவோ நமக்கு நேரமில்லாம போயிரும்.  விதி விலக்கா ஒண்ணு அல்லது ரெண்டு பேரு இருக்கலாம்.  அந்த விதிவிலக்கான திரைப்படங்களும் - அழகி, ஆட்டோகிராப் மாதிரி - மனக் கதவ  தட்டிட்டுப் போயிருக்கு.   மனக் கதவ தெறந்து, உள்ள வந்து உக்காந்து, கடந்த காலத்த கண்ணுக்குள்ள கொண்டாந்து நிறுத்தினது  இந்தத் திரைப்படத்தோட மாயஜாலம்.

அப்பிடி  இப்பிடி லேசா சறுக்கினாலும் விரசமா மாறிப்போற ஒரு திரைக்கதையில, ஒரு கம்பி மேல நடக்கிற வித்தைக்காரனோட  லாவகத்தோட காட்சிகள செதுக்கியிருக்காரு இயக்குனர். காதல் என்பது என்னன்னு இது வரைக்கும் தமிழ் திரைப்பட உலகம் வகுத்து வச்சிருந்த இலக்கணத்தை உடைச்சிருக்காரு. ரசிகனோட கையப் பிடிச்சு, கதைக்குள்ள கூட்டிட்டுப் போயி ஒரு நல்ல பயண அனுபவத்தைக் குடுத்துருக்காரு.   இசையும், ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் ஒரு நல்ல தரமான திரைப்பட ரசிப்புக்கு அனுகூலமா இருக்கு.

நடிகர்கள் தேர்வும், அவங்ககிட்ட தேவையான வெளிப்பாட்டக் கொண்டு வந்த விதமும் அருமை.  கதையோட நாயகன் விஜய் சேதுபதி பத்தி சொல்லணும்ன்னா, அவரு தன்னோட தரத்த எத்தனையோ திரைப்படங்கள்ல, வெவ்வேற கதாபத்திரங்கள்ல நிரூபிச்சவரு.  ஆனா, இந்த திரிஷா மாமிதான் மிகப் பெரிய ஆச்சரியம்;  அவங்களோட விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு ஒரு அசத்தலான நடிப்பாற்றல் வெளிப்பாடு.  இது போக மற்ற கதாபாத்திரங்களோட வடிவமைப்பும்,  அந்த கதாபாத்திரங்கள அவங்க உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்குற விதமும் - ஒவ்வொருத்தரப் பத்தியும் சொல்லனும்னா இந்தக் கட்டுரை (!) ரொம்ப நீளமாப் போயிரும்.

நம்ம சென்னை நெசம்ம்மாவே இவ்வளவு அழகா?   

No comments:

Post a Comment